அவர் எங்கள் உயிருக்கு மேல்

25/09/2012 at 2:47 pm (Uncategorized) ()

 

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவனைத்தான் மறைத்திடுமோ?
ஆணவக்காரர்கள் தூற்றி உரைத்தாலும்
அண்ணலின் புகழ்தான் குறைந்திடுமோ?

தாயினும் மேலாம் தலைவனை இகழ்ந்தால்
தகதகத்திடுமே எம் நெஞ்சு!
நாயினும் கேவலம் ஆனவன் கக்கிய
யூதக் கயவனின் விஷநஞ்சு!

உயிரினும் மேலாய் உவப்பை பொழியும்
உத்தமர் வாழ்வை பழித்தனரே!
ஒற்றுமைக் கயிற்றினை ஒன்றாய் பிடித்து
உம்மத்து யாவரும் எழுந்தனரே!

உத்தம நபியின் பற்களில் ஒன்று
உஹதுப் போரில் விழுந்ததுவே!
அத்தனைப் பல்லையும் தகர்த்திய தோழர்
உவைசில் கர்னியை மறவோமோ?

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
என்னும் பேரணி தொடருதடா!
பப்படமாகி நொறுங்கிடும் அந்த
பயங்கர திட்டம் நொடியிலடா!

பேரொளி இறைவனின் பிரிய நபிகளை
காணொளி ஒன்றா கறைபடுத்தும்?
தீனொளி இன்னும் உலகமெங்கிலும்
திக்குகளெங்கும் பரவி நிற்கும்!

யூதக்கயவனே! எழுந்த கனலினை
இதயத்தில் நிறுத்தி இதனைக் கேள்!
தூதர் முஹம்மதுக்கு களங்கம் சூழ்ந்தால்
துடிப்போம்! அவர் எங்கள் உயிருக்கு மேல்!

– கவிஞர் அப்துல் கையூம்

Permalink Leave a Comment

வித்வான் எஸ்.எம்.ஏ.காதிர்

23/08/2009 at 8:41 pm (இசைவாணர்கள், வித்வான் எஸ்.எம்.ஏ.காதிர்)

sma-kader

கடந்த 19.08.2009 ஆம் ஆண்டு புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு நாகூர் தர்கா உட்புறம் திறந்த வெளி அரங்கில் நாகூர் தர்கா ஆஸ்தான சங்கீத மகா வித்வான் உயர்திரு S.M.A. காதிர் அவர்கட்கு “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

25.08.1952 – ஆம் ஆண்டு நாகூர் தர்கா வித்வான் என்ற சிறப்புப் பதவி அளிக்கப் பெற்ற இவரை 57 வருடங்கள் கழித்து இதே மாதத்தில் இம்மாமனிதனின் மணிமகுடத்திற்கு மேலும் ஒரு சிறகினைச் சொருகி அழகு பார்த்திருக்கிறது நாகூர் தமிழ்ச்சங்கம்.

வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை என்று உணர்த்தியிருக்கிறது நாகூர் தமிழ்ச் சங்கம். பிறந்து இரண்டரை வயதான தத்தித் தவழுகின்ற இந்த குழந்தை 86 வயதான இந்த சங்கீத சாம்ராட்டினை வாழ்த்தியிருப்பது நமக்ககெல்லாம் பெருமை. 

ஆங்கிலத்தில் “Better Late than Never” என்பார்கள். இந்த பாராட்டு தாமதமாக வந்தடைந்தாலும் தகுந்த நேரத்தில் கிடைத்திருப்பது நமக்கு மட்டிலா மகிழ்ச்சி.
யான் வாசித்தளித்த கவிதை இது :

“சுவைப்போர்” நிறைந்த ஊர்
இந்த ஊர் – என் சொந்த ஊர்
ருசியைச் சுவைப்போரும்
இசையைச் சுவைப்போரும்
வசிப்போர் இந்த ஊர்

“வாரரோ வாராரோ
ஞானக்கிளியே”
என்று பாடிய
கானக்குயிலுக்கு
வாழ்த்துப்பா பாட
[பாப் (Pop) ஆட அல்ல]
வாய்த்தமைக்கு
வல்லோனை வணங்குகிறேன் !

சரீரம் தளர்ந்தாலும்
சாரீரம் தளராத
வீரியமிக்க
ஆரிய வாசம் வீசும்
ஸ்வரம் இவர் வசம்  – இது
இறைவன் கொடுத்த வரம் !

மரபிசைக்கு ஒரு ICON
இந்த மேதகு மரைக்கான்

இவருக்கு சங்கீதமும் தெரியும்
இங்கிதமும் தெரியும்

பாடிப் பாடியே
பாடி இப்படியே
(இப்போது தான் Body இப்படி!)
பணக்காரன் ஆனவர் இவர் !!

ஆம் .. .. ஒருகாலத்தில்
பெரும் பணக்காரனாய் இருந்து .. ..
பாடிப்பாடியே
பணக்காரன் ஆனவர் !!!

இவருக்கிருந்த செல்வத்தில்
மாளிகைகள் கட்டி இருக்கலாம்
ஆனால் ..
மாளிகைகள் ஒருநாளில்
மண்ணோடு மண்ணாக இடிந்து விடும்.

இவரிழைத்த
– ராகமாலிகை
– தாளமாலிகை
என்றென்றும்
எங்கள் காதுகளில்
தேனாய் இனிக்கும்.

பணக்கட்டுகளை காட்டிலும்
தாளக்கட்டுகளை கூடுதலாய் நேசித்தவர் – வீட்டின்
நடுக்கட்டில் இவர் பாடல்
களைகட்டும்

இவருக்கு இன்னும்
எத்தனையோ கோடிகள்
இறுக்கமாய் உண்டு
உண்மைதான் .. ..
சிஷ்ய-கோடிகள் பலவுண்டு

பாட்டென்றாலே
பலபேர் கத்துவான் – இந்த
பாட்டுடைத் தலைவன்
எல்லோருக்கும் வித்துவான்

இவருக்கு மணியான சீடர்கள்
many many – அதில்
தலையாய சீடர்தான்
இந்த “இசைமணி”

இவர் மட்டும்
ஐயர்வாளாய் இருந்திருந்தால்
இந்நேரம்
ஐநா வரை இவர் குரல்
எட்டியிருக்கும்

நாகூரில் பிறந்ததினால்
நாற்சுவரில் இவர் புகழ்
அடங்கிப் போனதோ?

திருட்டுத் தொழில்
இவர் தொழில்.
எத்தனை உள்ளங்களை
இவர் குரல் இதுவரை
கொள்ளை கொண்டிருக்கும்???

இவர் கலப்படக்காரர் ..
செய்ததோ முறையான கலப்படம்
கலப்படத்தில் அதுவென்ன
முறையான கலப்படம்?

இந்துஸ்தானியையும்
கர்னாடகத்தையும்
கலப்படம் செய்தது
நிருபணம்

– பாகேசீரி (நமக்கு ரவாகேசரிதான் தெரியும்(
– மால்கோஸ் (நமக்கு தெரிந்தது வெறும் முட்டைகோஸ்)
– மோகனம்
– சஹானா
– சுபபந்துவராளி
இவையனைத்தையும்
ஒன்றாக இணைத்து
பாடவல்ல வல்லமை
இவருக்குள்ள பெருமை

தர்பாரில்
கானடா ராகம்
இசைப்பவர் இவர்.
ஆம் ..
நாகூரார் தர்பாரில் !

தலைக்கனமில்லா இவருக்கு
ஆரோகணம் முதல்
அவரோகணம் வரை
அத்தனையும் அத்துப்படி

இவர் தொடாத ராகமில்லை .. ..
இவர் பாடாத புலவர்களில்லை ..

– உமறுப் புலவர்
– காசீம் புலவர்
– காலகவிப் புலவர்
– வண்ணக் களஞ்சியப் புலவர்
– ஆரிபு நாவலர்
– ஆபிதீன் புலவர்
– பண்டிட் உசைன்
– குணங்குடி மஸ்தான்
– கலைமாமணி சலீம்

ஆம் ..
இவர் தொடாத ராகமில்லை .. ..
இவர் பாடாத புலவர்களில்லை ..

– கும்மிப்பாட்டு
– குறவைப் பாட்டு
– ஞானப் பாட்டு- சாஸ்திரிய
கானங்கள் பாடியது பலநூறு
இவரை இவ்வூர் பெற்றது
நாம் செய்த பெரும்பேறு

தாளம் அறிந்த இவரை
ஞாலம் கண்டு கொள்ளாதது
காலத்தின் கோலம்

“சேதுசாரா” என்ற
ஆதிதாள உருப்படி – இவரை
உயரே கொண்டு சென்றது ஒருபடி

கிட்டப்பா பயின்ற
தாவுது மியான்
இந்த காதருக்கு
குருநாதர்

சென்னை சபாக்களில்
டிசம்பர் மாதமென்றாலே
சங்கீதம் களைகட்டும்
ஏன் தெரியுமா?
எங்கள் பாகவதர்
பிறந்த மாதம் அது.

சமய நல்லிணக்கத்திற்கு
இமயம்
இச்சங்கீதச் சிகரம்.
சமாதானத் தூதர்
இந்த காதர்

இவரை அழைப்பது
பவுனு வீட்டுத் தம்பி.
பவுனு பவுனுதான் !!

ஏழிசை கற்ற இவரை
வாழிய வாழியவென
வாயார வாழ்த்துகிறேன்

–  அன்புடன் அப்துல் கையூம்

நான்

Permalink Leave a Comment

குட்டி இளவரசியின் அறிதல்கள்

22/04/2009 at 7:44 pm (மனுஷ்ய புத்திரன்)

manushya

மனுஷ்ய புத்திரன் எனும் பெயரில் அற்புதமாக எழுதி வரும் அப்துல் ஹமீதின் கவிதை ஒன்று சாம்பிளுக்கு:

காலம் என்கிறீர்கள்
அகாலம் என்கிறீர்கள்
காலத்தை வெல்வதென்றும்
காலத்தைக் கடப்பதென்றும்
பயங்கரக் கதைகள் சொல்கிறீர்கள்
குட்டி இளவரசி சஹானா
நாளைக்கு மழை பெய்தது ‘
என்கிறாள் அமைதியாக

– கவிஞர் மனுஷ்ய புத்திரன் (இடமும் இருப்பும் என்ற கவிதைத் தொகுதியிலிருந்து)

Permalink 1 Comment

தமிழகத்தில் முஸ்லீம்கள்

10/04/2009 at 9:24 pm (முத்தமிழ் வளர்ச்சியில்)

அகிலத்திற்கோர் அருட்கொடையாகத் தோன்றிய அண்ணல் நபி (ஸல்) அவர்கள் போதித்த சத்திய சன்மார்க்க இஸ்லாம் அரபு நாட்டில் மட்டுமின்றிக் கடல் வழியாகவும் தரை மார்க்கமாகவும் அகில உலகெங்கிலும் குறிப்பாக தென்கிழக்கு மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் வேகமாக வளர்ந்தோங்கி வேரூன்றத் துவங்கியது.

ஆசியாவின் நடுமேட்டு நிலத்திற்குத் தெற்கிலுள்ள பகுதி முழுவதும் சம்புத்தீவு அல்லது நாவலந்தீவு என்று அழைக்கப்பட்டது.  நாவலந்தீவில் விந்தியமலைக்குத் தெற்கிலுள்ள பகுதி தட்சிணாபதம் அல்லது தென்னாடு என்றும் அதன் தென் கோடியில் தமிழர் வாழும் இடம் தமிழகம் (தமிரிக) என்றும் அழைக்கப் பெற்றன.

மிகத் தொடக்க காலத்திலிருந்தே தமிழகத்தின் பொருள் வளங்கள் தொலைதூர நாடுகளின் வணிகர்களின் கவனத்தை கவர்ந்து வந்தன. கி. பி. ஆறாவது நூற்றாண்டின் இறுதி வரை தென்னிந்தியாவின் மேற்குக்கரைக்கும் கிழக்குகரைக்கும் வியாபார நிமித்தம் பயணம் வந்த அரேபியர்களில் சிலைவணக்கக் காரர்கள் கிறிஸ்தவர்கள் ய+தர்கள் போன்றோர்கள் இருந்தனர்.  ஆனால் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் மத்திக்குள்ளாக அரேபியர்கள் அனைவருமே இஸ்லாத்தில் தீவிர பங்கெடுத்துக்கொண்டிருந்தனர்.

கோவளத்தில் தமிமுல் அன்ஸாரி(ரலி) அவர்களது அடக்கஸ்தலமும் தென்னாற்காடு மாவட்டம் முகம்மது பந்தரில் (பரங்கி பேட்டையில்) ஹஸரத் அபிவக்காஸ்(ரலி) அவர்களது அடக்கஸ்தலமும் இருக்கிறது. இவர்கள் நபிகள் நாயகத்தின் தோழர்கள் (ஸஹாபாக்கள்) என்ற அந்தஸ்தை பெற்றவர்கள்.

ஸஹாபாக்கள் பலரும் சமயப்பிரச்சாரத்திற்காக தங்களை அர்பணித்துக்கொண்டு உலகின் பல பாகங்களுக்கும் பயணித்தனர்.  ஏற்கனவே இந்தியாவோடு இருந்து வந்த வணிகத்தொடர்போடு புதிதாக மார்க்கத் தொடர்பும் சேர்ந்துக்கொன்டது.

சரக்குகளோடும் குதிரைகளோடும் வாணிபத்திற்காக வந்தவர்களும் அவர்களுக்கு ஏவல் புரிய வந்தவர்களும் இங்கேயே தங்கினர். திருமண உறவுகளை கொண்டனர்.  இஸ்லாமிய நெறிமுறைகளை ஏற்றுக்கொண்ட அவர்களது வாழ்வு தமிழகத்தில் தொடர்ந்தது.

கி.பி. 642-ல் மலபார் கரையிலுள்ள முசிறி துறைமுகப்பட்டிணத்தில் (இன்றைய கொடுங்காளுர்;) முதல் பள்ளிவாசல் கட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழகக்கரை நெடுகிலும் தொழுகைப் பள்ளிகள் அக்காலக் கட்டத்திலேயே எழுந்தன.

திருச்சி நகரின் நடுவில் மெயின்கார்டு கேட்டின் அருகே கோட்டை ரயில் நிலையம் – சமீபத்தில் பழுதுபட்டுக் காணப்படும் பள்ளிவாயில் கி.பி 738-ல் கட்டப்பட்டது.

இவ்வுண்மையை மனதில் இருத்தியே பாரதப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு ”Discovery of India” என்ற தமது நூலில் – ” ஒரு அரசியல் சக்தியாக பாரதத்திற்குள் இஸ்லாம் நுழைவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னமேயே இஸ்லாம் ஒரு மார்க்கம் என்ற ஹோதாவில் இந்நாட்டின் தென்பகுதியை அடைந்துவிட்டது” என்று எழுதியுள்ளார்.

”அல்லா என வந்து சந்தியும்
நந்தாவகை தொழும் சீர் நல்லார்”

என்று களவியற் காரிகை அகப்பொருள் இலக்கண நூலில் வருகிறது.

கி.பி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் இலக்கியங்களில் இஸ்லாம் பேசப்படுவதால் ஏழாவது நூற்றாண்டின் இறுதியிலேயே தமிழகத்தில் இஸ்லாமிய சமுதாயத்தினரின் வாழ்வு துவங்கப்பட்டுவிட்டதை உறுதி செய்கிறது.

மார்க்க மேதைகள்

சேர நாட்டு மன்னர் பாஸ்கர ரவிவர்மன் என்ற சேரமான் பெருமாள் நாயனார் (கி.பி. 780-834) சந்திரன் இரண்டாகப் பிளப்பது போன்று கனவு கண்டார். இதன் விளக்கத்தை அவர் அரபு வணிகர்களிடம்  கேட்டார். அதற்கு அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) இறைவனின் அருளால் சந்திரனை இரண்டாக பிளந்து நிகழ்த்திய அற்புதத்தை விளக்கினர். இதனால் திருப்தியடைந்த மன்னர் இஸ்லாத்தை பற்றி மேலும் முழுமையாக தெரிந்துக் கொண்டு முஸ்லிமாக மாறினார்.  தனது பெயரை அப்துர் ரகுமான் சாமிரி என மாற்றிக் கொண்டார்.

ஹஜ் கடமையை நிறைவேற்ற அரேபியா சென்ற அவர் அங்கேயே மரணமடைந்தார்.  அன்னார் அரேபியாவில் இருந்தபோது அவரது வேண்டுகோளுக்கு இணங்க மாலிக் இப்னு தீனார் தலைமையில் இஸ்லாமிய பிரச்சாரக்குழு ஒன்று தென்னிந்தியா வந்து தீன் பணியில் ஈடுபட்டது.

நத்தர்ஷாஹ் ஒலியுல்லாஹ் (கி.பி. 969 – 1039) சிரியாவை சேர்ந்தவர்கள்.  செய்யது வம்சத்தை சேர்ந்த இவர்கள் மார்க்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இறுதியில் திருச்சி வந்தடைந்தார்.  சுமார் 700 பிரச்சாரர்களை (கலந்தர்கள்) உருவாக்கி தமிழகத்தில் தீன் பணியை சிறப்பாகச் செய்தார்.

தென் மாவட்டங்களில் பாபா பக்ருத்தீன் என்ற காட்டு பாவா சாகிப் அவர்களும் மதுரையில் ஹஸரத் அலியார்ஷாஹ் ஸாஹிப் அவர்களும் இஸ்லாமியப் பணியினை இன்முகத்துடன் செய்து கொண்டிருந்தனர். இப்பெரியார்கள் ஏராளமான மக்கள் இஸ்லாத்தில் இணைவதற்கு காரணமாக இருந்தனர்.

இறை நேசச் செல்வர் சையித் இப்ராஹிம் மொரோக்கோவில் தோன்றி பின் இஸ்லாத்தை பரப்புவதற்காக (கி.பி. 1142 – 1207) இந்தியா வந்தார். பாண்டிய மன்னர் குலசேகரன் சார்பாக மற்றுமொரு பாண்டிய மன்னர் விக்கிரமனுடன் போரில் ஈடுபட்டார். இப்போரின் விளைவாக அரசாட்சி சையித் இப்ராஹிம் அவர்கள் கையில் வந்தது.  தமிழ் நாட்டின் ஒரு பகுதியை அரசாண்ட முதல் முஸ்லிம் மன்னர் (கி.பி. 1195-1207) இவர்களே.

கி.பி. 1207-ல் வீரபாண்டியனுடன் நடந்த மற்றுமொரு போரில் ~ஹீதானார்கள். இராமனாதபுரம் ஏர்வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.  (மதினா நகரின் ஒரு பகுதியான ”யர்புத” என்ற இடத்திலிருந்து அவர்கள் புறப்பட்டு வந்ததால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கும் ”யர்புத்” என்றே பெயர் சூட்டப்பட்டது.  இச்சொல் நாளடைவில் ஏர்வாடி என்று மருவி விட்டது.)

பதினாறாம் நூற்றாண்டில் நாகூர் சாகுல் ஹமீது ஒலி அவர்கள் பெருமைக்குரியப் பணியினை ஆற்றினார்கள். கல்வத்து நாயகம் அவர்களும், செய்யது முகம்மது ஆலிம் புலவர் அவர்களும் சிறப்பான பணியினை ஆற்றினார்கள். செய்கு அப்துல்காதிர் மரைக்காயர் என்று குறிப்பிடும் வள்ளல் சீதக்காதி அவர்களின் நண்பரும் கீழக்கரையில் வாழ்ந்தவருமான சேக் சதக்கத்துல்லா அப்பா அவர்களிடம் கி.பி. 1622-ல் 4000 பேர்கள் கலிமாச் சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.

சமுதாய அந்தஸ்து

அரபு நாட்டு வியாபாரிகள் சோனகர் என்று அழைக்கப்பட்டனர். (இலங்கை தமிழ் முஸ்லிம்கள் இன்றும் சோனகர் என்றே அழைக்கப்படுகிறார்கள்.)

”மார்க்கப்”; என்பது கப்பலைக் குறிக்கும் அரபுச் சொல். கப்பல் அல்லது மரக்கலத்தில் வந்தவர்கள் மரக்கலராயர் என்றாகி பின் மரைக்காயர் ஆனார்கள்.

இஸ்லாமிய பணியில் ஈடுபட்டோர் ”லப்பைக்” என்ற அரபிச் சொல்லை பயன்படுத்திட அதுவே ”லப்பை” என்றானது.

குதிரை வணிகத்திற்காக வந்தவர்கள் குதிரையை அடக்கியாளும் ஆற்றலுடையவர்கள் என்ற பொருளில் ராவுத்தர் ஆனார்கள்.

ராவுத்தர் என்ற சொல் மரியாதைக்குரியதாக மதிப்புடையாதாக தமிழ் மக்களால் பாவிக்கப் பட்டது. தங்களது கடவுள்களுடைய கோலத்தையே ராவுத்தர் கோலத்தில் கற்பனை செய்து மகிழ்ந்திருக்கிறார்கள் தமிழர்கள். முருகக் கடவுளையே ”சூர்க் கொன்ற ராவுத்தனே” ”மாமயிலேறும் ராவுத்தனே” என அருணகிரிநாதர் இயற்றிய கந்தர் அலங்காரமும் கந்தர் கவிவெண்பாவும் வருணிக்கின்றன.

”அப்துல் ரகுமான் என்ற அரபியர் பாண்டிய மன்னனின் அரண்மனையில் பெரியதோர் அதிகாரம் வகித்திருந்ததாகவும், காயல் துறைமுகத்தில் சுங்கம் வசூலித்தாகவும், ஞா. துறைசாமிப்பிள்ளை அவர்கள் ”பாண்டியர் காலம்” என்ற சொற்பொழிவுல் குறிப்பிட்டுள்ளார்கள்.

கி.பி 1276-ல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் அரபு நாட்டின் கைஸ் மன்னரான மலிகுல் இஸ்லாம் ஜலாலுத்தீன் அவாகளோடு நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார் என வரலாற்று ஆசிரியர் வஸ்ஸாப் கூறுகிறார்.

கி.பி 1280-ல் குலசேகரப் பாண்டியன் ஜமாலுத்தீன் என்ற தூதுவரைச் சீன நாட்டிற்கு அனுப்பினார்.

ஜமாலுத்தீன் சகோதரர் தகியுத்தீன் அப்துல் ரகுமான் கி.பி. 1303 வரை அமைச்சராகவும் வரி வசூலிக்கும் அதிகாரியாகவும் பண்யாற்றினார். தொடர்ந்து சிராஜூத்தீனும் அவரது பேரனார் நிஜாமுத்தீனும் பதவியில் இருந்ததை கிருஷ்ணசாமி அய்யங்கார் தெரிவிக்கிறார்.

பாண்டிய மன்னர்களின் ஆலோசர்களாக அமைச்சர்களாக கடற்படைத் தளபதிகளாக முஸ்லிம்கள் பொறுப்பு வகித்திருக்கிறார்கள். இந்நாட்டு மன்னர்களின் தூதுவர்களாக பல வெளிநாடுகளுக்கும் சிலர் சென்று வந்துள்ளனர். அரசாங்க வருவாயை பெருக்கும் வணிகர்களாகவும் போர் வீரர்களாகவும் செயலாற்றி வந்தார்கள்.

மாலிக்காபூர் மதுரை மீது படையெடுத்து வந்த போது பாண்டிய மன்னனின் படையில் இருபதினாயிரம் முஸ்லிம்கள் சேவையாற்றி வந்தனர் என இப்னு பதூதா என்ற யாத்ரிகரின் குறிப்பிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

கி.பி. ஏழாவது நூற்றாண்டிற்குப் பிறகு தென்னிந்திய மக்கள் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலமாக என்னென்ன நன்மைகளையும் லாபங்களையும் பெற்றார்களோ அவை அனைத்தும் அப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் மூலமாகவே வந்தடைந்தன என்று கொள்ளலாம் என டாக்டர் தாராசந்த் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.

டில்லி மன்னர்களின் படையெடுப்பு

13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கில்ஜி வம்ச ஆட்சி காலத்தில் அலாவுத்தீன் முதன் முதலாக தென்னகத்தில் படையெடுத்தார். முதல் மாறவர்மன் காலத்தில் மாலிக்காபூர் படையெடுத்தார். சுந்தரபாண்டியன் காலத்தில் குஸ்ருகான் படையெடுத்தார். கி.பி. 1323-ல் பராக்கிரமதேவபாண்டியன் காலத்தில் உலூகான் படையெடுத்து பாண்டிய நாட்டை கைப்பற்றினார்.

1323 முதல் 1378 வரை சுமார் 55 ஆண்டுகள் மதுரைப் பகுதியில் சுல்தான்களின் ஆட்சி நடைபெற்றது. நாயக்கர் வம்ச இரண்டாம் ஹரிஹரர்(1376-1404) காலத்தில் மதுரை சுல்தான்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது என்று அ.கி. பரந்தாமனார் ”மதுரை நாயக்கர் வரலாறு” என்ற நூலில் கூறுகிறார்.

ஆட்சி பொறுப்பில் இருந்த முஸ்லிம் மன்னர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காக எதுவும் செய்ததாக எந்தவிதமான தடையங்களையும் யாரும் கண்டுபிடுத்துச் சொல்லவில்லை. இந்த சுல்தான்கள் ஆட்சிக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மதுரையிலும் தமிழ் நாட்டின் இதர பகுதிகளிலும் முஸ்லிம் பொதுமக்கள் வாழ்ந்து தான் வந்தார்கள்.

இஸ்லாமிய மார்க்க அறிவு பெற்ற பெரியார்களாலும் ஒலிமார்களாலும் மக்கள் மத்தியில் இஸ்லாம் அறிமுகமாகி பரவியதே தவிர ஆட்சி பொறுப்பில் இருந்தவர்கள் மூலமாக பரவ வில்லை.

இஸ்லாமியரின் ஆட்சி அதிகாரங்கள் தமிழகத்தில் இல்லாத காலங்களிpலும் ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்’, ‘ ”யாதும் ஊரே யாவரும் கேளிர்”  போன்ற தமிழர் தத்துவங்கள் இஸ்லாமிய கலாச்சாரத்திற்கும் பொதுவாக இருந்தமையால் தமிழகம் அன்போடு இஸ்லாத்தை அணைத்துக்கொண்டது. அல்லாஹ் என்றால் எல்லாம் மறந்திடும் இறை நேசச் செல்வர்கள் மூலம் இஸ்லாம் மார்க்கம் இன்பத் தழிழகத்தில் வேகமாக வளர்ந்தது.

தொகுப்பு: பீர் முஹம்மது.
ஆதாரம் : விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள் – செ.திவான்.
தமிழகத்தில் இஸ்லாமியர் வரலாறு – ஏ.கே. ரிபாயி.

Permalink Leave a Comment

தமிழகத்தில் இஸ்லாமியர்

10/04/2009 at 8:53 pm (முத்தமிழ் வளர்ச்சியில்)

ஈரான் இஸ்லாமிய குடியரசின் குர்ஆன் செய்தி ஸ்தாபனம் (இக்னா) தனது செய்தியில் அறிவிப்பதாவது:

அரேபிய தாயகத்தில் வேரூன்றியிருந்த மடமைகளை மாய்த்து மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கிய இனியமார்க்கம் இஸ்லாம், கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் நம் தமிழகத்தில் தம் பொற்பாதங்களை மெல்லப் பதிக்கத் துவங்கியது.

சங்க காலம் முதல் தமிழகத்துடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் அரபு நாட்டவர். தொடக்கத்தில் யவனர் என்றழைக்கப்பட்டனர். பின்னர் இப்பெயர் மாறி முஸ்லிம்கள் என்றும், சோனகர், துலுக்கர் என்றும் அழைக்கப்பட்டனர். அவர்களது சிந்தனைகள், செயல்பாடுகள், வணக்க வழிபாடுகள் ஆகியவை தமிழ் மக்களைக் கவர்ந்தன. இனிய பேச்சும் இயல்பான வணிகத் தொடர்பும், சாதாரண மக்களை மட்டுமல்லாமல் சோழ – பாண்டிய மன்னர்களையும் கவர்ந்தன. இறைவன் ஒருவனே என நம்புதல், நாளொன்றுக்கு ஐந்து முறை இறைவனுக்கு வணக்கம் செலுத்துதல், ஆண்டுக்கு ஒரு திங்கள் உலக நலன் கருதி உண்ணா நோன்பிருத்தல், சாதி சமய பேதமின்றி அனைத்து மக்களையும் சகோதரர்களாகப் பாவித்து அன்பு செலுத்துதல் ஆகிய புதிய கோட்பாடுகள் தமிழக மக்களிடையே ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தின.

மதுரையம்பதியில் நின்றசீர் நெடுமாறன் என வழங்கப்பட்ட கூன் பாண்டியன், அரபு நாட்டு வணிகர்களுக்கு ஆதரவு வழங்கினான். மதுரையில் அவர்களது குடியிருப்பு அமைவதற்கு உதவினான். இதே போன்று சோழ நாட்டின் தலைநகரான உறையூரிலும் முஸ்லிம் வணிகர்கள் தங்குவதற்கு சோழ மன்னன் உதவினான். அவர்களது வழிபாட்டுத் தலம் ஒன்று உறையூரில் அமைவதற்கும் ஆதரவு நல்கினான். அந்தப் பள்ளிவாசல் (கி.பி.726) திருச்சி கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்றும் இருக்கிறது.

இத்தகைய இஸ்லாமிய அரபு வணிகர்களது குடியிருப்புகள் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் பல பகுதிகளில் எழுந்தன. அவை, அஞ்சுவண்ணம் என மக்களால் அழைக்கப்பட்டன. இந்த அஞ்சுவண்ணம் ஒன்று நாகப்பட்டினத்துக்கு அருகில் அமைந்திருந்ததை தனிப் பாடல் ஒன்றின் மூலம் தெரிந்துக்கொள்ள முடிகிறது.

பாண்டிய நாட்டின் தென்பகுதியான நாஞ்சில் நாட்டில் திருவிதாங்கோடு அருகில் அஞ்சுவண்ணம் என்ற பெயரிலேயே ஒரு சிற்றூர் இன்றும் நிலைத்திருக்கிறது. இந்தக் குடியிருப்புகளில் வாழ்ந்து வந்த அராபிய இஸ்லாமியர், நாளடைவில் வணிகத்துடன் மட்டுமல்லாமல் சமுதாய நிலைகளிலும் தங்களைத் தொடர்பு படுத்திக்கொண்டு கலந்து தமிழ் முஸ்லிம்கள் என்ற புதிய பெயரினைப் பெற்றனர்.

வாணிபத்திற்கு அவர்கள் பயன்படுத்திய வாய்மொழியான தமிழ், இப்போது அவர்தம் வழித்தோன்றல்களின் தாய் மொழியாக மாறியது. அதுவரை சோழ – பாண்டிய மன்னர்களால் மெய்க்கீர்த்திகளிலும், கல்வெட்டுகளிலும், சோனகர் – துலக்கர் எனக் குறிப்பிடப்பட்ட இந்த மேலைநாட்டு முஸ்லிம்கள், தமிழ் முஸ்லிம்கள் என்ற தகுதியையும், அரசியல் முதன்மையையும் எய்தினர்.

இந்தப் புதிய தமிழ்ச் சமுதாயத்தினரது அணிகலன்களும், ஆடைகளும், உணவு முறைகளும் தமிழ் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. நாளடைவில் இந்தக் குடியிருப்புகளிலும், வணக்கத் தலங்களிலும் அமைக்கப்பட்ட கட்டுமானங்கள், குறிப்பாக மேற்கூரைகள், கும்ப அமைப்பில் அமைக்கப்பட்ட அலங்கார கோபுரங்கள், சாளரங்கள், முகப்பில் பயன்படுத்தப்பட்ட வில் வடிவ குதிரைக் குளம்பு அமைப்பு வளைவுகள் ஆகியவை திராவிட – இஸ்லாமிய கட்டுமானங்கள் என்ற புதிய பாணியை ஏற்படுத்தின.

தமிழகத்தில் ஏற்கனவே தழைத்து வளர்ந்து வந்த சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்கள் போன்று இஸ்லாமும் தமிழகத்தில் சமயங்களில் ஒன்றாக நிலைபெற்றது. தமிழ் சமுதாயத்தில் தவிர்க்க முடியாத அங்கமாக தமிழ் முஸ்லிம்கள் அங்கீகரிக்கப்பட்டனர். இத்தகைய சமய நிலையும், நோக்கும் ஏற்படுவதற்கு, அன்று அரபகத்திலிருந்து தமிழகம் வந்த இஸ்லாமிய ஞானிகளே பெரிதும் உதவினர். இவர்கள் தங்களது அரிய வாழ்வினைத் தமிழ் மக்களின் சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணித்து வந்தனர்.

தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்த தமிழ்நாட்டு பதினெண் சித்தர்களைப் போன்று இந்த இஸ்லாமிய ஞானிகளின் ஆன்மீக உபதேசங்களும் தமிழ் மக்களால் மனமுவந்து ஏற்கப்பட்டன. இந்தப் பதினெண் சித்தர்களில் ஒருவரான சதுரகிரி மலையைச் சேர்ந்த இராமதேவர் இஸ்லாத்தை ஏற்று, புனித மக்கா சென்று திரும்பினார். தமது பெயரையும் யஃகூபு சித்தர் என மாற்றி அமைத்துக் கொண்டார்.

கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் சிரியா நாட்டிலிருந்து தமிழகம் வந்த இறைநேசர் நத்ஹர், காலமெல்லாம் திருச்சிப் பகுதி மக்களது ஆன்மீக வழிகாட்டியாக வாழ்ந்து, திருச்சியிலேயே இயற்கை எய்தினார். இவர்களை அடுத்து கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் அரபுநாட்டு மதீனா நகரிலிருந்து தென்பாண்டிய நாட்டிற்கு வந்த இறைநேசர் செய்யிது இபுறாஹீம், 12 ஆண்டுகளுக்கு மேலாகப் பாண்டிய நாட்டு மக்களது ஆன்மீக வழிகாட்டியாக அரிய உபதேசங்களைச் செய்து சேதுநாட்டு ஏர்வாடியில் கி.பி. 1195-ல் புகழுடம்பு பெற்றார்.

தமிழ் முஸ்லிம்கள் சிலர் அரசியலில் முதன்மையும், செல்வாக்கும் பெற்றிருந்தனர். சோனகன் சாவூர் என்பவர் ராஜராஜ சோழனது அவையில் சிறப்பிடம் பெற்று இருந்ததுடன் தஞ்சைக் கோயிலுக்குப் பல தானங்கள் வழங்கி இருப்பதைக் கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த வணிகர், ராஜேந்திர சோழனது அவையிலும் இடம் பெற்றிருந்தார். கந்தர்வ பேரரையன் என்ற சிறப்பு விருதினையும் அந்த வணிகருக்கு ராஜேந்திர சோழன் வழங்கிச் சிறப்பித்ததை அவனது கோலார் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மன்னனின் சிறந்த அலுவலராக துருக்கன் அஹ்மது என்பவர் விளங்கியதை லெய்டன் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

இதுபோலவே கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் காயல்பட்டினத்தில் மாறவர்மன் குணசேகர பாண்டியனது அரசவையில் இருபெரும் முஸ்லிம் வணிகர்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவரான ஷேக் ஜக்கியுத்தீன், பாண்டியனது தலைமை அமைச்சராக இருந்தார். இன்னொருவரான ஷேக் ஜமாலுத்தீன், பாண்டிய மன்னனின் அரசியல் தூதுவராக சீன நாட்டுக்குப் பலமுறை சென்று வந்ததையும் வரலாற்றில் காணமுடிகிறது. 17-ஆம் நூற்றாண்டில் மிகச் சிறப்புடன் அரசோச்சிய சேது மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதியின் நல்லமைச்சராக வள்ளல் சீதக்காதி என்ற ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் விளங்கினார். டச்சுக் கிழக்கிந்திய ஆவணங்கள் இதைத் தெரிவிக்கின்றன. இவ்விதம் அரசியலில் தமிழ் முஸ்லிம்கள் முதன்மை பெற்றிருந்ததையும், அதன் காரணமாக சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமல்லாமல், மறவர் சீமை சேதுபதிகள், மதுரை நாயக்க மன்னர்கள், தஞ்சாவூர் நாயக்க – மராட்டிய மன்னர்கள் ஆகியோரது ஊக்குவிப்புகளுக்கும் தமிழ் முஸ்லிம்கள் உரியவர்களாக விளங்கியதைப் பல வரலாற்றுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன.

இங்ஙனம் தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் சிறுபான்மையினராக விளங்கிய தமிழ் முஸ்லிம்கள், தங்களது தாய்மொழியாகக் கொண்ட தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகளும் அளப்பரியவை. கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தின் ஆட்சியாளராக விளங்கிய நாயக்க மன்னர்களும், தஞ்சை மராட்டியர்களும் தமிழைப் புரக்கணித்து அவர்களது தாய்மொழியான தெலுங்கையும், மராட்டிய மொழியையும் வளர்ச்சி பெறச் செய்ததால் தமிழ்ப் புலவர்கள் அடைந்த வேதனையும் வறுமையும் பலப்பல. இத்தகைய இறுக்கமான சூழ்நிலையில் தமிழ் மொழியில் தேர்ந்து, பல புதிய இலக்கியப் படைப்புகளை முஸ்லிம்கள் யாத்து மகிழ்ந்தனர்.

தமிழ் முஸ்லிம்களது முதல் இலக்கியமான ஆயிரம் மசாலா என்ற அதிசயப் புராணம், 1572-ல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து தமிழ் யாப்பு இலக்கண வழியிலான புராணம், கோவை, கலம்பகம், அந்தாதி, பிள்ளைத்தமிழ், திருப்புகழ், குறவஞ்சி, பள்ளு என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள், தமிழ் முஸ்லிம்களால் படைக்கப்பட்டு, தமிழின் வளமைக்கும் பெருமைக்கும் அணி சேர்த்துள்ளன. குறிப்பாக தக்கலை பீர் முஹம்மது அப்பா, கோட்டாறு ஞானியார் சாஹிபு, காயல் காசிம் புலவர், குணங்குடி மஸ்தான் சாஹிபு, தொண்டி மோனகுரு மஸ்தான், அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் ஆகியோரது இன்னிசைப் பாடல்களும், இராமநாதபுரம் வெ. இபுறாஹீம் சாஹிபு போன்றவர்களின் நாடக நூல்களும் பெருமைமிகு பட்டியலில் இடம் பெற்றவையாகும். இந்தப் படைப்புகளுடன் அரபு, பார்சி, உருது ஆகிய மொழிப் புலன்களிலிருந்து பெற்ற தங்களது புலமைத் திறனை அந்த மொழிகளின் வடிவங்களான நாமா, கிஷ்ஷா, முனாஜாத் என்ற புதிய இலக்கிய வடிவங்களையும் தமிழ் மொழியில் புகுத்தி உள்ளனர். இதன் காரணமாக அந்த மொழிகளின் சொற்கள், ஏராளமான எண்ணிக்கையில் தமிழ் வழக்கில் திசைச் சொற்களாகக் கலந்து தமிழின் வளமைக்கு ஊட்டமளித்தன. அத்துடன் வளர்ந்து வரும் மொழிக்கு உதவும் வகையில் இந்த இலக்கிய வடிவங்களும் இன்னும் பல புதிய இலக்கிய வடிவங்களும் முன்னோடியாக விளங்கி வருகின்றன.

.

Permalink Leave a Comment

காசிம் புலவர்

28/03/2009 at 9:33 pm (காசிம் புலவர்)

இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களில் இசைத்தமிழ் இலக்கியம் படைத்த பெரும் புலவர் காசிம் புலவர். இவர் கடற்கரைப்பட்டினமான காயல் பட்டினத்தில் பிறந்தவர். இவர் முன்னோர்கள் எகிப்து நாட்டின் தலைநகரமான அல் காஹிரா (கெய்ரோ) மாநகரச் சேர்ந்தவர்கள்.

காசிம் புலவர் இளமையிலேயே இஸ்லாமிய மார்க்க ஞானம் மிக்கவராக விளங்கினார். திருவடிக் கவிராயர் என்பாரிடம் தமிழ் கற்றுப் பெரும் புலமை பெற்றார். இசைஞானம் மிகுந்தவராகவும் இருந்தார்.

ஒருசமயம் இவர் ஆசிரியர் திருவடிக் கவிராயர், அருணகிரியாரின் ‘திருப்புகழ்’ நூலை பெரிதும் பாராட்டினார். இதற்கு இணையான வேறொரு திருப்புகழைப் பாட இனி எவராலும் இயலாது எனக் கூறினார். இதைகேட்ட காசிம் புலவர் “என்னால் பாட முடியும்” என்றார். அவ்வாறாயின் “பாடிக் காட்டு” எனப் பணித்தார் ஆசிரியர் திருவடிக் கவிராயர்.

“பகருமுருவிலி அருவிலி வெருவிலி” எனும் சீரை முதலாகக் கொண்டு 141 பாடல்களைப் பாடி, நூலை விரைவிலேயே நிறைவுச் செய்தார். காசிம் புலவர் ‘திருப்புகழ்’ நூலைப் படித்த ஆசிரியர் திருவடிக் கவிராயர், இவரது தமிழ் அறிவையும், செய்யுள் இயற்றும் திறனையும், இசை ஞானத்தையும் பெரிதும் போற்றினார். இவருக்கு ‘வரகவி’ எனும் பட்டத்தை அளித்துப் பாராட்டினார்.

இவர் ஹிஜ்ரி 1177 துல்கஃதா பிறை 12 வெள்ளி இரவன்று காலமானார். இவரது உடல் காயல்பட்டினத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவர் ஆண்மக்கள் இருவரும் இவரைப் போலவே திறம்பட்ட இஸ்லாமியத் தமிழ்ப்புலவர்களாக விளங்கினர்.

பி.கு.

காசிம் புலவரின் ‘திருப்புகழ் ‘பாடல்களை நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதர் பாடி இசைத்தட்டுகளாக வெளியிட்டுள்ளார்.

காசிம் புலவரின் திருப்புகழை… அருணகிரிநாதரின் பாடலைப் போல் மூச்சுப் பிடித்துப் பாடுவது குமரி அபுபக்கரின் தனித்திறமை எனக் கூறலாம்.  (இவர் தூர்தர்ஷனில் செய்தி வாசிக்கும் நஸீமா சிக்கந்தரின் தந்தை.)

Permalink 2 Comments

கனக கவிராயர்

28/03/2009 at 8:43 pm (கனக கவிராயர்)

இவரது இயற்பெயர் செய்கு நெயினார் என்பதாகும். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜகெம்பீரம் எனும் சிற்றூரில் பிறந்தவர். தமிழ்ப்புலமை மிக்கவராகத் திகழ்ந்தார்.

மதுரையிச் சேர்ந்த கொந்தாலகான் என்பவரின் விருப்பத்திற்கேற்ப, நபிகள் நாயகத்தின் அருமைப்பேரர் ஹுசன் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் காப்பியமாகப் பாடினார்.  ‘கனகாபிஷேக மாலை” (கி.பி.1648) என்ற பெயரில் அமந்த அந்தக் காப்பியமே முதல் இஸ்லாமியத் தமிழ்க் காப்பியம் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்காப்பிய மாலை 35 படலங்களைக் கொண்டது. 2,792 விருத்தப்பாக்களால் அமைந்தது. இந்தக் காப்பியத்தை புனைந்த காரணத்தால் இவரது இயற்பெயர் நாளடைவில் மறைந்து “கனக கவிராயர்” என்ற பெயரே நிலைபெற்று விட்டது.

இஸ்லாமியத் தமிழ் ஞான இலக்கியத்திற்கு மாபெரும் பங்களிப்பச் செத குணங்குடி மஸ்தான், தொண்டி ஷைகு மஸ்தான் போன்றோர் இவர் வழி வந்த புலவர் பெருமக்களாவர்.

“கனகாபிஷேக மாலை” நூலை பீ. டாக்டர் நசீம்தீன் திறனாய்வுச் செய்து புத்தகம் எழுதியுள்ளார். இதனை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Permalink Leave a Comment

அருள்வாக்கி அப்துல் காதிர்

28/03/2009 at 8:36 pm (அருள்வாக்கி அப்துல்காதிர்)

பாட்டாலே விளக்கெரியச் செய்து பாட்டாலே விளக்கை அணையச் செய்தார் ஒரு புலவர். அவர்தான் ஈழத்திருநாடு தந்த பாவலர் அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் (1912) . இந்த அற்புதத்தை அவர் கண்டி மாநகரில் பலர் முன்னிலையில் நிகழ்த்திக்காட்டினார்.

இறையருளும் நல்லிசைப்புலமையும் வாய்ந்த புலவர் விளக்கெரியும்படி பாடிய வெண்பா பாடல் வருமாறு;

எரிவாய் விரிந்தெழுந்து எண்ணெய் மேல் தோய்ந்து
கரிவாய் இருள்போகிக் காட்ட – அரியணையின்
தூண்டா விளக்கே! சுடர்விட்டு நீயென்முன்
ஈண்டிங் கெழுந்து எரி.

இவ்வாறு பாட்டால் தீபத்தை எரியச்செய்வது தீப சித்தி என்றழைக்கப்படும். அட்டாவதானம், தசாவதானம், சதாவதானம் என்பவற்றைவிட இது மேலானதாகும். இத்தகைய ஆற்றல்மிக்க புலவர் பாட்டால் எரியச்செய்த விளக்கைப் பாட்டாலே அணைத்தும் காட்டினார். அதற்காக அவர் பாடிய மற்றுமொரு வெண்பாவைப் பார்ப்போம்.

தூண்டா மணிவிளக்கே, துகள்போக்கும் தூயொழியே
காண்டற்கரியதோர் காட்சியே – வேண்டி
எரியவுனை வைத்ததுபோல் எல்லோரும் பார்க்க
அரியணையில் நீ நின்றணை.

இத்தகு ஆற்றல் மிக்க புலவரது சிறப்புக்குத் தெய்வப்புலவர் திருவள்ளுவரின்

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

எனும் குறளும்

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம்

எனும் தொல்காப்பியச் சூத்திரமும் தக்க சான்றாகும் எனலாம். இவ்வாறு அறிஞர் தம் முன்னிலையில் தமது ஆற்றலைக் காட்டிய புலவரின் செயலைக் கண்ணாரக் கண்டுகளித்த பொன்னம்பலக் கவிராயர்

எல்லா அதிசயத்தும் ஈது மிகப்பெரிதாம்
வால்லான்மெய்ஞ் ஞாநியப்துல்ல்காதிர் – பல்லார்முன்
பாட்டால் விளக்கெரித்துப் பாட்டதனாலேயணைத்துக்
காட்டியதோரிக்காட்சி காண்

என்று பாடிப் பரவசமுற்றார்.

புலவர் பாடும் புலவராய் மெய்ஞ்ஞானியாய் விளங்கிய அப்துர்காதிர் கண்டி மாவட்டத்திலுள்ள போப்பிட்டி என்னும் சிற்றூரில் 30 ஆகஸ்ட் 1866 அன்று பிறந்தவர். தந்தையார் ஆ.பி. அல்லாப்பிச்சை ராவுத்தர். தாயார் கவ்வா உம்மா. இளமையில் அரபுப்பள்ளியில் திருக்குர்-ஆனும் தமிழ்ப்பள்ளியில் தமிழும் பயின்ற இவர் கண்டியில் உள்ள ராணி அக்கடமியில் (தற்போது அர்ச் போல்ஸ் கல்லூரி) ஆங்கிலம் கற்றார்.

பின் தமது மூதாதையரின் இடமான திருப்பத்தூருக்குச் சென்று மஹ்மூது முத்துப் பாவாப்புலவரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத்தேர்ந்தார். தனது பதினாறாவது வயதிலே கவியரங்குகளில் கவிமழை பொழியத்தொடங்கினார். அச்சமயம் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த கவியரங்கொன்றில் கவிமழை பொழிந்த இவரது புலமைத்திறனை வியந்தோர் அவ்வரங்கிலேயே இவருக்கு “அருள்வாக்கி” எனப் பட்டம் சூட்டி மகிழ்ந்தனர். அன்றுமுதல் அதே பெயரில் அழைக்கப்படலானார். உண்மையிலே அவர் அருள்வாக்கினராகவே விளங்கினார். பலரது தீராத நோய்களைத் தீர்த்து வைத்தார் எனவும் கூறுவர்.

கவிஞர் த.  துரை சிங்கம்

(பைந்தமிழ் வளர்த்த ஈழத்துப் பாவலர்கள் நூலிலிருந்து)

Permalink 1 Comment

கவிஞர் சல்மா

13/02/2009 at 9:27 pm (கவிஞர் சல்மா)

ஒரு மாலையும் இன்னொரு மாலையும் கவிதைத் தொகுப்பின் மூலமாக கவனம் பெற்ற முக்கியக் கவிஞர்

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர். அப்பா சம்சுதீன். அம்மா சர்புன்னிசா. 37 வயதாகும் சல்மாவின் இயற்பெயர் ரொக்கையா பீவி. கணவர் மாலிக். வலி நிறைந்த துயரங்களை எளிய மொழியில் கூறும் சல்மாவின் கவிதைகள் அவரது சொந்த அனுபவங்களாக மட்டுமே நிற்காமல், பெண்களின் பொதுவான துயரங்களாக விரிகின்றன. இரண்டு புதல்வர்களைக் கொண்ட சல்மா துவரங்குறிச்சி (பொன்னம்பட்டி) பேரூராட்சித் தலைவராகவும் இருந்துவருகிறார். சில கதைகளும் எழுதியுள்ள இவர் இப்போது ஒரு நாவல் எழுதியுள்ளார். “இரண்டாம் ஜாமங்களின் கதை” என்ற அந்த நாவல் விரைவில் காலச்சுவடு வெளியீடாக வர உள்ளது. உதவி ஆசிரியர் பெ. அய்யனார் துவரங்குறிச்சியில் சல்மாவின் வீட்டில் அவரை சந்தித்து உரையாடினார். கவிதை, வாழ்க்கை, அவரது இலங்கைப் பயணம் என்று பலதரப்பட்ட விஷயங்கள் பற்றி மூன்று மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்தச் சந்திப்பின் முக்கியமான பகுதிகள் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. “பல ஆண்டுகளுக்கு முன்பு நகுலனைத் திருவனந்தபுரத்தில் சந்தித்து “புதிய பார்வை” இதழுக்காக நேர்கண்டபோது எனக்கு ஏற்பட்ட மனரீதியான பாதிப்பை சல்மாவுடன் உரையாடியபோது உணர்ந்தேன்.” என்கிறார் அய்யனார்.

“எழுத்துதான் எல்லா நம்பிக்கைக்கும் காரணம்.”
“பொய்யான மதிப்பீடுகள் மூலம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்”
“ஆணின் சிந்தனையை இரவல் வாங்கித்தான்
பெண்ணும் சிந்திக்க வேண்டியுள்ளது”

நேர்காணல் – கவிஞர் சல்மா

சந்திப்பு – பெ.அய்யனார்

இஸ்லாமியப் பெண்களுக்கான அடையாளம் மட்டும்தானே உங்கள் கவிதைகளில் உள்ளது?

எனக்குத் தெரிந்த எத்தனையோ இந்துக் குடும்பங்களில் என்னைப் போன்று அடக்கிவைக்கப்படும் பெண்களைப் பார்த்திருக்கிறேன். வீட்டிலிருந்து வெளியில் வராமல் எவ்வளவே பேர் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இந்து-முஸ்லீம் என்ற வேறுபாடில்லாமல் பெண்களுக்கான சிரமம் என்பது ஒன்றாகவே இருக்கிறது.இதை என்

இந்துத் தோழிகள் மூலமாக அனுபவப்பூர்வமாகத் தெரிந்து வைத்திருக்கிறேன். அப்போதுதான் எல்லாப் பெண்களுக்குமான பிரச்சினையைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். ‘இஸ்லாமியப் பெண்’ என்ற தனிப்பட்ட அடையாளம் எனக்கு வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். என் தனிப்பட்ட அடையாளம் மட்டும்தான் என் கவிதைகளில் இருக்கிறது என்றால் எல்லாத்தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் கவிதைகளாக அவை இருந்திருக்காது. ஜாதி மத வேறுபாடுகளைத் தாண்டிய, எல்லாப் பெண்களின் அனுபவமாகத்தான் என் கவிதைகளைப் பார்க்கிறேன்.

மதம் என்பது ஒரு வாழ்க்கை முறைதான். இஸ்லாமிய மத ஈடுபாடு உங்களுக்கு உண்டா?

ஆரம்பத்தில் மதத்தின் மீது ஆழமான நம்பிக்கை எனக்கிருந்தது. பின்பு ருஷ்ய இலக்கியம், மார்க்சியம், லெனின் பற்றி நிறைய வாசிக்க ஆரம்பித்த பின்பு எனது 16, 17 வயதுகளில் மதத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது. அந்த நம்பிக்கை இல்லை என்று காட்டிக்கொண்டதாலேயே நிறையப் பிரச்சினைகளை எதிர்கொண்டேன்.

குரான் ஓதுவதற்கான போட்டியில் பள்ளிவாசலில் நிறையப் பரிசுகள் எல்லாம் பெற்றுள்ளேன். அப்படியான ஒருத்தி திடீரென்று தொழுகை செய்வதை நிறுத்திவிட்டவுடன் வீட்டில் கடுமையான எதிர்ப்பு தானாகவே வருகிறது. மற்ற விஷயங்களில் என்னை ஏற்றுக்கொண்ட பெற்றோர்கள்கூட என்னைப் பற்றி அதிகக் கவலைகொள்ளத் தொடங்கினர். யாருக்காகவும் என்னை இதுவரை மாற்றிக்கொண்டதில்லை. ஒரு நம்பிக்கை போய்விட்டது. அதை மனதின்றிப் பிறருக்காகச் செய்வதில் விருப்பமில்லை. அப்போது பல நாள் வெறுமனே நின்றுகொண்டு இருந்திருக்கிறேன். அம்மா பிடிவாதமாகத் தொழச் சொல்லி அழுவார்கள். காலப்போக்கில் அவர்களுக்கும் சலிப்பு வந்து விட்டுவிட்டார்கள். இப்போது இங்குள்ள எல்லோருக்கும் நான் ஒரு ‘காஃபிர்’. அதாவது இந்து. ஆனால் ஆரம்பத்தில் பெரிதாகப் பேசப்படும் விஷயங்கள் பின்னால் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. சென்னைக்கு வந்து லண்டன் TTN என்ற தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்திருந்தேன். சென்னைக்கு வந்தால் முஸ்லீமாக என்னை அடையாளம் காட்டவேண்டிய அவசியம் கிடையாது. பேட்டி கொடுத்தபோது ஃபுர்கா அணியாது சாதாரணமாகப் பேசிவிட்டு வந்தேன். அந்தப் பேட்டி ஐரோப்பாக் கண்டத்தில் மட்டும்தான் தெரியும் என்றார்கள். ஆனால் சவூதி முழுக்கவும் அந்த ஒளிபரப்புத் தெரிந்திருக்கிறது. எங்கள் ஊரிலிருந்து சென்று சவூதியில் வேலை பார்ப்பவர்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்து, பதிவுசெய்து அதை எங்கள் ஊருக்கு (துவரங்குறிச்சி) அனுப்பி வைத்துவிட்டார்கள். ஊர் முழுக்கப் பரவி, நான் ஏதோ தவறு செய்துவிட்டதுபோல எல்லோரும் பேசத் தொடங்கிவிட்டார்கள். வீட்டிலிருந்து வெளியில் தலைகாட்ட முடியவில்லை. அதனால் எனக்கு ஏற்பட்ட மன வருத்தத்தைச் சொல்வது சிரமம்.

ஒவ்வொருவரும் கேட்ட கற்பனையான கேள்விகளை நினைத்தே பார்க்க முடியாது. உதாரணத்திற்கு, “ஒரு ஆண் முன்னால் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறாய், அவன் உன் கையைப் பிடித்து இழுத்தால் நீ என்ன செய்ய முடியும்?” அதற்கு “தெருவில் நான் போகும்போது எவனாவது கையைப் பிடித்து இழுத்தால் என்ன செய்வது” என்று நான் சொல்லி கேள்வி கேட்பவர்களை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. அப்போது கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானேன். ஹமீதுகூட சேர்ந்துதான் இப்படி ஆகிவிட்டாள். இனி அவனைப் பார்க்க அனுமதிக்கக்கூடாது என்றெல்லாம் நினைக்கத் தொடங்கினார்கள். முஸ்லீம் மதத்தில் பிறந்தவள் கடவுள் மறுப்புப் பற்றிப் பேசுவதை அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

இப்படியான கேள்விகளுக்குப் பதில் சொல்லி சக்தியை வீணாக்க வேண்டாம் என்று தொடர்ந்து பத்து நாட்கள் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தேன். வீட்டிற்குள்ளும் கடுமையான பிரச்சினை வந்தது. “இனிமேல் எந்தப் பேட்டியும் கொடுக்கக்கூடாது” என்று அப்பா, அம்மாவிலிருந்து கணவர்வரை எல்லோருமே சொன்னார்கள். தீராத அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் வருத்தம் கொண்டார்கள். அவர்களிடம் “இனிமேல் அப்படியெல்லாம் செய்யமாட்டேன்” என்று சொல்லி சமாதானப்படுத்தினேன். அந்த விஷயம் ஆரம்பத்தில் பரபரப்பாக இருந்ததே தவிர, இப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ், ஆனந்தவிகடன், தினமணி என்று பல பேட்டிகள் வந்து எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது.

உள்ளூர் ஜமாத்தாரிடமிருந்து ஏதும் எதிர்ப்பு வரவில்லையா

இல்லை. அதற்கு முக்கியக் காரணம் இதுவரை முஸ்லீம் சமூகத்தைப் பற்றி எதையும் எழுதவில்லை. அதைப் பற்றிய விமர்சனம் எனக்கு இருந்தாலும் அதை எழுத்தாக்கப் பயமாக இருக்கிறது. விமர்சனபூர்வமான கருத்துக்களைச் சொல்ல இங்கு இடமேயில்லை. சிறுபான்மையினர் மதமான இஸ்லாமை அந்த மதத்தில் பிறந்த ஒருவராலேயே விமர்சனம் செய்ய முடியாது. அப்படிச் செய்யும்போது நம்மைத் தண்டிக்க வேண்டும் என்று யோசிக்கத் தொடங்குவார்கள். உண்மையிலேயே என்ன சொல்ல வருகிறோம் என்பதைக்கூடப் பார்க்கமாட்டார்கள். அதில் அக்கறையும் இருக்காது.

சமீபத்தில் இலங்கை சென்றிருந்தபோதுகூட நான் பேசிய விஷயம் ஒன்று சர்ச்சைக்குள்ளானது. முற்போக்கு இலக்கிய அமைப்பு சார்பாக ஒரு சந்திப்புக்கு டொமினிக் ஜீவா ஏற்பாடு செய்திருந்தார். நானும் அம்பையும் அந்தக் கூட்டத்திற்க சென்றோம். குரானில் பெண்களக்கு சாதகமாக உள்ள விஷயங்களையும் பாதகமாக உள்ளதாகச் சொல்லப்படுகிற விஷயங்கள் பற்றியும் பேசலாம் என்றேன். ஒரு சம்பவ நிகழ்விற்கு சாட்சி வைக்கவேண்டும் என்றால் அந்தச் சாட்சி பெண்ணாக இருந்தால் இரண்டு பெண்கள் தேவை என்றும் ஆணாக இருந்தால் ஒருவர் மட்டுமே போதுமானது என்றும் குரானில் வருகிறது. முல்லாக்கள் ஹஜரத்துகள் போன்ற மதத் தலைவர்கள் இதை மட்டும்தான் அளவுகோலாகக் கொண்டு தீர்ப்பு வழங்குவார்கள். தங்களுக்கு சாதகமாக உள்ள மேலோட்டமான விஷயங்களை மட்டுமே கணக்கில் கொள்வார்கள். அதே விஷயத்தில் பெண்களுக்குச் சாதகமானவையும் குரானில் இருக்கும். எட்டுவிதமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் அதில் உள்ள ஒரே விஷயத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். இதேபோலத்தான் பெண்களைத் “தலாக்” செய்வதிலும். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான முறை இருக்கிறது.

இதைப் பற்றியெல்லாம் வெளிப்படையாகப் பேசி விவாதத்தை உருவாக்கினால்தான் ‘இஸ்லாம்’ குறித்த தவறான அபிப்பிராயங்கள் மற்றவர்களுக்கு உருவாகாது என்று அந்தக் கூட்டத்தில் சொன்னேன். உடனே, அங்கிருந்த முஸ்லீம் எழுத்தாளர் ஒருவர் – அங்கு அவர் முக்கியமான கவிஞராம் – “இஸ்லாம் ஒரு முழுமையடைந்த ஒரு மதம். குரானும் முழுமையடைந்த வேதம். அதைப்பற்றி இங்கு யாரும் பேசக்கூடாது. விவாதிப்பது என்ற வார்த்தையே சொல்லக்கூடாது. நீங்கள் பேசியது தவறு” என்று மிக் கடுமையான கோபத்துடன் பேசினார்.

தமிழகத்திலிருந்து எங்களை இலஙகைக்கு அழைத்திருந்தவர்கள் “Muslim Women’s Research and Action Forum” என்ற அமைப்பை நடத்தும் ஐந்து முஸ்லீம் பெண்கள். முற்போக்கான எண்ணம் கொண்டவர்கள். அவர்களுக்குக் கொஞ்சம் தர்மசங்கடமாகிவிட்டது. இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்தவேண்டாம் என்று சொல்லி முடிவுக்குக் கொண்டுவந்தார்கள். எதிராகப் பேசியவர்களின் குணம் தெரிந்து அப்படிச் செய்தார்கள். எதிராகப் பேசிய அந்தக் கவிஞர் என் தம்பியுடம் என்னைப் பற்றித் தவறாகப் பேசியிருக்கிறார். “இதை நான் சாதாரணமாக விடமாட்டேன்” என்றும் மிரட்டல் தொனியில் சொல்லியிருக்கிறார்.

இஸ்லாமிய மத ரீதியான நம்பிக்கை தமிழகத்தைவிட இலங்கையில் அதிகமாக உள்ளதோ?

இலங்கையில் நம் ஊரில் இருப்பதைவிடத் தீவிரமாகவே உள்ளது. தாங்கள் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வெளிப்படுத்திக்கொள்ள மிகுந்த ஆர்வமாக உள்ளார்கள். அதற்கு முக்கியமான காரணம் அவர்களது வாழ்க்கைநிலை. தமிழ் முஸ்லீம் என்ற அடையாளத்தை விரும்பியே வகுத்துக்கொள்கிறார்கள்.

“நான் தமிழனல்ல. முஸ்லீம். புலிகளுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை. அவர்கள் வேறு ஆட்கள். அவர்கள் சுதந்திரத்திற்காக அவர்கள்தான் போராடுகிறார்கள். நாங்கள் போராடவில்லை” என்பதை சிங்கள ராணுவத்திற்கும் அரசிற்கும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது. காரணம் புலிகளினால் அதிகமான கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதனால் தங்களைத் தனிச் சமூகமாகக் காட்டிக்கொண்டு தங்களைக் காப்பாற்றிக்கொள்கிறார்கள். புலிகளின் மீதான வெறுப்பை வெளிப்படையாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. மத அடையாளத்தைக் காட்டிக்கொண்டு தங்களின் உயிரையும் சொத்தையும் பாதுகாத்துக் கொள்கிறார்கள். இனப்பிரச்சினை தீவிரமடைவதற்கு முன்பெல்லாம் பெண்கள் வெளியில் செல்லும்போது ஃபுர்கா அணிந்து செல்லமாட்டார்களாம். ஆனால் இப்பாதெல்லாம் ஃபுர்கா அணியாமல் முஸ்லீம் பெண்கள் வெளியில் செல்வதே இல்லை. அதனால் தனி ஒரு இனமாகக் காட்டிக் கொள்கிறார்கள். வீட்டிற்குள் இருக்கும்போது எப்படியிருந்தாலும் வெளியில் வரும்போது முஸ்லீம் என்ற அடையாளத்துடன்தான் வருகிறார்கள். “தமிழர்களல்ல நாங்கள். முஸ்லீம்கள்” என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் அவர்களின் தாய்மொழி தமிழ்தான். “புலிகள்மீது எங்களுக்குச் சிறிதளவும் நம்பிக்கையில்லை. அவர்களிமிடருந்து தனித்து நிற்கவே விரும்புகிறோம்” என்பதே அவர்கள் நிலை.

நான் அங்கு இருந்த சமயத்தில்கூட கிளிநொச்சியில் கலவரம் நடந்தது. அதைக்கூட உதாரணமாகக் காட்டி அவர்கள் எப்போதுமே இப்படித்தான் நம்மை அவமானப்படுத்துகிறார்கள் என்று கோபமாகச் சொன்னார்கள். புலிகளின் தலைமை முஸ்லீம்களுடன் சமாதானத்தை விரும்பினாலும்கூட மாவட்டப் பிரதிநிதிகளின் முஸ்லீம் வெறுப்பு அதைச் சாதிக்கவிடாது என்றே பெரும்பான்மையோர் சொன்னார்கள். ஒரு சில விஷயங்களை அவர்கள் சொன்னபோது மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.

தமிழகத்திலுள்ள முஸ்லீம் சமூகத்திற்கும் இலங்கையில் உள்ள முஸ்லீம் சமூகத்திற்கும் இடையே என்னவிதமான வேறுபாடுகளை உணர்ந்தீர்கள்?

அங்குள்ளவர்கள் கலாச்சாரரீதியாக மிகுந்த சுதந்திரத்துடன் இருக்கிறார்கள். நம்முடைய கலாச்சாரம் எல்லாப் பெண்களுக்கும் ஒருவித மனத்தடையை உருவாக்கியிருக்கிறது. அவர்கள் வீட்டில் இருக்கும்வரை முஸ்லீம்கள் என்ற அடையாளத்தைப் பார்க்க முடியவேயில்லை. முஸ்லீம் பெண்கள் இந்த அளவிற்குச் சுதந்திரமாக இருப்பதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. உடைகளிலிருந்து பேசுவதுவரை நிறைய வித்தியாசத்தைப் பார்த்தேன். பெண்களுக்கு நல்ல கல்வி கிடைத்திருக்கிறது. வேலைக்குச் செல்கிறார்கள். இப்படிப் பல விஷயங்கள் அங்கு சாத்தியமாகி இருக்கிறது. தமிழகத்தில் அந்த அளவிற்கு இல்லை என்பதை உணர்ந்தேன்.

நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்?

நான் ஒன்பதாவது வகுப்பை முழுமையாக முடிக்கவில்லை. ஒன்பதாவது படிக்கும் சமயத்தில் எங்கள் ஊரான துவரங்குறிச்சி தியேட்டரில் ஏதோ ஒரு படம் போட்டிருந்தார்கள். அந்தக் காலத்தில் திரைப்படம் என்பது ஒரு அதிசயமானது. நூலகத்திற்குத்தான் நான் போனேன். அதற்கு அருகில்தான் திரையரங்கு. திரைப்படப் பாடல்களின் ஓசை கேட்டுக்கொண்டே இருக்கிறது. சனி ஞாயிறு மட்டும்தான் பகல்காட்சி நடைபெறும். திரைப்படப் பாடல்கள் காதில் தொடர்ந்து விழுந்துகொண்டிருக்க நாமும் ஏன் சினிமாவிற்குச் செல்லக்கூடாது என்று எனக்கும் என்னுடன் நூலகத்தில் இருந்த இரண்டு தோழிகளுக்கும் தோன்றியது. எங்கள் கையிலும் காசிருந்ததால் உடனே திரையரங்குக்குள் போய்விட்டோம். என்ன படம் என்றெல்லாம் நாங்கள் பார்க்கவில்லை. உள்ளே போனால் பெண்கள் யாரும் இல்லை. எல்லாம் ஆண்கள். மதிய நேரத்தில் பெண்கள் யாரும் படத்திற்கு வரமாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டோம். படம் பார்க்க வந்த ஆண்கள் எல்லோரும் எங்களையே அதிசயமாகப் பார்க்கிறார்கள். எங்கள் முகத்தை யாராலும் பார்க்க முடியவில்லை. படம் திரையில் ஒட ஆரம்பித்ததும்தான் அதிர்ச்சியடைந்தோம்.

அது ஒரு மலையாள ‘ஏ’ படம். ஆண்கள் பகுதியில் கூட்டம் நிரம்பியுள்ளது. அதில் என் தம்பியும் இருப்பதைப் பார்க்கிறேன். பெண்கள் பகுதியில் நாங்கள் நாலே நாலு பெண்கள் மட்டும்தான். ஆண்கள் யாரும் திரையில் நடப்பதைப் பார்க்காமல் எங்களையே கண்கொட்டாமல் பார்க்கிறார்கள். எங்கள் எல்லோருக்கும் உடலே நடுங்குகிறது. பெருத்த அவமானமாக உணர்கிறோம். வீட்டிற்குத் தெரிந்தால் வெட்டிக் கொன்றுவிடுவார்கள். படத்தை நாங்கள் பார்க்காமல் தரையைப் பார்த்தபடியே இருக்கிறோம். படம் முடிந்து எல்லோரும் வெளியே போய் அரை மணி நேரத்திற்குப் பின்பு உள்ளேயே உட்கார்ந்திருக்கிறோம். பயத்திலும் அதிர்ச்சியிலும் எங்களுக்கு வியர்த்துக் கொட்டுகிறது. தயக்கத்துடன் நாங்கள் வெளியில் சென்றால் எல்லா ஆண்களும் திரையரங்கு வாசலைப் பார்த்துக்கொண்டே நிற்கிறார்கள். நாங்கள் யாராக இருக்கும் என்பதைத் தெரிந்துகொண்டுதான் போவோம் என்பதைப்போல் எல்லோருமே நிற்கிறார்கள். வீட்டிற்குப் போவதற்கு முன்பே அம்மாவிற்குத் தகவல் போய்விட்டது. அன்றிலிருந்து பள்ளிக்குப் போகவில்லை. அப்போதே தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன். தம்பி அதே படத்தைப் பார்க்கிறான். அவன் அடுத்த நாளிலிருந்து பள்ளிக்குப் போகவே செய்கிறான்; எந்தத் தண்டனையுமின்றி. அந்தச் சமயத்தில்தான் நான் வேறு அவன் வேறு என்ற பாகுபாடை உணரச் செய்தார்கள். பெண் என்ற ஒரே காரணத்திற்காக என் படிப்பு பறிக்கப்படுகிறது.

அதேபோல பக்ரீத், ரம்ஜான் சமயத்தில் நல்ல உடை உடுத்தி வெளியில் சென்று எல்லா ஆண்களும் ஒன்று சேர்ந்து தொழுகை நடத்துவார்கள். ஆனால் பெண்கள் ஒன்று சேர முடியாது. அப்போது எனக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தது. பெண்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தொழுகை நடத்தினால் என்ன என்று தோன்றியிருக்கிறது. நம்மை மட்டும் ஏன் பள்ளிவாசலில் தொழுகைக்கு அனுமதிப்பதில்லை, வீட்டிற்குள்ளேயே பெண்கள் இருக்க வேண்டிய அவசியம் என்ன என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். சொந்த வாழ்க்கை அனுபவம்தான் எல்லாவற்றையும் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. வேறுவிதமான சிந்தனைகளுக்கும் இதுதான் காரணம் என்றும் நினைக்கிறேன். எவ்வளவு படிப்பிருந்தாலும் அனுபவம்தான் மிகவும் முக்கியமானது மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்திருந்தால் என்னால் எதுவும் எழுதியிருக்க முடியுமா என்று தெரியவில்லை.

அம்பையின் எழுத்துக்களில் வலிந்து சொல்லும் பெண்ணியக் கருத்துக்கள் தூக்கலாக இருப்பதாகப் பலர் சொல்கிறார்கள். உங்களின் எழுத்துக்களில் அப்படி இல்லை என்பதைப் பார்க்க முடிகிறது. இதை எப்படி அடைந்தீர்கள்?

எந்த அளவிற்கு அதிகமான அடக்குமுறைக்கு உள்ளாகிறோமோ அந்த அளவிற்குத் தீவிரமான வெளிப்பாடாக எழுத்துக்கள் வெளிவரும் என்றே நம்புகிறேன். இதை எனது படைப்புகளை முன்வைத்தே நிரூபிக்க முடியும். சிந்தனை ரீதியான புதிய விஷயங்களே அம்பையின் கதைகளில் தூக்கலாகத் தெரியும்.

சிந்தனை, வாசிப்பு அனுபவம் சார்ந்தே பெரும்பாலான கதைகளை அம்பை எழுதியிருக்கிறார். இதை அம்பையின் ‘காட்டில் ஒரு மான்’ கதைத் தொகுப்பைப் பற்றிய என் விமர்சனத்தில்கூட பதிவு செய்துள்ளேன். அதை அவர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால் எனது எழுத்துக்கள் என் வாழ்பனுபவம் சார்ந்து இருப்பதால் யதார்த்தமாகவும் இருக்கிறது. பெண்ணியம் பற்றிய தீவிரமான கருத்துகளை பலபேர் குறைசொல்லிக் கேட்டிருக்கிறேன். தீவிரமாகப் பேசுவதாலோ பிறரோடு சண்டை போடுவதாலோ எந்தப் பிரயோஜனமும் இல்லை. அமைதியாகவும் சிறிய வார்த்தைகள் மூலமாகவும் பெண்ணியக் கருத்துக்களைத் தீவிரமாகச் சொல்ல முடியும் என்றே நம்புகிறேன். அம்பையின் செயல்பாடுகள் அவரைப் பொறுத்தளவில் சரியானதுதான். அதை நான் குறையாகச் சொல்லவில்லை.

ஒரு பெண்ணாகப் பிறந்தவர்களுக்கு இங்கே என்ன நடக்கிறது என்பதை அனுபவபூர்வமாக நான் உணர்கிறேன். என் நிலைமைதான் இங்கு எல்லாப்பெண்களுக்கும்.

“ஒரு மாலையும் இன்னொரு மாலையும்” தொகுப்பு முன்னுரையில் மொழியின் போதாமை பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். இப்போதும் அப்படித்தான் நினைக்கிறீர்களா?

பெண்ணிற்கான மொழி இன்னும் வீரியத்துடன் வெளிப்பட வேண்டும் என்ற கருத்து எல்லோருக்குமே இருக்கிறது. ஆனால், நம்மிடம் இருக்கும் மொழியை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளோமா என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டால் ‘இல்லை’ என்ற பதிலையே நான் இப்போதும் சொல்ல விரும்புகிறேன். ஆனால், அதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது என்ற நிறைவின்மை இருந்துகொண்டுதான் இருக்கிறது. பெண்களுக்கான மொழியை பெண்கள்தான் உருவாக்க வேண்டும். இன்றைய மொழி ஆணின் சிந்தனைக்கேற்ற மொழியாகத்தான் இருக்கிறது. பெண்கள் சிந்திப்பதுகூட ஆணின் சிந்தனை முறையை ஒட்டித்தான் வருகிறது.

பெண்மொழி என்பதற்கான வரையறை என்ன என்று சொல்ல முடியுமா?

ஆணின் சிந்தனையை இரவல் வாங்கித்தான் பெண்ணும் சிந்திக்க வேண்டியுள்ளது. இது தவறு என்ற யோசனையே இல்லாமல்தான் பெண்ணும் யோசிக்கிறாள். பெண்கள் தங்களுக்கென்று சுயமான சிந்தனையை வளர்த்தெடுத்துக்கொள்ள வேண்டும். நடைமுறை வாழ்க்கையை வைத்துக்கூட இதை விளக்க முடியும். ஒரு ஆண் வரதட்சணை கேட்கும் அதே நேரம் பெண்ணும் கேட்கிறாள். மகனுக்குத் திருமணம் செய்விக்கும் அம்மா வரதட்சணை கேட்பதிலும் மகனுடன் போட்டிபோடுகிறாள். திருமணமான பின்பு அவள் இருக்கும்வரை அவளை வைத்துச் சாப்பாடு போடுகிறோம். காப்பாற்றுகிறோம். அதற்காகக் கொடுக்கப்படும் சிறிய தொகைதான் நீங்கள் கொடுப்பது என்றெல்லாம் ஒருபெண்தான் சொல்கிறாள். இப்படிப் பேச வைப்பது ஒரு ஆணின் சிந்தனைதான். இப்படியான சிந்தனைகளிலிருந்து வெளிவரும்போதுதான் பெண்ணிற்கான முழுமையான சிந்தனை வரும். யாரைப் பற்றி, யாருக்காகச் சிந்திக்கிறோம் என்றுகூட அறியாமல் பெண்கள் இருக்கிறார்கள். ஒரு ஆணின் பிரதிநிதியாக ஏன் செயல்பட வேண்டும் என்பதையும் யோசிப்பதில்லை.

பெண்களுக்காகப் படைப்புரீதியாகக் குரல்கொடுத்த அம்பை போன்றவர்கள் பெண் ஆண் என்று தீவிரமான வேறுபாடைச் சொன்னதில்லை. ஆனால் இப்போது குட்டிரேவதி, மாலதிமைத்ரி, நீங்கள் எல்லோரும் அப்படியான பாகுப்பாட்டை விரும்புவது ஏன்?

‘அம்பை’ தன்னைப் பெண் என்ற அடையாள வட்டத்துக்குள் மட்டுமே வைத்துக்கொள்ள மாட்டார்கள். அதை விரும்பவும் மாட்டார்கள். ஆனால் எனக்கென்னவோ பெண், ஆண் என்ற பாகுபாடு அவசியமாகத்தான் தோன்றுகிறது. பெண் தன்னைப் பாகுப்படுத்திக்கொண்டு தன் விடுதலையை நோக்கியப் பயணத்தை ஏன் மேற்கொள்ளக் கூடாது? அம்பையிடம் கூட இதைப் பற்றிப் பேசியிருக்கிறேன். அவர்களது தளம் அறிவுபூர்வமானது. அறிவும் உணர்வும் சேரும்போதுதான் சிறப்பான படைப்புகள் வெளிவரும். இப்போது எழுதியுள்ள என்னுடைய நாவலைக்கூட இப்படியானதாகத்தான் நினைக்கிறேன். என் அனுபவங்களை உணர்வுபூர்வமாக மட்டும் பார்க்கக்கூடாது. புதிய பார்வைகளை உருவாக்கும் விதமாக எழுதியிருக்கிறேன். என் அனுபவத்தை எல்லோருக்கும் பொதுவான விஷயமாக மாற்றுவதுதான் படைப்பின் வெற்றியாக நினைக்கிறேன். மேலும் உணர்வுகளை அறிவுரீதியாகச் சிந்தித்து படைப்பாக மாற்றுவதை விரும்புகிறேன்.

நவீனப் பெண் படைப்பாளிகள் பலர் பெண் உடலைக் கொண்டாடுவது பற்றிப் பல இடங்களில் பேசுகிறார்கள். பெண் உடலைக் கொண்டாடுவது என்றால் என்ன?

மற்றவர்கள் எதை உணர்த்த இப்படிப் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. பொதுவாக உடல் என்பதையே அருவருப்பான ஒன்றாகத்தான் பார்த்து வந்திருக்கிறோம். இதையட்டி நம் மனம் முழுக்கக் குற்ற உணர்ச்சி நிரம்பி உள்ளது. இந்தக் குற்ற உணர்ச்சியிலிருந்த ஆண் பெண் பாகுபாடில்லாமல் சகலரும் மீள வேண்டிய தேவை உள்ளது. சினிமா, தொலைக்காட்சி மூலம் நம் கலாச்சாரம் கெட்டுபோய்விட்டது என்ற புலம்பல்களுக்கும் காரணத்தைத் தேடினால் உடல் பற்றிய நம் அறியாமையும் கற்பனையும்தான் வெளிப்படும். (தமிழ் சினிமா இதற்கு விதிவிலக்கு.) உடல் என்பது அருவருக்கத்தக்கதல்ல என்பதை நிரூபித்துவிட்டாலே பல தேவையற்ற சிக்கல்களுக்கு விடை கிடைக்கும். இதைப் பற்றி பலவிதமாக யோசித்தாலும் எதிலிருந்தும் விடுபடமுடியாத தன்மைதான் தொடர்கிறது. மேலும் பெண் உடல் “தீட்டு”, “பாவம்” என்று இன்றுவரை சொல்லப்பட்டுத்தானே வருகிறது. இதிலிருந்து முழுவதுமாக விடுபடவேண்டும் என்பதே என் எண்ணம். இதை என் கவிதையிலும் சொல்லியிருக்கிறேன்.

உங்கள் கவிதைகளில் வழியற்று ஒடுங்கிப்போன பெண்ணின் உணர்வுதான் மேலோங்கியிருக்கிறது. மீண்டு வர வேண்டும் என்றோ, மீற வேண்டும் என்றோ கவிதைகளில் காண முடியவில்லையே?

மீள வேண்டும். மீற வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் அதற்கான சந்தர்ப்பமோ சூழலோ எனக்கில்லை. ஒரு வட்டத்திற்குள்தான் சுற்றிவருகிறேன். இந்த வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. எப்போதும் யாரையாவது சார்ந்து வாழ வேண்டும் என்பதே அவநம்பிக்கையையே ஏற்படுத்துகிறது. வெளி உலகம் பற்றிய பயம் சிறு வயதிலிருந்தே கற்பிக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து மீண்டு வருவது கஷ்டம்தான். ஆனாலும் மீண்டுவிடுவேன் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. நான் எழுதத் தொடங்கியதிலிருந்தே அதற்கான முதல் அடியை எடுத்து வைத்துவிட்டேன் என்பதுதான் உண்மை.

உங்கள் ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு வெளிவந்தவுடன் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளீர்கள். இது ‘பெண்’ என்ற ஒரே காரணத்திற்காகவா?

எனக்கு மட்டுமல்ல. சமீபத்தில் எழுதும் எல்லாப் பெண்களுக்குமே கவனம் கிடைத்திருக்கிறது. எத்தனையோ தொகுப்புக்கள் போட்ட ஆண்களைவிட குட்டிரேவதி, மாலதிமைத்ரி ஆகிய பெண் கவிஞர்களுக்கு நல்ல கவனம் கிடைத்திருக்கிறது. பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்தவுடன் மற்றவர்களைவிடக் கொஞ்சம் கூடுதலான கவனம் கிடைத்திருப்பது உண்மைதான். நவீன இலக்கிய ஆர்வமுள்ள ஒருவர் அரசியலுக்குள் வரும்போது இப்படியான கவனம் கிடைப்பதைத் தவிரக்க முடியாது.

மேலும் இப்போது எழுதும் என்னைப் போன்ற பல பெண்கள் புதுவிதமாக எழுதத் தொடங்கியிருகிறார்கள். தமிழில் இதுவரை இல்லாததைச் சொல்லும்போது பெண்களுக்குக் கிடைக்கும் கவனம் எனக்கு மகிழ்ச்சியையே தருகிறது. “இப்படியான கவனம் இடதுஒதுக்கீடு போல” என்று ஒரு சிலர் இதைக் குறை கூறுவார்கள். நல்ல விஷயங்களுக்குக் கவனம் கிடைக்காத ஒரு சூழலில் கவனம் கிடைக்கும்போது அதை ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது? இந்தக் கவனம் பிற பெண்களுக்கும் எழுதுவதற்கான ஆர்வத்தைத் தூண்டும் என்றே நினைக்கிறேன். அரசியலுக்கு வந்த இந்த ஒரு வருடத்தில் எனக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. இது மிகுந்த ஆறுதலாகவும் உள்ளது. உதாரணமாக பேரூராட்சி சார்ந்த அலுவலக விஷயமாகப் பல அதிகாரிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அரசு எந்த அளவுக்கு சீர்குலைந்து போயிருக்கிறது என்பதைப் பார்த்து உணர முடிகிறது. இந்த ஓராண்டிற்குள் சலிப்புத்தான் வந்திருக்கிறது. தேர்ந்தெடுத்த மக்களுக்கு எந்தவிதப் பயனுமின்றித்தான் செயல்படவேண்டுமோ என்றுகூடத் தோன்றும். பஞ்சாயத்துத் தலைவர்கள் எந்த அளவிற்கு அலைக்கழக்கப்படுகிறார்கள் என்பதையும் பார்க்கிறேன்.

ஒவ்வொரு அதிகாரியைச் சந்திக்கும்போது நான் எழுத்தாளர் என்று வேண்டுமென்றே அறிமுகம் செய்துகொள்வேன். அப்போது கொஞ்சம் பயப்படவே செய்கிறார்கள். ‘விஷயம் தெரிந்த ஆள்’ இவர்களை அலைக்கழிக்கக்கூடாது என்ற திடீரென்று அவர்களுக்கே தோன்றுகிறது. ‘இந்தியன் எக்ஸ்பிரஸி’ல் வந்த என் பேட்டியை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் காட்டினேன். அதை அவரிடம் காட்டிப் பெருமையடித்துக்கொள்வது என் நோக்கமல்ல. அதனால் ஒரு ஃபைல் நகர்கிறது.

இந்நிலையில் பொதுஜனங்களும் படிப்பறிவு குறைவான பஞ்சாயத்துக் தலைவரும் அரசு அதிகாரிகளை எப்படி அணுகுக முடியும் என்ற சிந்தனையும் எனக்குள் ஓடும்.

வீட்டிற்குள்ளேயே இருந்த நீங்கள், ‘பஞ்சாயத்துத் தலைவி’ என்ற பதவிக்காகப் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டிய அவசியம் இப்போது. அந்த அனுபவம் கவிதைகளாக மாறுகிறதா?

அலுவலக விஷயமாகப் பல இடங்களுக்குப் போனாலும் களத்தில் இறங்கிப் பணிபுரியவில்லை. களத்தில் இறங்கிப் பணிபுரியும் சூழல் எனக்கு இல்லை. இதை வெட்கத்தோடு ஒப்புக்கொள்கிறேன். எவ்வளவோ செய்ய வேண்டி இருக்கிறது. ஆனாலும் முடியவில்லை. இப்போது நான் ஒரு ஊசிமுனையில் நின்றுகொண்டிருப்பதாகவே உணர்கிறேன். குறிப்பிட்ட ஒரு வரையறைக்குள்தான் இருக்கிறேன். களத்தில் இறங்கிப் பணிபுரிவது தடுக்கப்பட்டுத்தான் வருகிறது. மக்களோடு சேர்ந்து பல காரியங்களைச் செய்ய யோசிக்கவே செய்கிறேன். ஆனாலும் அது முடியாமல்தான் உள்ளது. அப்படியான சூழலும் அனுபவமும் வாய்க்கும்போது அது என் படைப்பிலும் வெளிப்படும். இப்போது எனக்கிருக்கும் அரசியல் அனுபவத்தை வைத்துக் கட்டுரைகள் எழுதலாம். ஆனால் கதை, கவிதை போன்ற படைப்புகளாக அது வெளிப்பட வாய்ப்பில்லை.

நீங்கள் ‘தினமணி’ இதழில் எழுதிய கட்டுரை நன்றாக இருந்தது.

அந்தக் கட்டுரைக்குப் பலதரப்பினரிடமிருந்து பாராட்டுக் கிடைத்தது. எனக்கு அரசு யந்திரம் அரசுத் திட்டங்கள் சார்ந்து பல விமர்சனங்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றாக மனதில் குவிந்துகொண்டே வருகின்றன. பின்னாட்களில் கட்டுரைகளாக அவைகளை எழுதுவேன். இப்போது எழுதினால் வேறுவிதமான எதிர்வினைகளை எதிர்கொள்ள நேரும். அரசைச் சார்நது செயல்படும் பணியில் இருந்துகொண்டு எழுத வேண்டாம் என்று நினைக்கிறேன். பதவியில் இல்லாதபோது எழுதுவதுதான் சரியானது. உதாணரத்திற்கு ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். குமுதம் ஜங்ஷனில் வந்த பேட்டியைப் படித்த அதிகாரி ஒருவர் என்னைத் தொலைபேசியில் அழைத்து “நன்றாக இருந்தது” ஆனால் “நீங்கள் ஒரு எழுத்தாளர் என்பதற்காகத்தான் உங்களை உபசரிக்கிறோமா?” என்று வருத்தப்பட்டார். நான் சொன்னேன், “உங்களை நினைத்து அப்படிச் சொல்லவில்லை. மற்றவர்களிடம் உணர்ந்ததை அந்தப் பேட்டியில் சொல்லியிருக்கிறேன்” என்று சொன்னவுடன், அதை ஒத்துக்கொண்டார். பதவியில் இருப்பதால் வெளிப்படையாகப் பேசுவதில் உள்ள சிரமம் இதுதான்.

இதுவரை நீங்கள் படித்தவை மற்றும் எழுதியவை மூலம் “கவிதை என்றால் என்ன” என்ற வரையறையை அடைந்துள்ளீர்களா?

நாம் அன்றாடம் எவ்வளவோ விஷயங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அப்போது நமக்கு நெருக்கமான விஷயத்தைக் கவிதையில் கொண்டு வரும்போது அந்த விஷயம் எல்லோருக்கும் நெருக்கமான அனுபவமாக மாறுகிறது. அந்த அனுபவம் படிப்பவர்களின் உள்ளே எதாவது ஒன்றைத் திறக்க வேண்டும். எனக்குள் திறந்த விஷயம் இன்னொருவருக்கும் திறக்க வேண்டும். இதைத்தான் கவிதை என்ற உணர்கிறேன். யாராவது ஒரு கவிஞனின் கவிதையை நான் படித்துக்கொண்டிருக்கும்போது எனக்குள் படிந்திருந்த ஏதோ ஒரு விஷயத்தைத் திடீரென்று ஞாபகப்படுத்தும். இதைத்தான் கவிதை என்று நினைக்கிறேன்.

கவிதை சத்தமாகப் பேச வேண்டும் என்றோ அது பலவிதமான வரையறைகளைக் கொண்டுள்ளது என்றோ நான் நினைக்கவில்லை. எப்படியான அனுபவத்தையும் சாதாரண வார்த்தைகளில் சொல்ல முடியும். ஹமீதின் (மனுஷ்ய புத்திரன்) சமீபத்திய கவிதைகள் எல்லாமே எளிய வார்த்தைகளைக் கொண்டவை. பெரிய பெரிய படிமங்களோ விஷயங்களோ கொண்டவை அல்ல. ஆனால் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள விஷயங்களைத் திறந்துவிட்டிருக்கிறது. அப்படித்தான் கவிதை இருக்க வேண்டும். முடிந்த அளவிற்கு நானும் எளிய சொற்களைக் கொண்டுதான் எழுதிவருகிறேன். குறுக்கே வரும் பெரிய படிமங்களைக்கூடத் தூக்கி எறிந்திருக்கிறேன். சட்டென்று ஒருவரிடம் திறப்பைக் கொண்டுவர வேண்டும். ழாக் ப்ரெவரின் கவிதைகளைப் படித்தபோது இதை உணர்ந்தேன். மிகச் சாதாரண வார்த்தைகளில், மனதுக்குள் உறைந்திருந்த ஒளிந்திருந்த விஷயங்களைத் துருவி எடுக்கிறது. நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிரெஞ்சு கவிஞனின் எண்ணமும் நம் எண்ணமும் எப்படி ஒரே அலைவரிசையில் வருகிறது? கவிதை என்ற மொழிதான் இதை சாத்தியப்படுத்துகிறது.

பெண்களுக்காகப் படைப்புரீதியாகக் குரல்கொடுத்த அம்பை போன்றவர்கள் பெண் ஆண் என்று தீவிரமான வேறுபாடைச் சொன்னதில்லை. ஆனால் இப்போது குட்டிரேவதி, மாலதிமைத்ரி, நீங்கள் எல்லோரும் அப்படியான பாகுப்பாட்டை விரும்புவது ஏன்?

‘அம்பை’ தன்னைப் பெண் என்ற அடையாள வட்டத்துக்குள் மட்டுமே வைத்துக்கொள்ள மாட்டார்கள். அதை விரும்பவும் மாட்டார்கள். ஆனால் எனக்கென்னவோ பெண், ஆண் என்ற பாகுபாடு அவசியமாகத்தான் தோன்றுகிறது. பெண் தன்னைப் பாகுப்படுத்திக்கொண்டு தன் விடுதலையை நோக்கியப் பயணத்தை ஏன் மேற்கொள்ளக் கூடாது? அம்பையிடம் கூட இதைப் பற்றிப் பேசியிருக்கிறேன். அவர்களது தளம் அறிவுபூர்வமானது. அறிவும் உணர்வும் சேரும்போதுதான் சிறப்பான படைப்புகள் வெளிவரும். இப்போது எழுதியுள்ள என்னுடைய நாவலைக்கூட இப்படியானதாகத்தான் நினைக்கிறேன். என் அனுபவங்களை உணர்வுபூர்வமாக மட்டும் பார்க்கக்கூடாது. புதிய பார்வைகளை உருவாக்கும் விதமாக எழுதியிருக்கிறேன். என் அனுபவத்தை எல்லோருக்கும் பொதுவான விஷயமாக மாற்றுவதுதான் படைப்பின் வெற்றியாக நினைக்கிறேன். மேலும் உணர்வுகளை அறிவுரீதியாகச் சிந்தித்து படைப்பாக மாற்றுவதை விரும்புகிறேன்.

உங்களைப் பற்றிய சுயமதிப்பீடு?

நம்மைப் பற்றிய மிகையான மதிப்பீட்டை வைத்துக்கொள்வது தேவையற்றது என்றே நினைக்கிறேன். பல சமயங்களில் என் கவிதைகளில் நான் சொல்ல நினைத்ததைச் சொல்லவில்லையோ என்றே தோன்றும். படைப்புரீதியான நிறைவு எப்போதும் வந்துவிடக் கூடாது. நிறைவின்மை, போதாமை இருந்துகொண்டுதான் இருக்கிறது. எல்லாப் படைப்பாளிகளுக்குமே இப்படித்தான் இருக்கும் என்றே தோன்றுகிறது. தேவையற்ற பிரமைகளை ஏற்படுத்திக்கொள்வது நம்மை வளர்த்தெடுக்காது. மிகையான சுய மதிப்பீட்டை எப்போதும் நான் வைத்துக்கொண்டதில்லை. ஆனாலும் என் படைப்புகளுக்குக் கூடுதலான கவனத்தை எல்லோரும் கொடுக்கிறார்கள். இது நல்லதுதான். என் பொறுப்பை அதிகப்படுத்தவே இது பயன்படுகிறது.

இதுவரை எதுவுமே நான் சொல்ல ஆரம்பிக்கவில்லை. ஆனால் எல்லாவற்றையும் சொல்லிவிட்டது போல மற்றவர்கள் உணர்வதுதான் ஆச்சர்யமளிக்கிறது.

ஆரம்ப காலத்தில் நீங்கள் படித்த புத்தகத்திலிருந்து இன்று வரையிலான படிநிலைகளைச் சொல்லுங்கள்.

ஆரம்பத்தில், கிடைத்த புத்தகத்தை எல்லாம் படித்தேன். அப்போது இந்தப் புத்தகம்தான் கிடைக்கும் என்று தேர்வு செய்து படிக்கும் நிலை இருந்ததில்லை. ரஷ்ய இலக்கியங்கள் நிறையக் கிடைத்தன. வேறு எந்தத் தெடர்பும் இருந்ததில்லை. மார்க்சியம் சார்ந்த விஷயங்களில் ரொம்ப ஆழமான தேடலும் ஆர்வமும் இருந்தது. ரஷ்ய இலக்கியங்கள் ரஷ்யாவைச் சொர்க்க பூமியாகக் காட்டின. வாழ்நாளில் ஒரு முறையாவது அந்தப் பூமியை மிதிக்க வேண்டும் என்று இப்போதும் நினைத்துக்கொள்கிறேன். ரஷ்யா என் கனவுபூமியாக இருந்துகொண்டே இருக்கிறது. ரஷ்யாவின் வீழ்ச்சியைப் படித்தபோது என்னால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. அந்த அளவிற்கு ரஷ்ய இலக்கியத்தின்மீதும் ரஷ்ய நகரங்கள் மீதும் அதீதக் காதல் இருந்தது.

பின்பு கவிதைகள் சார்ந்த விஷயங்களை வாசிக்க ஆரம்பித்தேன். நாவல், சிறுகதை என்று பின்னால் விரிந்தது. நண்பர்கள் நல்ல புத்தகங்கள் என்று சொல்வதை வாங்கிப் படித்தேன்.

இதுதான் படிக்கவேண்டும் இதெல்லாம் படிக்கக்கூடாது என்று எப்போதும் நினைத்ததில்லை. அரசியலோ, கவிதை, சிறுகதையோ, கட்டுரையோ எந்த வகையான நூலாக இருந்தாலும் படிப்பதில் ஆழமான ஆர்வம் உண்டு. பெரியாரைப் பற்றிய நூல்களையும் முன்பே படித்துள்ளேன்.

மதுரை சோகோ டிரஸ்டின் சட்டங்கள், சுற்றுச்சூழல் பற்றிய நூல்களை இப்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

ஹமீதைப் பார்க்க வரும் இலக்கிய நண்பர்கள் மூலமாக அம்மா வந்தாள், மரப்பசு, ஆத்மாநாம் கவிதைகள், ஜெயகாந்தன் படைப்புகள், அசோகமித்திரன் இப்படிப் பலரின் நூல்களும் படிக்கக் கிடைத்திருக்கின்றன. தேடிப்போய் வாங்கத் தெரியாது. உள்ளூர் நூலகத்தில் தேடிப் படிப்பது உண்டு.

86 ஆம் ஆண்டு வாக்கிலேயே ஜே.ஜே. சில குறிப்புகள் கோயம்புத்தூரிலிருந்து வந்த ஜோசப் என்ற நண்பர் மூலம் கிடைத்தது. எக்ஸிஸ்டென்ஷியலிஸம் எஸ்.வி.ஆர். எழுதியிருந்த புத்தகம் மூலமாக ‘இஸங்கள்’ பற்றிய அறிமுகம் கிடைத்தது. 90களின் தொடக்கத்தில் எஸ்.வி.ஆரின் தொடர்பு கிடைத்ததின் மூலம் ‘ரஷ்யப் புரட்சி – இலக்கிய சாட்சியம்’ நூலை அனுப்பிவைத்திருக்கிறார். அவர் மூலமாகவே அன்னா அக்மதேவா கவிதைகள், கிராம்ஷி எல்லாம் கிடைத்தது. எல்லாமே படித்திருந்தாலும் ‘இஸங்கள்’ மீது பெரிய அளவில் ஈடுபாடில்லை. ரஷ்ய இலக்கியம் பின்பு விடுபட்டுப்போயிற்று.

சுந்தர ராமசாமியின் அறிமுகம் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?

என்னுடைய கவிதைகள், ஹமீதின் கவிதைகளைப் படித்துவிட்டு லல்லி எங்களைப் பார்க்க வந்திருந்தார். அப்போது எனக்குத் திருமணமாயிருந்த சமயம். இந்தியன் எக்ஸ்பிரஸில் அப்போது சுந்தர ராமசாமியின் கதை படித்திருந்தேன். ‘சன்னல்’ என்ற கதை. அந்தக் கதை எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. ஜே.ஜே. சில குறிப்புகள், புளியமரத்தின் கதை எல்லாம் படித்திருந்தேன். சுந்தர ராமசாமி மீது அப்போதே பெரிய அளவில் எனக்கு மதிப்பு உருவாகியிருந்தது.

அவரை இளைஞராக நினைத்துக்கொண்டிருந்தேன். ஜே.ஜே. சில குறிப்புகளில் வரும் இளமையும் உற்சாகமும் அப்படி நினைக்கத் தோன்றியது.லல்லி தொண்ணூற்றி ஒன்றாம் ஆண்டில் அவரைச் சந்தித்திருந்தார். அப்போதுதான் அவர் எங்களைச் சந்திக்க வருகிறார். “சுந்தர ராமசாமியின் ஜவுளிக் கடைக்கு இன்ஸ்பெக்ஷனுக்குப் போயிருந்தேன். அவரிடம் பேசினேன். வயதானவர்” என்றெல்லாம் லல்லி சொன்னார். வயதானவர் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரைப் பற்றிய பிம்பம் உடைந்ததைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

‘ஜே. ஜே. சில குறிப்புகள்’ போன்ற ஒரு எழுத்தைத் தமிழில் படித்ததே இல்லை. மொழிபெயர்ப்புக் கதைகள். எல்லாம் எனக்கு அதிகம் அறிமுகமாகத் தருணம் அது. ஜே.ஜே. சில குறிப்புகள் நடை, ஸ்டைல் எல்லாம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. பின்பு லல்லி, ஹமீதும் அடிக்கடி நாகர்கோவில் சென்று சுந்தர ராமசாமியைப் பார்ப்பார்கள். அவர்கள் சொல்வதை எல்லாம் சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருப்பேன். ஹமீதுக்கு அப்போது வெளியுலகு புதிதுதான். ஆனாலும் எனக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு இல்லை. நாங்கள் இருவரும் ஒரே இடத்தில்தான் இருப்போம். அவர் ஆண் என்பதால் சில விஷயங்கள் அவருக்கு சாத்தியமாகி உள்ளது. எஸ்.வி. ஆரைப் பார்க்கப் போவார்கள். கீதாவைப் பார்க்கப் போவார்கள். இப்படிப் பலரையும் பார்த்ததைப் பற்றி அவர்கள் வந்து சொல்வதைக் கேட்டுக்கொண்டு மட்டுமே இருப்பேன். நான் வெளியில் செல்வதற்கான வாய்ப்பு இருந்ததில்லை.

சுந்தர ராமசாமி என்னைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னதும், நாகர்கோவிலுக்கு ஒரு டூர் செல்வதுபோலச் சென்றோம். வீட்டில் சுந்தர ராமசாமியைப் பார்க்கப் போகிறேன் என்றால் அனுப்பமாட்டார்கள். ஹமீது, லல்லி, ஹமீதின் சகோதரிகளுடன் என் அம்மா, நானும் ஒரு வேனில் சென்றோம். அப்போதுதான் அவரை முதன் முதலாகச் சந்திக்கிறேன். 1995ஆம் ஆண்டு அது. அதற்குப் பின்பு கடிதம் மூலம் தொடர்புகொண்டேன். ரொம்ப மனதொடிந்துபோய் கடிதம் எழுதுவேன்.

“நீங்கள் இவ்வளவு சோர்வடைவதற்கு ஒன்றுமே இல்லை. வீட்டிற்குள்ளேயே இருந்துகொண்டு செய்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் உள்ளளன. இருக்கும் இடத்திலிருந்தே மேலே போகலாம்” என்று என் மனதில் உறைக்கும் வண்ணம் தெளிவாகக் கடிதம் எழுதி இருந்தார். “நல்லாப் படிக்கவில்லையே, வெளி உலகம் தெரியவில்லையே, என்று தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டியதில்லை” என்பதையும் மனதில் தைக்கும்படி எழுதியிருந்தார்.

பின்புதான் அதிக உத்வேகத்துடன் எழுத ஆரம்பித்தேன். நாவல் எழுதத் தூண்டுகோலாக இருந்ததும் அவர்தான். எவ்வளவோ நண்பர்கள் அப்போது இருந்திருந்தாலும் அடிக்கடி சுந்தர ராமசாமி எழுதிய கடிதம்தான் ஆறுதலாக இருந்தது. இவ்வளவு பெரிய எழுத்தாளர் நமக்கு இப்படிக் கடிதம் எழுதுகிறாரே என்ற ஆச்சர்யமும் பிரமிப்பும். இது எனக்குக் கூடுதலான நம்பிக்கையைக் கொடுத்தது. ‘வீட்டை விட்டே போய்விடவேண்டும்’ என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். அப்போது “அப்படி எல்லாம் யோசிக்க வேண்டாம். வெளியுலகமும் அப்படியன்றும் பாதுகாப்பானதல்ல. உள்ளுக்குள்ளே இருந்துகொண்டு செயல்படுவதும் முக்கியம்தான்” என்று சுந்தர ராமசாமி அப்போது எனக்கு எழுதியதை நினைத்துப் பார்க்கும்போது இப்போது அது சரியென்றே படுகிறது.

‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவல் பற்றிய உங்கள் கடிதத்தை கணையாழி சுந்தர ராமசாமி சிறப்பிதழில் படித்தேன்.

‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் மனரீதியான பாதிப்பையும் உருவாக்கியது. அதைத்தான் கணையாழியில் வெளிவந்த கடிதத்தில் எழுதியிருந்தேன்.

‘கலைகளுக்கு எதிரானது இஸ்லாம்’ என்ற தோற்றம் உருவாகியுள்ளதே?

இஸ்லாமியப் புனித நூலான குரானில் அப்படியான கருத்து இல்லை. பல்வேறு துறைசார்ந்த புகழ்பெற்ற கலைஞர்கள் இஸ்லாமிய மதத்தில் உள்ளார்கள். படே குலாம் அலிகான், ஜாகிர் உசேன் மாதிரியான உன்னதமான கலைஞர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். எங்கள் வீட்டில் ரம்ஜான் மாதமானால் தொலைக்காட்சிப் பெட்டியை ஒரு ஓரமாக வைத்து விடுவார்கள். அதைப் பயன்படுத்தக்கூடாது என்பதற்காக. போதை மருந்துக்குச் சமமானதாகப் பேசுவார்கள் இசையைக் கேட்பதை. மனதைக் கிறங்கடித்து சந்தோஷத்தில் ஆழ்த்தி கெட்ட செய்கைகளுக்குத் தூண்டும் என்பார்கள்.

கிராமங்களில் மட்டுமல்லாது நகரங்களிலும்கூட இஸ்லாமியக் கோட்பாடு என்ற பெயரில் பல பழக்க வழக்கங்கள் ஆழமாக மனதில் பதிவதாகத்தானே உள்ளது?

ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அதற்குத் தகுந்தாற்போல பழக்க வழக்கங்கள் மாறிவிடுகின்றன. இதெல்லாம் குழந்தைகளிடம்கூடப் பார்க்க முடிகிறதே, அதைத்தான் என்னால் சகிக்கவே முடியவில்லை.

எங்கள் வீட்டில் என் கணவரும் தொழுகை செய்யமாட்டார். நானும் அப்படித்தான். நாங்கள் இருவருமே வீட்டில் ரொம்பச் சாதாரணமாகத்தான் இருப்போம். முஸ்லீம் என்ற அடையாளமே எங்களுக்கில்லை. என் கணவர் தி.மு.க. இயக்கத்தில் இருந்தவர்.

பள்ளிக்குச் செல்லும் எங்கள் பையன்கள் எல்லா விசயத்தையும் அங்கிருந்து கொண்டு வருகிறார்கள். ‘சாமி’ கட்சிப் பையன்கள். ‘அல்லா’ கட்சிப் பையன்கள் என்ற பிரிவினை இப்போதே அவர்களுக்கு வந்துவிட்டது. எங்கள் இளைய பையன் வீட்டில் ஏதாவது இந்துச் சாமிப் படம் இருந்தால் பெரும் ஆத்திரத்தோடு அதைக் குத்திக் கிழித்துவிடுவான்..

என் தோழி ஒருநாள் வீட்டிற்கு வந்திருந்தாள். அவள் போகும்போது வீட்டில் ஸ்டிக்கர் பொட்டை விட்டுவிட்டுப் போய்விட்டாள். அதைக் கண்ணாடி முன்பு நின்று என் நெற்றியில் வைத்துப் பார்த்தேன். அதைப் பார்த்து என் பையனுக்குப் பயங்கரக் கோபம் வருகிறது. அழுது அடம்பிடிக்கிறான். “நீ என்ன சாமி கட்சிக்குப் போகப் போகிறாயா” என்கிறான். சின்னப் பையனும் அழுகிறான். பெரிய பையனும் அழுகிறான். நமது குழந்தைகளை வேறுவிதமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது சுத்தமாக அடிபட்டுபோய்விட்டது. பள்ளிக்கூடம்தான் குழந்தைகளை உருவாக்குகிறது. மார்க்ஸ் சொன்னதுபோல சூழல்தான் மனிதனை உருவாக்குகிறது. இது முழுக்க உண்மை என்றே நம்புகிறேன்.

இப்போது சின்னப் பையன்களாக இருக்கும் மகன்கள் நாள் ஆக ஆக என்னை என்ன செய்வார்களோ என்ற நினைப்பு எனக்குள் ஓடுகிறது. நான் இலங்கைக்குப் புறப்படும்போது “எந்த அம்மா இப்படி வீட்டை விட்டு வெளியிடங்களுக்குச் செல்கிறார்கள்” என்ற கேள்வியை எழுப்பி, ஏதோ தேவையற்ற காரியங்களில் ஈடுபடுவதைப்போல நினைத்துப் பேசுகிறான். சின்னப் பையன்களைக்கூட திசை திருப்புவதாக நம் சமூகச் சூழல் இருக்கிறது. நாளை யாரோ ஒரு ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது “நீ ஏன் அவருடன் பேசுகிறாய்” என்ற கேள்வியை அவன் எழுப்புவதற்கான எல்லாச் சாத்தியங்களும் உள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து பிள்ளைகளை வேறு எங்காவது விடுதியில் தங்கவைத்துப் படிக்க வைக்க நினைத்துள்ளோம்.

கவிதையிலிருந்து நாவல் எழுத எப்படித் தோன்றியது?

சின்ன வயதில் நடந்த பல்வேறு விஷயங்கள் மனதுக்குள் இருந்துகொண்டே இருக்கின்றன. இந்த விஷயங்களை நாம் ஏன் எழுதக்கூடாது என்று நினைத்தேன். சிறுகதையாக எழுதி முடிக்க முடியாது. மனதில் பதிந்த விஷயங்கள் எல்லாமே பெண்கள் சார்ந்த விஷயங்கள். இந்த விஷயங்களை நாவலாக எழுதலாமே என நினைத்தேன். அப்படி நினைத்தது மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு. லல்லிதான் இரண்டு நோட்டுக்களை வாங்கிக் கொடுத்தார். வீட்டில் கேட்டால் கிடைக்காது. ஐம்பது பக்கம்வரை எழுதியிருப்பேன். என் கணவர் அதைப் படித்துவிட்டார் (அந்தச் சமயத்தில் ‘நான் எழுதக்கூடாது’ என்ற சண்டை நடந்துகொண்டே இருக்கும்) நாவலின் தொடக்கம். வேறு சில கவிதைகள் எல்லாவற்றையும் ஒளித்து வைத்துவிட்டார். ‘இனிமேல் எழுதினால் கையை ஒடிப்பேன்’ என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

நாவலை உற்சாகத்தோடு எழுத ஆரம்பித்துத் தடைபட்டுவிட்டது. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படியே விட்டுவிட்டேன். மனதுக்குள் இருப்பதை எப்போது வேண்டுமானாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது. பின்பு ஓராண்டுக்குப் பின்பு பெரிய அளவில் எனக்கும் என் கணவருக்கும் பிரச்சினை இல்லாதபோது பீரோவைத் திறந்து பார்த்தேன். அப்படியே இருந்தது. கீதா, சுந்தர ராமசாமி எழுதிய கடிதங்கள் எல்லாம் அதில் இருந்தது. மற்றவற்றைவிடக் கடிதங்களைக் கிழித்து எறிந்திருப்பாரோ என்பதுதான் அதிகத் துயரத்தைத் தருவதாய் இருந்தது.

ஏற்கெனவே எழுதிய நாவலை ‘இனி எங்கே எழுதமுடியும்’ என்ற தயக்கத்தில் கொஞ்ச நாட்கள் வைத்திருந்தேன். நாவல் தொடங்கிய விஷயம் லல்லி மூலமாகக் கண்ணனுக்குத் தெரியும். அவர் அடிக்கடி ‘ஏன் எழுதவில்லை’ என்று தொலைபேசி மூலம் கேட்டுக்கொண்டே இருப்பார். தயக்கத்தில்தான் இருந்தேன். சுந்தர ராமசாமியும் கடிதத்தில் இதைப் பற்றிக் கேட்பார். என் நாவலைப் பற்றிய சு.ரா., கண்ணன் இருவரின் அக்கறையான நினைவுறுத்தல்கள் இல்லையென்றால் நான் எழுதியிருக்கவே மாட்டேன்.

நாவல் எதைப் பற்றியது?

நாவல் முழுக்கவே “பெண்களை இந்தச் சமூகம்” எப்படி வைத்துள்ளது என்பதைப் பற்றித்தான் பேசுகிறது. அதை எந்தவித விமர்சனமும் இல்லாமல் சொல்லி உள்ளேன். மூன்று காலகட்டமாகப் பிரித்து எழுதியிருக்கிறேன். 1948இல் நடப்பது, 1970இல் நடப்பது ஆகியவற்றைத் தாண்டி 83ல் நடந்த இலங்கை இனக் கலவரம் வரையான காலகட்டத்துடன் நாவல் முடிகிறது. மூன்று காலகட்டமும் பெண்கள் சார்ந்ததுதான்.

ஒவ்வொரு காலகட்டத்திலுமே பெண்கள் என்பவர்கள் ஏதோ ஒரு இடத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருப்பவர்கள் ஆகவே தெரிகிறார்கள். பொம்மைகளின் வாழ்க்கை. எப்படிப் பொருத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்,

அதை எப்படி எதிர்கொள்கிறார்கள், அதற்குத் தகுந்தாற்போல் எப்படித் தங்களைத் தகவமைத்துக்கொள்கிறார்கள் என்பதெல்லாம் நாவலில் வரும். அதில் என்னுடைய விமர்சனம் எதுவும் நேரடியாக இல்லாமல் யதார்த்தமாக எழுதியுள்ளேன். “இது ஒரு யதார்த்தவாத நாவல்” என்று எளிதாக விமர்சகர்கள் ஒதுக்கித் தள்ள முடியாத விஷயங்களை என் நாவலில் எழுதியுள்ளேன்.
தமிழ்க் கலாச்சாரம் என்றால் உன்னதமானது. அதைவிட ஒழுக்கமானது இஸ்லாமியக் கலாச்சாரம் என்றெலல்£ம் பேசுவது நடைமுறை சார்ந்த உண்மை இல்லை. யாருடைய வாழ்க்கையும் அப்படி இல்லை. கற்பனையில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். சந்தர்ப்பம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. மற்றவர்களுக்குத் தெரியாதவரை எல்லாம் சரியானதுதான். பொய்யான மதிப்பீடுகள் மூலம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். உண்மையில் நடக்கும் ஒழுக்கமற்ற(?!) விஷயங்களை இல்லை, இல்லை என்று ஏன் சொல்லவேண்டும்.

சிறுவயதில் பெற்றோர்களாலும் திருமணமான பின்பு கணவனாலும் இப்போது பையன்களாலும் கட்டுப்படுத்தப்படுவதாக நினைக்கிறீர்களா?

என்னுடைய வாழ்க்கை மட்டுமல்ல; எல்லாப் பெண்களின் வாழ்க்கையும் அப்படித்தான் உள்ளது. ஏதோ ஒரு இடத்தில் தொங்கவிடப்பட்டுள்ள அலங்கார பொம்மைகளாகத்தான் இருக்கிறோம். என்ன சொல்லிக்கொடுக்கப்பட்டுள்ளதோ அதன்படி நடக்கிறோம். எந்த ஸ்தானத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறார்களோ அதற்குரிய வேலையைச் செய்கிறோம். மனைவி எனும்போது அதற்குரிய வேலைகள், குழந்தைகள் பெற்ற பின்பு அதற்குரிய ஸ்தானம் கொடுக்கப்பட்டு அதற்குரிய வேலைகள். பெண்களுடைய வாழ்க்கையே அப்படித்தானே இருக்கிறது.

சமீபத்தில் பெண்கள் பலர் கவிதை எழுதுகிறார்கள். அவர்களுடைய கவிதைகள் பற்றிச் சொல்லுங்கள்.

பெரும்பாலான கவிஞர்கள் பெண் சம்மந்தப்பட்ட விஷயங்களை எழுதுகிறார்கள். பெண் உடல், பெண் சுதந்திரம் இப்படியான கருத்துக்கள் கவிதைகளின் பொதுவான போக்காக உள்ளது. இப்படி எழுதுவது ஒரு ஜிக்ஷீமீஸீபீ ஆக மாறிவருகிறது. திடீரென்று எல்லாப் பெண் கவிஞர்களுக்கும் இதுபற்றிய ஆர்வமும் உண்டாகி இருக்கலாம். இப்படி எழுதுவதற்கான தேவையும் இருக்கத்தான் செய்கிறது. எத்தனைபேர் எழுதினாலும் பெண்கள் சம்மந்தமான எவ்வளவோ விஷயங்கள் எழுதுவதற்காகக் காத்திருக்கின்றன.

பல பெண்கள் யோனி, முலைகள் என்ற சொற்களைப் போட்டுக் கவிதை எழுதுவது படிப்பவர்களை அதிர்ச்சியூட்டத்தானா?

வெறும் அதிர்ச்சியூட்டலுக்காகவே என்று சொல்ல முடியாது. அந்தச் சொல்லைப் பயன்படுத்துவதால் அந்தக் கவிதையின் அர்த்தத் தளம் தீவிரமாக நம்¬ப் பாதிக்கிறதா என்பதுதான் முக்கியம். படிப்பவர்களை அதிர்ச்சியூட்ட மட்டுமே சொற்களைப் பயன்படுத்தினால் அதனால் எதுவும் பயனில்லை. எனது ‘நகரம்’ என்ற கவிதையில்கூட அப்படியான சொற்களைப் பயன்படுத்தியிருப்பேன். அது அவ்வளவாகப் பொருந்தவில்லை என்பதைப் பிரசுரமானவுடன்தான் கவனித்தேன். என்னுடைய கவிதைத் தொகுப்பில் அப்படியான சொற்கள் தீவிரமான தளங்களில் இயங்குகிறது.

“எல்லா அறிதல்களுடனும்
விரிகிறதென் யோனி”

என்ற என் கவிதை வரிகளைப் படித்த வாசகர் ஒருவர் “ஏன் இப்படி இவ்வளவு ஆபாசமாக எழுதுகிறீர்கள்” என்று கேட்டார். “நான் அவசியமானால் எழுதித்தான் தீருவேன்” என்றேன். இந்த இடத்தில் ஆபாசம் என்று சொல்லி ஒதுக்கித்தள்ள முடியாது. அதிர்ச்சி மட்டும் இல்லை. அனுபவம் சார்ந்து வார்த்தைகளைப் போடும்போதுதான் படிப்பவர்களுக்கும் புதிய அனுபவம் தரக்கூடியதாக மாறும்.

குட்டி ரேவதியின் “முலைகள்” என்ற தொகுப்பின் தலைப்பை வைக்கும்போது அது படிப்பவர்களை அதிர்ச்சியூட்டவே செய்யும். பத்திரிகைகளின் கவனம்பெறும். அதிகமானோர் புத்தகம் வாங்கிப் படிக்க விரும்புவார்கள். குட்டிரேவதி எந்த நோக்கத்திற்காக அந்தத் தலைப்பை வைத்தார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் எல்லோரிடமும் ஒரு பரபரப்பை உருவாக்கி உள்ளார். அவரது கவிதையின் பலம் பற்றி எனக்கு உடனே சொல்ல முடியவில்லை.

என்னுடைய நாவலுக்கு இப்படி ஏதாவது ஒரு தலைப்பை வைத்தால் அதிகமான கவனம் கிடைக்கும். அப்படிச் செய்யவேண்டாம் என்றே நான் நினைக்கிறேன். நான் எழுதியுள்ள விஷயங்களால் எனக்குக் கவனம் வந்தால் போதுமானது.

கவிஞர் மனுஷ்ய புத்திரனைச் சந்திக்கப் பல ஆண்டுகளுக்கு முன்பு பலமுறை துவரங்குறிச்சிக்கு வந்திருக்கிறேன். அப்போது உங்களையும் பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். ஆனால் அப்போது இவ்வளவு வீச்சோடு எழுதுவீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை. வாசக நிலையிலிருந்து எப்படிப் படைப்பாளியானீர்கள்?

நான் படிக்கும்போதே எழுதத் தொடங்கிவிட்டேன் என்றுதான் சொல்லவேண்டும். நீங்கள் பார்த்த சமயத்திலும் எழுதிக்கொண்டுதான் இருந்தேன். 15, 16 வயதில் ஹமீது (மனுஷ்ய புத்திரன்) என்ன செய்து கொண்டிருந்தாரோ அதையெல்லாம் நானும் செய்துகொண்டுதான் இருந்தேன். இருவரும் சேர்ந்து நிறையப் புத்தகங்களை வாசித்திருக்கிறோம். ஆனால் அவருக்கு முன்பே என் 12 வயதில் கதை ஒன்று எழுதியிருக்கிறேன்.

எழுத வேண்டும் என்ற ஆர்வம் அப்போதிலிருந்தே இருக்கிறது. சின்ன வயதில் குமுதம், ராணி போன்ற இதழ்களை வாசிப்பதில் ஆர்வம் இருந்தது. அப்போது அதுதான் கிடைத்தது. ஏழாம் வகுப்பு படித்தபோது எழுதிய அந்தக் கதை இப்போதுகூட நினைவில் இருக்கிறது. அந்தச் சமயத்தில் பள்ளிக்கூட ஆசிரியைகள் எல்லா மாணவர்களிடமும் கேட்கும் சம்பிரதாயக் கேள்வி: “படித்து முடித்த பின்பு என்னவாகப் போகிறீர்கள்?” என்பது. ஒவ்வொருவரும் டாக்டர், இஞ்சினியர் இப்படி வழக்கமான பதிலைச் சொன்னபோது நான் மட்டும், “எழுத்தாளர் ஆவேன்” என்றேன். எல்லோருக்கும் ஒரே சிரிப்பாகிவிட்டது. அதில் ஒரே ஒரு ஆசிரியருக்கு மட்டும் அதிர்ச்சியாகிவிட்டது. “எல்லோரும் ஒன்றைச் சொன்னால், நீ மட்டும் புதிதாய் என்ன சொல்கிறாய்?” என்று ஆச்சர்யப்பட்டுக் கேட்டார். “அதில்தான் எனக்கு ஆர்வமிருக்கிறது” என்று சொன்னேன்.

நிறைய வாசிக்க வாசிக்க நமக்குள் இருக்கும் உணர்வுகளை எழுத வேண்டும் என்ற தவிப்பு இயல்பாகவே வந்துவிட்டது. எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்ததற்கு முக்கியக் காரணம் ஹமீதோடு சேர்ந்து நிறையப் படித்தது. அவர் என்ன செய்வாரோ அதையெல்லாம் நானும் செய்வேன். அதற்கு முன்பே நான் எழுத ஆரம்பித்தாலும் அவர் கவிதை எழுத ஆரம்பித்த பிறகுதான் நானும் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். இருவரும் சேர்ந்தே செயல்படுகிறோம் என்ற உணர்வு இருக்கும். தனது கவிதைகளை அவர் அனுப்பும் இதழ்களுக்கு நானும் என் கவிதைகளை அனுப்புவேன். திருச்சியிலிருந்து சின்னச் சின்னக் கையெழுத்துப் பிரதிகள் வந்து கொண்டிருக்கும். என் பதினாறு வயதிலிருந்து அது போன்ற இதழ்களில் என் கவிதைகள் வெளிவந்துள்ளன. அதை இப்போது கவிதை என்று என்னால்கூட ஏற்க முடியாதுதான். ஆனால் யோசித்துப்பார்க்கும்போது அப்போதும் பெண்களைப் பற்றியே எழுதியிருக்கிறேன் என்று தெரிகிறது. ஹமீது அப்போது ஒரு தொகுப்பு கொண்டுவரும் அளவிற்கு எழுதியிருந்தார். நான் குறைவாகவே எழுதியிருந்தேன். பெண்களின் விழிப்புணர்வு எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் அப்போதே எழுதியிருக்கிறேன்.

ஹமீதைப் பார்க்கப் பல இலக்கிய நண்பர்கள் அடிக்கடி வருவார்கள். யார் வந்தாலும் அவர்களுடன் பேசிப் பல விஷயங்களை அவரால் பகிர்ந்துகொள்ள முடியும். பக்கத்து வீட்டில்தான் நான் இருப்பேன். ஆனால் எனக்கு யாரையும் பார்க்க அனுமதி கிடையாது. அவர் ஆண் என்பதால் ஆண் நண்பர்களுடன் பேச முடியும். பெண் நண்பர்களுடனும் பேச முடியும். எல்லோரிடமும் பேச அவருக்கு வாய்ப்பு இருந்தது. நான் ஒரு பெண் என்ற ஒரே காரணத்திற்காக அப்படியான வாய்ப்பு மறுக்கப்பட்டது. அந்தச் சமயங்களில் மிகவும் கவலைப்படுவேன். பெண்ணாய்ப் பிறந்ததால் வீட்டிற்குள்ளேயேதான் இருக்க வேண்டுமா? இப்படியான சூழ்நிலைதான் என்னை எழுத வைத்தது. நிறைய வாசித்ததன் மூலமாக எனக்கான ஒரு மொழியைக் கண்டடைந்தேன் என்றுதான் நினைக்கிறேன்.

“அக்கினிப் பரிட்சை” என்ற ருஷ்ய மொழிபெயர்ப்பு நாவலின் மூன்று பாகங்களை இரண்டே மாதத்தில் வாசித்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அப்போது அவ்வளவு நேரமும் இருந்தது. வேகமும் இருந்தது. இப்போது அப்படிப்பட்ட நிலை இல்லை.

கவிஞர் மனுஷ்ய புத்திரன் தனிப்பட்ட முறையிலும் படைப்புரீதியாகவும் எந்த அளவிற்கு உதவியாய் இருந்திருக்கிறார்?

அவர் என்ன யோசிப்பாரோ அதையே நான் யோசித்திருக்கிறேன். யோசிப்பதற்கும் பகிர்ந்துகொள்வதற்கும் எங்கள் இருவருக்குமே ஒரேவிதமான எண்ணங்கள் இருந்தன. அவருடைய படைப்புரீதியான உணர்வுகளை நெருக்கமாக நான் உணர்வேன். அதேபோல என்னுடைய உணர்வுகளை அவர் புரிந்துகொள்வார். ஒத்த உணர்வுடையவர்களாக இருந்தோம். நான் எழுத வேண்டும் என்பதில் அவர் ஆர்வமாய் இருந்து ஊக்குவித்திருக்கிறார். நமது சமூகத்தில் யாரும் இப்படி எழுதியதில்லை. தொடர்ந்து நீ எழுத வேண்டும் என்று உற்சாகப்படுத்துவார். நான் ஒரு கவிதையை எழுதியவுடன் அவரிடம்தான் கொடுப்பேன். வெளியுலகிற்கு அவற்றை அனுப்பிப் பிரசுரம் செய்வதற்குக் காரணமாய் இருந்தவர் அவர்தான். அவரில்லாமல் நான் இந்த அளவிற்கு அறிமுகம் பெற்றிருக்க முடியாது. அவர் இல்லாதிருந்தால் என் உணர்வுகள் என் மனதிலேயே கருகிப்போயிருக்கும். கவிதைகளாக உருப்பெற்றிருக்காது.

திருமணத்திற்குப் பின்னால் என் இலக்கிய ஈடுபாடுகள் எல்லாம் விட்டுப்போய்விடும் என்று என் பெற்றோர்கள் நினைத்தார்கள். அவர்கள் நினைத்ததும் சரியானதுதான். ஹமீது இல்லையென்றால் எனக்கும் அப்படித்தான் ஆகியிருக்கும். அவர் ஊரில் இருந்தது என்னை வளர்த்தெடுக்க மிகவும் உதவியது. இன்றுவரை அவர் இல்லையென்றால் நான் இல்லை என்பதுதான் உண்மை.

திருமணத்திற்கு முன்பு உங்கள் அப்பா, அம்மா இருவரும் உங்கள் இலக்கிய ஈடுபாட்டை எப்படி எதிர்கொண்டார்கள்?

என் அப்பா, அம்மா இருவருமே ரொம்ப உதவியாய் இருந்திருக்கிறார்கள். நான் என்ன செய்தாலும் அதற்கு ஆதரவாய் இருந்திருக்கிறார்கள். எனக்கு எவ்வளவோ கடிதங்கள் யார் யாரிடமிருந்தோ வரும். என் கவிதைகளைப் படித்துவிட்டு ஆண்களும் கடிதம் எழுதுவார்கள். நானும் பதில் எழுதுவேன்.

எங்கள் ஊரில் எங்கள் சமூகத்தில் கல்யாணமாகாத ஒரு பெண்ணுக்கு முகம் தெரியாதவர்களிடமிருந்து கடிதம் வந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்தே பார்க்க முடியாது. அந்தச் சூழ்நிலையிலும் என் பெற்றோர் என்னைப் புரிந்துகொண்டு அதற்கான சுதந்திரத்தை எனக்குக் கொடுத்திருந்தார்கள். என் பெற்றோர் “எனக்குச் செல்லம் கொடுத்துக் கெடுத்துவிட்டதாக” என் கணவர் இப்போதும் சொல்வார்.

சமயத்தில் மதுரைக்குக் கூட்டிச்சென்று நியூ செஞ்சுரி புக் ஹவுசில் எனக்குப் பிடித்தமான புத்தகங்களை எல்லாம் அப்பா வாங்கிக் கொடுத்திருக்கிறார். துவரங்குறிச்சியில் அதுவும் முஸ்லீம் சமூகத்தில் இதை நினைத்துப் பார்க்கவே முடியாது. இப்படியான வாயப்புகள் யாருக்கும் கிடைத்திருக்காது. ஆனால் எனக்குக் கிடைத்தது. எங்கள் ஊரில் இருக்கும் பெண்கள் என்னைப் போல யோசித்தாலும் அதற்குரிய வாய்ப்புக்களை யாரும் ஏற்படுத்தித் தர மாட்டார்கள். என் வீட்டில் உற்சாகப்படுத்தினார்கள் என்று சொல்லமுடியாவிட்டாலும் என் செயல்பாடுகள் எதையும் தடுத்ததில்லை.

தமிழினி 2000 நடந்தபோதுதான் உங்களது கவிதைத் தொகுப்பு “ஒரு மாலையும் இன்னொரு மாலையும்” வெளியிடப்பட்டது. அந்த வெளியீட்டு அழைப்பிதழில் பல எழுத்தாளர்களின் புகைப்படங்களும் இருந்தன; உங்களது புகைப்படம் தவிர. உங்கள் முகத்தைக்கூட வெளியுலகத்திற்குக் காட்ட முடியாத நிலை இருந்ததா?

புகைப்படமா? நான் எழுதுவதுகூட அப்போது என் கணவருக்குத் தெரியாது. திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டில் யாருக்கும் தெரியாமல்தான் எழுதிக்கொண்டிருந்தேன். வெளிப்படையாக என்னைக் காட்டிக் கொண்டு எழுதக்கூடிய சின்ன வெளிகூட அங்கு இல்லை. நான் எழுதக் கூடாது என்பதற்கு என்னென்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் என் கணவர் வீட்டில் செய்தார்கள். எழுதுவது என்பதை என் இருத்தல் சார்ந்த விஷயமாக நினைத்தேன். என் உரிமை சார்ந்த விஷயமாகவும் அதைப் பார்த்தேன். யாரோ ஒருவர் என்னை எழுதக் கூடாது என்று சொல்வதால் என்னால் எழுதாமல் இருக்க முடியாது. என் அடையாளத்தை எழுத்தின் மூலம்தான் காட்ட முடியும். என் குடும்ப வாழ்க்கையுடன் என்னைத் தொலைத்துவிட வேண்டும் என்று நினைக்கவில்லை. குடும்ப வாழ்க்கை மட்டுமே முக்கியம் என்றும் நினைக்கவில்லை. என் தேடல்களுக்குக் குறுக்காக யாரும் நிற்கக் கூடாது என்றும் நினைத்தேன். இப்படிப்பட்ட சூழல்தான் என்னைத் தொடர்ந்து எழுத வைத்தது. கல்யாணமான புதிதில் “தலாக்” பற்றி ஒரு கவிதை எழுதினேன். அப்போது ராஜாத்தி என்ற பெயரில்தான் கவிதைகள் வெளிவந்தன. ‘தலாக்’ கவிதை இப்போது என்னிடம் இல்லை. அதைக் கிழித்தெறிந்துவிட்டேன். இதுபோலப் பல கவிதைகளைக் கிழித்துப் போட்டிருக்கிறேன்.

ஏன் அப்படிக் கிழித்துப்போட வேண்டும்? பின்னால் தவறாக ஏதும் உணர்ந்தீர்களா?

தவறாய் ஒன்றும் இல்லை. அச்சுறுத்தல், பயம்தான் முக்கியக் காரணம். ‘தலாக்’ கவிதையை ஹமீதிடம் காட்டினேன். அவரும் நன்றாயுள்ளதாகச் சொன்னார். வெளியிடலாம் என்றார். எனக்குப் பிரசுரம் பண்ணுவதில் தயக்கம் வந்தது. வீட்டில் எழுத வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே இப்படிப்பட்ட கவிதை வெளிவந்தால் பிரச்சினை வரும் என்று நினைத்துப் பயந்தேன். அப்போது ஹமீதுதான் சொன்னார், இனிமேல் எழுதும் கவிதைகளைப் புனைபெயரில் பிரசுரிக்கலாம் என்று. எனக்கு அந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரு வீம்பு வந்தது. யாருக்கும் பயந்து என் பெயரை மாற்றிக்கொள்ளக் கூடாது என்று நினைத்தேன். அப்படியென்றால் நான் எழுதாமலே இருந்துவிடலாம் என்று தோன்றியது. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அது சாத்தியம் இல்லை என்பதையும் உணரவே செய்தேன். வீம்பு செய்யும் அளவிற்கு வாழ்க்கை பாதுகாப்பாய் இல்லை என்பதையும் விளங்கிக்கொள்பவளாகவே இருந்தேன். அந்தச் சமயத்தில் நிறையக் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். வீட்டில் உள்ள பிரச்சினையால் ரொம்ப வெறுமையாக உணர்ந்தபோது எல்லாக் கவிதைகளையும் கிழித்துப்போட்டிருக்கிறேன். பயந்து பயந்து எழுதுவதை வீட்டில் வைத்துக்கொள்ளவும் முடியாமல் பிரசுரிக்கவும் முடியாமல் சிக்கலான நிலைமையாக இருந்தது. எழுதாமலும் இருக்க முடியவில்லை. அதற்குப் பின்புதான் புனைபெயரில் எழுத ஆரம்பித்தேன். புனைபெயர் என்பது சௌகரியமான ஒன்றாக இருந்தது. ‘சல்மா’ என்ற புனைபெயரை அப்போதுதான் வைத்துக்கொண்டேன். அதுவரை எழுதவே முடியாமல் இருந்த விஷயங்களை எல்லாம் எழுத ஆரம்பித்தேன். ஏற்கெனவே அறிமுகமான அடையாளப் பெயரின் மனத்தடையால் மனதின் முழு உணர்வுகளையும்வெளிப்படுத்தவில்லை என்பதையும் தெரிந்துகொண்டேன். புனைபெயரில் நிறையக் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். பிரசுரமும் ஆயின. இது எல்லாம் வீட்டில் யாருக்கும் தெரியாது. நான் எழுதுவதை நிறுத்திவிட்டதாக நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

கடிதங்களும் நேரடியாக எனக்கு வராமல் ஹமீது முகவரிக்கு வரும். அங்கிருந்து நான் எடுத்துக்கொள்வேன். இப்படித்தான் பல ஆண்டுகள் நடந்துகொண்டிருந்தது. ஒருநாள் சி. மோகன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஜி. நாகராஜன் படைப்புகள் பற்றி ஒரு கட்டுரைத் தொகுப்பு கொண்டுவர உள்ள விஷயம் குறித்த அந்தக் கடித்தில் ‘அன்புள்ள சல்மா’விற்கு என்று எழுதியிந்தது. அதை ஹமீதுவிடமிருந்து வாங்கிப் படித்துவிட்டு என் வீட்டில் எங்கோ வைத்துவிட்டேன். என் கணவர் கண்ணில் பட்ட அந்தக் கடிதத்தால் ஏகப்பட்ட பிரச்சினைகள். “எவனோ ஒருத்தன் உனக்கு அன்புள்ள சல்மாவிற்கு என்று எழுதியிருக்கிறான். எழுதக்கூடாது என்று சொன்னதையும் மீறி ‘சல்மா’ என்ற பெயரில் எழுதுகிறாயே” என்று திரும்ப பிரச்சினைகள் உருவாயிற்று. அப்போது நான் வாய்மூடி மௌனியாக இருக்கவில்லை. அதற்குச் சரியான பதில் சொன்னேன். என்னால் எழுதாமல் இருக்க முடியாது என்று தைரியமாகச் சொன்னேன். அதற்குப் பின்புதான் என் வீட்டில் விட்டுவிட்டார்கள். முன்பேகூட என்னால் தைரியமாகப் பேசியிருக்க முடியும். ஆனால் அதையட்டி வரும் வீண் பிரச்சினைகளால் நான் நிம்மதியாக இருக்க முடியாது. அதனால்தான் முதலில் எழுதவில்லை என்று சொல்லி, வீட்டுக்குத் தெரியாமல் எழுதிக்கொண்டிருந்தேன்.

கவிதைத் தொகுப்பு வெளிவருவது தெரியக் கூடாது என்று நினைத்தேன். ஏனென்றால் வீட்டில் உள்ளவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியாத அளவிற்குப் பல கவிதைகள் தொகுப்பில் இருந்தன. ஏற்கெனவே நான் எழுதிய கவிதைகள் ஆபாசம் என்றும் சொந்த வாழ்க்கையைப் பற்றிய கவிதைகள் என்றும் என் வீட்டில் நினைத்துக் கொண்டிருந்த கவிதைகள் புத்தகமாக வருகின்றன என்று தெரிந்தால் எவ்வளவு பிரச்சினைகள் வரும் என்று யோசித்து அதுபற்றி வீட்டில் சொல்லாமல் இருந்தேன்.

தொகுப்பில் இருக்கும் கவிதைகள் அடங்கிய டைரியை ஹமீதிடம் கொடுத்தேனேயழிய அது எப்படிவரும் என்பது பற்றி எதுவும் எனக்குத் தெரியாது. புரூஃப்கூட நான் பார்க்கவில்லை. புத்தகம் வெளிவருவது வீட்டில் யாருக்கும் தெரியக் கூடாது என்பதில்

அவ்வளவு கவனமாகவும் பயத்துடனும் இருந்தேன். ஹமீதுதான் எல்லாம் பார்த்துப் புத்தகமாக்கினார்.
புத்தகம் வெளிவரும் சமயத்தில்தான் “வெளியீட்டு விழா இருக்கிறது, வர முடியுமா?” என்று ஹமீது கேட்டபோது வீட்டில் என்ன சொல்லிவிட்டுச் செல்வது என்று தெரியாமல் இருந்தேன். உடல்நிலை சரியில்லை என்று சொல்லித்தான் எங்கள் வீட்டிற்குப் போனேன். பின்பு அம்மாவுடன் சென்னை சென்றேன். இப்படியான நிலையில் என் புகைப்படம் புத்தகத்திலோ அழைப்பிதழிலோ வரக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.

புத்தக வெளியீட்டு விழாவின்போது சலபதி புத்தகத்தைக் கொண்டுவந்து கொடுத்தார். நிறையக் கவிதைகளின் தலைப்பு மற்றும் ஒருசில வரிகளில் வார்த்தைகள் எல்லாம் மாறியிருந்தன. புத்தகம் வருவதற்கு முன்பே நான் பார்த்திருந்தால் குறைகளாகத் தோன்றுவதை சரி செய்திருப்பேன். அந்தப் புத்தக உருவாக்கத்தில் என்னுடைய பங்கு எதுவுமேயில்லை.

அதுவரை புகைப்படத்தில்கூட என்னைக் காட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டிய அவசியம் இருந்தது.

இந்த நிலை எப்படி மாறியது?

சமீபத்தில் பஞ்சாயத்துத் தேர்தல் வந்தபோது எல்லாம் மாறிவிட்டது. எங்கள் பேரூராட்சி பெண்களுக்கான தொகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. நான் வேட்பாளராக நிறுத்தப்பட்டேன். மக்களிடம் நம் முகத்தை வெளிக்காட்டித்தான் ஓட்டுக் கேட்க முடியும். இவ்வளவு நாட்களாக என்னை மறைத்துக்கொள்வதில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த எனக்கு, என்னை வெளிக்காட்டித்தான் ஓட்டுக் கேட்க முடியும் என்பதால் வீட்டில் அதற்கெல்லாம் தயாராகவே இருந்தார்கள். எல்லாப் பத்திரிகைகளிலும் வேட்பாளர் என்ற பெயரில் என் புகைப்படம் வந்தது. ஓட்டுக் கேட்க பேரூராட்சித் தொகுதி முழுக்கப் போகவேண்டி வந்தது. இதனால் இதற்கு முன்பு இருந்த எல்லா விஷயங்களும் ஒன்றுமில்லாமல் போய்விட்டன. என் தனித்துவத்திற்காக நான் செய்ய வேண்டும் என்று நினைத்த விஷயங்களெல்லாம் குடும்பத்தில் ஒத்துக்கொள்ளப்படும்போது£ன் வெளிப்படையாக இயங்க முடிகிறது.

இதே தேர்தலில் நிற்பதை என் சொந்த விருப்பமாகச் சொல்லியிருந்தால் நிற்கச் சொல்லியிருக்கமாட்டார்கள். எப்போதுமே எனது சுயவிருப்பம் சார்ந்து இயங்க முடியாமல்தான் இருக்கிறது. தேர்தலில் நான் நிற்பது அவர்களுடைய தேவை சார்ந்தது. எனது விருப்பமாக மட்டுமே இருந்தால் அனுமதித்திருக்க மாட்டார்கள். ஒவ்வொரு மேடையாகக் கூட்டிப்போய்ப் பேச வைத்திருக்கமாட்டார்கள். வீட்டிற்கு வீடு அழைத்துப்போயிருக்கமாட்டார்கள்.

தேர்தலில் நான் நிற்பது அவர்களுடைய தேவை. பெண்களுக்கான தொகுதி என்பதால் என்னைப் பகடைக்காயாகப் பயன்படுத்தினார்கள். அதனால் உடனே இதைப் புறக்கணிக்க வேண்டும் என்ற ஆத்திரம் வந்தது. ஆனால் எனக்கும் அது தேவையாக இருக்கிறது என்பதை உணர்ந்தேன். என் பயத்தைப் போக்கிச் சுதந்திரமாகச் செயல்பட முடியும் என்ற நம்பிக்கையில்தான் தேர்தலில் நிற்க ஒத்துக்கொண்டேன்.

ஒரு வருடத்திற்கு முன்பு என்றால் என்னை யாரும் வீட்டில் வந்து பார்க்கவோ பேட்டி எடுக்கவோ முடியாது. அதற்கான இடமே இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது பேரூராட்சித் தலைவர் என்ற முறையில் அலுவலகரீதியாகப் பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் என்று யார்யாரோ பார்க்க வருகிறார்கள். அதற்கு வீட்டில் எந்த எதிர்ப்பும் கிடையாது. அப்போது அவர்கள் வேறு நான் வேறு என்றில்லாமல் போகிறது. தடுக்கவும் முடியாது. இந்தச் சந்தர்ப்பதைப் பயன்படுத்திக்கொள்கிறேன். தேர்தல் வேண்டாம் என்று விட்டுவிட்டிருந்தாலும் இப்போதைய சுதந்திரம் கிடைக்காமல் போயிருக்கும். இப்போது எல்லாக் கதவுகளும் திறந்தபடியே இருக்கின்றன.

திருமணத்திற்கு முன்பும் அதற்குப் பின்பும் வீட்டுச் சூழல் எப்படி இருந்தது?

வீட்டுச்சூழல் என்று பார்த்தால் அம்மாவுடன் எப்போதும் பாதுகாப்பான உணர்வுடன் இருக்க முடியும். என் ஒவ்வொரு செயல்பாட்டையும் பெற்றோர்கள் அங்கீகரித்தார்கள். ஏற்றுக்கொண்டார்கள். திருமணம் ஆனவுடன் சிறையில் இருப்பதைப்போல உணர ஆரம்பித்தேன். சின்ன அளவில்கூட சுதந்திரமற்று இருந்தேன். அப்போது அதிக அளவிற்கு மன அழுத்தத்திற்கு ஆட்பட்டேன். ஹமீது துவரங்குறிச்சியில்தான் இருந்தார். என் கணவர் வீடு ஹமீது வீட்டிற்குப் பக்கத்துத் தெருதான். ஆனால் அவரை மாதத்திற்கு ஒருமுறைதான் பார்க்க முடியும். அருகிலேயே அவர் இருந்தாலும் அவரைப் பார்க்க ஒரு மாதம் காத்திருக்கவேண்டும். எனது மன உணர்வுகளை கவலைகளைப் பகிர்ந்துகொள்ள உடனுக்குடன் முடியாது. பெண்ணாகப் பிறந்ததால்தானே இப்படி என்று மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானேன். இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று எங்காவது போய்விடலாம் என்றுகூட நினைத்தேன். கிராமத்தில் இருந்துகொண்டு இப்படியெல்லாம் நினைப்பதுகூட சிரமம்தான். பக்கத்து வீட்டுக்காரர்கள் என்ன நினைப்பார்களோ அல்லது சமூகம் என்ன நினைக்குமோ என்று பயந்துதான் வாழவேண்டியுள்ளது. நமக்காக வாழவே முடியாது. நமக்கென்று ஒரு முகம் உண்டு. அடையாளம் உண்டு. அதையட்டியேதான் வாழ முடியும். அதனால் நமக்கு விதிக்கப்பட்டதற்குள் நம் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்றால் எழுதுவதுதான் ஒரே வழி. தீவிர உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகளை அப்போதுதான் எழுதினேன். பின்பு கொஞ்ச நாளில் எழுதுவதிலும் ஆர்வம் இல்லாமல் போனது. “வாழ்க்கையே முடிந்துபோனது, பிறகு எதற்கு எழுத வேண்டும்?” என்று நினைக்கும்படியான மனச்சோர்வுக்கு உள்ளானேன். மூன்று ஆண்டுகள்வரை எழுதவே இல்லை.

முதல் குழந்தைக்காகக் கர்ப்பம் ஆனவுடனே மனசுடைந்து போனேன். வாழ்வின் முடிவிற்கே வந்துவிட்டதுபோல இருந்தது. இனிமேல் எதுவும் வாழ்வை மாற்றப்போவது இல்லை. இதுதான் தலைவிதி. சாகும்வரை இப்படித்தான். எழுதுவது நம்மை எந்த விதத்தில் மீட்டெடுக்கப் போகிறது, இதெல்லாம் சாத்தியம் இல்லாத விஷயம் என்ற அப்போதைய மனநிலையில் எழுதுவதையே நிறுத்திவிட்டேன். சராசரியான எல்லாப் பெண்களுக்குமே திருமணமாகி ஒரு குழந்தை பெற்றுவிட்டாலே தங்களது உடலைப் பற்றிய கவலை போய்விடும். எல்லாம் முடிந்துபோனது. இனிமேல் அதைக் குறித்த கவலை எதற்கு என்பதான மனப்போக்குத்தான் ஏற்படும். இதே மனநிலைதான் எனக்கும் இருந்தது. பிற பெண்கள் நினைப்பதற்கும் நான் நினைப்பதற்கும் என்ன வேறுபாடு? பிற பெண்கள் மாதிரியல்லாது வேறுவிதமான சிந்தனைகள் கொண்டதாக நான் நினைத்துக்கொண்டிருப்பது பொய்யா? இப்படியெல்லாம் என் மனதில் நினைவுகள் முட்டி மோதின. அப்போதுதான், கல்யாணத்திற்குப் பிறகும் எவ்வளவோ செய்ய முடியும் என்ற எண்ணம் வந்தது. எழுதுவதன் மூலம் நம் அடையாளத்தைக் காட்ட முடியும்,. நாம் ஒன்றுமில்லாமல் போய்விடக் கூடாது என்ற வீம்பு திரும்ப வந்தபின்புதான் எழுதத் தொடங்கினேன். இன்றைய நிலையில் முதலில்போல மனச்சோர்வுதரும் விஷயங்கள் எதுவும் இல்லை. நம்பிக்கையுடனே இருக்கிறேன். இதற்கு முக்கியக் காரணம் என் கவிதைத் தொகுப்பு வெளிவந்ததுதான். அப்போதுகூட என் கவிதைகள் புத்தகமாய் வர வேண்டாம் என்றே ஹமீதிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். புத்தகமாய் வந்து என்னை என்ன செய்யப்போகிறது என்ற அவநம்பிக்கைதான் முதலில் இருந்தது. அந்த அவநம்பிக்கை 2002வரை தொடரவே செய்தது. கவிதைகள் புத்தகமாய் வெளிவந்தது அதிகப்படியான நம்பிக்கையே அளித்தது. எழுத்தின் மூலமாய்க் கிடைத்த பலன் பல முக்கியமான நண்பர்கள் அறிமுகமானதுதான். அதுதான் எல்லா நம்பிக்கைக்கும் காரணம். எழுத்து புதிய வாழ்க்கையைக் கொடுக்காவிட்டாலும் நட்பைக் கொடுத்தது. இது ஒன்றே போதுமானது என்றே நினைக்கிறேன்.

மனச்சோர்வுதான் உங்களை எழுதத் தூண்டுகிறதா?

ஆமாம். மனதிற்குள் உள்ளதை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வழியில்லாமல்தான் எழுதினேன். அதை எழுதும்போது யாரிடமோ பகிர்ந்துகொள்கிறோம் என்ற எண்ணமே மேலும் மேலும் எழுதத் தூண்டுகிறது. எழுதியவுடன் கிடைக்கும் மனத் திருப்தி மனச்சோர்விலிருந்து விடுபடுவது போன்ற உணர்வைத் தரும்.

உங்களுடைய கவிதைகள் உங்கள் சுயசரிதை போலவே தோன்றுகிறது. எல்லாப் பெண்களுக்குமான கவிதைகளாக உங்கள் கவிதைகளை உணர்கிறீர்களா?

என்னுடைய தனிப்பட்ட உணர்வுகளாக என் கவிதைகளை நீங்கள் அடையாளப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் நான் அப்படிப் பார்ப்பதில்லை. என்னுடைய அனுபவங்கள் அவை என்றாலும் எல்லாப் பெண்களுக்குமான பொதுவான உணர்வுகளாகவும் இருக்கின்றன. படிப்பவர்களுக்குப் பொதுவான தளத்திற்குச் செல்வதற்கு என் ஒவ்வொரு கவிதையும் இடம்தரவே செய்கிறது என்ற நம்பிக்கை இருக்கிறது. எனக்கு நேராத பல விஷயங்களும் என் கவிதைகளில் இருக்கவே செய்கிறது. என் கவிதைகளின் குரல் தன்னுணர்ச்சி கொண்டதாக இருப்பதால் சுயசரிதைத்தன்மை கொண்டதாக இருக்கிறது. எனக்குத் தெரிந்த பல பெண்களின் வாழ்க்கையும் என் கவிதைகளில் இருக்கவே செய்கிறது. என் வாழ்க்கையைப் போன்றுதான் எங்கள் ஊரிலுள்ள எங்கள் சமூகப் பெண்களின் வாழ்க்கையும் இருக்கிறது. அதிகமும் அப்படித்தான் இருக்கிறது.

துவரங்குறிச்சியில் உங்களுக்குத் தெரிந்த பெண்கள் உங்கள் கவிதைகளைப் படித்திருக்கிறார்களா?

இங்குள்ள பெண்களுக்குக் கவிதை படிப்பதிலெல்லாம் விருப்பம் கிடையாது. அத்தோடு நான் எழுதியுள்ள விஷயங்களையெல்லாம் யாரும் ஏற்றுக்கொள்ளவே இல்லை. நிராகரிக்கவே செய்தார்கள். நான் எழுதுவதைத் தப்பான காரியமாகவே பார்த்தார்கள். இதை அவர்கள் ஊக்கப்படுத்தவும் முடியாது. ஆதரிக்கவும் முடியாது. எங்கள் சமூகத்தில்கூட இதுவரை யாரும் படித்துப் பாராட்டியதில்லை.

நன்றி : சந்திரவதனா செல்வகுமாரன்

Permalink Leave a Comment

புலவர் ஆபிதீன்

13/02/2009 at 8:47 pm (புலவர் ஆபிதீன்)

pulavar-abedheen

பிறையே பேசு !

பகலெல்லாம் பட்டினியாய்ப் படுத்துமிகத் தூங்கிவிட்டுப்
பண்பான நோன்பனைத்தும் பக்தியுடன் நோற்றதுவாய்
இகல்தாங்கிப் பேசுகின்ற இழிமாந்தர் தம்கூற்றை
இருணிக்கும் இன்னொளியே இளமதியே பார்த்தாயா?

சகியாமல் பசிக்கொடுமை சாப்பாடு தின்றுதின்று
சலியாது உடல்வளர்ப்பர் சற்றேனும் வெட்கமிலர்
முகிலாடை போர்த்தொளிந்து மெல்லவெளி வந்ததிரு
முழுமதியே தண்சுடரே மென்கதிரே பார்த்தாயா?

தொழுவதிலை ஏழைவரி தருவதிலை என்றாலும்
துணிமணியில் வெளிப்பகட்டில் தொங்குதவர் சன்மார்க்கம்
புழுதியுடை வாள்போலப் பூவைப்புரு வம்போலப்
புதிர்கொண்டு வளைவடிவே புதுப்பிறையே பார்த்தாயா?

பெருநாளை மட்டுமவர் பெருமைக்குக் கொண்டாடப்
புறப்பட்டார் சொகுசாகப் பள்ளிக்குக் காலிழுக்க
வருமின்பத் தென்றலுக்கு வழிகாட்டும் வட்டுருவே
வளர்ந்தேறு வென்ணிலவே வான்விளக்கே பார்த்தாயா?

உனதந்த லோகத்தில் உண்டோசொல் இத்தகைய
உரிமைகள் கொண்டாடும் உத்தமர்கள் பாதகர்கள்
எனதிந்த வையத்தில் எத்தனையோ எண்ணரிது
எழிலூட்டும் வெண்ணமுதே எம்பிறையே பார்த்தாயா?

– புலவர் ஆபிதீன் –

(’அழகின் முன் அறிவு’ தொகுப்பிலிருந்து)
நன்றி : ஆபிதீன் பக்கங்கள்

செம்மொழிச் செல்வர் புலவர் ஆபிதீன்

– ஜே.எம்.சாலி

(இலக்கிய இதழியல் முன்னோடிகள் தொடரிலிருந்து../ சமநிலைச் சமுதாயம் ஜூன் 2006)

‘சிறந்த கற்பனை என்பது, விரும்பியபோதெல்லாம் வந்து வாய்ப்பது அன்று. அது வாய்த்தபோதெல்லாம் அதனை விரும்பிப் போற்றுவதே கவிஞர் தொழில். தாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் போற்றி மகிழ வேண்டும் என்ற நன்னோக்கத்தால் . கவிஞர்கள் அந்தக் கற்பனைகளுக்கு அழகிய வடிவம் தந்து பாட்டுகளாக வாழச் செய்கின்றனர். விழுமிய உணர்ச்சிகளும் அத்தகையனவே. நில்லாமல் மாறிச் செல்லும் அவற்றிற்குப் பாட்டுக்கள் நிலையான வடிவம் தந்து நெடுங்காலம் பலருக்கும் பயன்படுமாறு செய்கின்றன. இந்த நூலில் உள்ள பாட்டுக்களில் புலவர்  ஆபிதீன் அவர்களின் உள்ளத்தில் எழுத்த விழுமிய உணர்ச்சிகளையும், சிறந்த கற்பனைகளையும் காண்கின்றோம். ‘என் மனைவி’ என்ற பாட்டு உள்ளத்தைத் தொட்டு உருக்க வல்லது. ‘வேண்டுதல்’ முதலிய பாட்டுக்கள் மொழிபெயர்ப்பாகவும் தழுவலாகவும் அமையினும் நல்ல தமிழ் வடிவம் பெற்றுள்ளன. பெருநாள் பிறையைக் கண்டு தன் வறுமையை நினைத்து வாடும் ஏழைப்பெண் பற்றிய பாட்டு, நாட்டில் உள்ள வறுமையை எடுத்துக் காட்டுவது.’

– டாக்டர் மு.வ. அவர்கள் 1960 ஆம் ஆண்டில் புலவர் ஆபிதீனின் கவிதைத் தொகுப்புக்கு வழங்கிய முன்னுரையின் ஒரு பகுதியே இந்த வரிகள்.

‘அழகின் முன் அறிவு’ கவிதைத் தொகுப்பு  ஒரு ரூபாய் விலையில் அந்த ஆண்டில் வெளிவந்தது.

‘புலவர் ஆபிதீன் அவர்கள் நாடு அறிந்த நல்ல புலவர். அவரின் இசைப் பாட்டுக்கள் தமிழ் நாட்டின் பட்டிதொட்டிகளையும் எட்டியிருக்கின்றன’ என்று அணிந்துரையில் எழுதினார் அறிஞர் எம்.ஆர்.எம். அப்துற் றஹீம்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல , தமிழ்கூறும் நல்லுலகெங்கும் செம்மொழிப் பாவலராகத் தடம் பதித்த இலக்கிய இதழியல் முன்னோடி , நாகூர் தந்த ஆபிதீன்.

செம்மொழித் தமிழே தமிழக முஸ்லீம்களின் தாய்மொழி. அவர்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் உறைவதும் ஒலிப்பதும் செந்தமிழ். இதையே ‘எங்களுயிர்த் தமிழ் வழக்கு’ என்று அன்றே பாடினார் ஆபிதீன்.

‘பாத்திரத்தை ஏனம் என்போம்
பழையதுவை நீர்ச்சோறு என்போம்
ஆத்திரமாய் மொழி குழம்பை
அழகாக ஆணம் என்போம்
சொத்தையுரை பிறர் சொல்லும்
சாதத்தை சோறு என்போம்
எத்தனையோ தமிழ் முஸ்லிம்
எங்களுயிர்த் தமிழ் வழக்கே’

விளக்கவுரை தேவையில்லை. ஏனம், ஆணம், நீர்ச்சோறு, சோறு முதலான எண்ணற்ற உணவு மற்றும் உறவு முறைச்  சொற்களை தமிழ் முஸ்லிம்கள் ஆண்டாண்டு காலமாக வழங்கி வருகின்றனர்.

புலவர்கோட்டையெனும் புகழ் பெற்ற நாகூரைச் சேர்ந்த ஆபிதீன் நாடு சுற்றிய படைப்பாளர். இலங்கை, பர்மா, மலாயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் எழுதிக் குவித்தவர்.

கவிஞர், பாடலாசிரியர், நாடகக் கலைஞர், ஓவியர், பத்திரிக்கையாளர், பன்மொழி அறிந்தவர், சொற்பொழிவாளர், வணிகர் என் பன்முனைச் சிறப்புக்குரியவர்.
நூல்கள் :

அழகின் முன் அறிவு’ கவிதைத் தொகுப்புக்கு முன் ஒன்பது நூல்களை வெளியிட்டதாக புலவர் ஆபிதீன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். மூன்று படைப்புகள் அச்சேறாமல் பெட்டியில் முடங்கிக் கிடப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

எனினும் சில நூல்கள் மட்டுமே கிடைப்பதாக நாகூர் இலக்கிய ஆய்வாளர் மு. ஜாபர் முஹியித்தீன் குறிப்பிட்டுள்ளார்.

நவநீதகீதம் அவற்றுள் ஒன்று. 10 பாடல்களைக் கொண்ட நூல் இது. நபிகள் பெருமானார், நாகூர் சாஹூல் ஹமீது ஆண்டகை ஆகியோர் மீது பாடப்பட்ட பாடல்களே நவநீத கீதம்.

இந்த நூல் 1934 ஆம் ஆண்டில் நாகப்பட்டினம் லெஷ்மி விலாச அச்சுக்கூடத்தில் பதிக்கப்பட்டது.

திருநபி வாழ்த்துப்பா  எனும் பதிப்பு 1935ம் ஆண்டில் ரங்கூன் நகரில் வெளியிடப்பட்டது.

பர்மியத் தலைநகரில் நடைபெற்ற மீலாத் விழாவை முன்னிட்டு அந்நகரிலேயே இப்பதிப்பு வெளியிடப்பட்டது. கவிஞரின் பெயர் மு. ஜெய்னுல் ஆபிதீன், மு.ஜெ.ஆபிதீன்  என அந்நாளில் அச்சிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘தேன்கூடு’ புலவர் ஆபிதீனின் மற்றொரு படைப்பு. இலங்கைத் தலைநகர் கொழும்பில்  1949-ஆம் ஆண்டில் இத்தொகுப்பு வெளியிடப்பட்டது.

முஸ்லிம் லீக் பாடல்கள், இஸ்லாமியப் பாடல்கள் ஆகியவை 1961-ல்  வெளியிடப்பட்ட நூல்கள். மற்ற நூல்கள் கிடைக்கவில்லை.

யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் 1961-இல் வெளியிட்ட ‘அழகின் முன் அறிவு’  பல்சுவைப் பாடல்களின் இனிய தொகுப்பு.

இதில் பொதுஅறிவுப் பாக்களே அதிகம். இஸ்லாமியப் பண்பாடு பேசும் பாக்கள் மிகமிகக் குறைவு. காரணம் முஸ்லீம்கள் மட்டுமின்றித் தமிழ்ப் பெருங்குடி மக்களும் படிக்க வேண்டுமென்பது என் பேரவா’ என் முன்னுரையில் குறிப்ப்பிட்டிருக்கிறார் புலவர் ஆபிதீன்.

அந்நாளில் 500 ரூபாய் அன்பளிப்பு வழங்கிய சங்கு மார்க் நிறுவன முஹம்மது அபூபக்கர் அவர்களுக்கு இந்த நூலை காணிக்கையாக்கியிருக்கிறார் அவர்.

இசைப் பாடல்கள் :

இசைப்பாடல்களை எழுதி, புகழ் குவித்த முன்னோடி தமிழ் முஸ்லிம் கவிஞர் ஆபிதீன்.

இளமையிலேயே அந்தத் திறனை வளர்த்துக் கொண்டதால் எடுத்த எடுப்பில் யார் கேட்டாலும் இசைப்பாடல்களை எழுதித் தந்தார். ஒரு கோப்பை தேநீருக்காவும் அவர் பாடல் எழுதியிருக்கிறார். ஒரு பாடலுக்கு அவர் பெற்ற கூடுதல் தொகை ரூபாய் 80 என்று கூறியதாக நாகூர் மு. ஜாபர் முஹியித்தீன் தெரிவிக்கிறார்.

ஆண்டாண்டு காலமாக ஒலித்து வருகின்றன அவருடைய பாடல்கள்.

‘மண்ணிலே பிறந்ததேனோ
எங்கள் பெருமானே
மாநிலத்தைத் தாங்கிடவோ
எங்கள் பெருமானே!’

இந்த அரிய பாடலை மறக்க முடியுமா?

இன்னொன்று

‘ஈட்டியின் முனையில் நிறுத்தியபோதும்
ஈமான் இழக்க மாட்டோம்
காட்டிக் கொடுத்திடும் கயவர்கள் தம்மை
கனவிலும் விடமாட்டோம்
எல்லாம் இயன்ற ஏகனுக் கல்லால்
எவருக்கும் அஞ்சமாட்டோம்
நல்ல நம் நாட்டு நன்றியை மறந்து
நழுவியே ஓடமாட்டோம்’

இசைத்தட்டில் அன்றும் இன்றும் ஒலித்து வரும் பாடல்கள் பல.

முஸ்லிம் லீக், நீதிக் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்குக் கொள்கை விளக்கப் பாடல்களையும் புலவர் ஆபிதீன் எழுதினார்.

நாகூர் தர்ஹா ஆஸ்தான இசைக்கலைஞர் எஸ்.எம்.ஏ. காதர்,  இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபா, இசைமணி எம்.எம்.யூசுப், ஹெச்.எம். ஹனிபா, காரைக்கால் எம்.எம்.தாவுது, திருச்சி கலிபுல்லா, மதுரை ஹூசைன் தீன்,  இலங்கை மொய்தீன் பேக் முதலானோர்  புலவர் ஆபிதீனின் பாடல்களை இசையமைத்துப் பாடி வசப்படுத்தியுள்ளனர்.

இதழாசிரியர் :

நாகூரில் பிறந்து வளர்ந்த புலவர் ஆபிதீன் ஓவியராகவும் பத்திரிக்கையாளராகவும் சிலகாலம் பணிபுரிந்தார்.

மும்பை நகரில் தங்கியிருந்த காலத்தில் வணிகத்துடன் நடிக்க வேண்டிய சூழ்நிலையும் அவருக்கு ஏற்பட்டது.

இலங்கையில் இருந்தபோது பத்திரிக்கைத் தொழிலில் ஈடுபட்டார்.

பர்மாவிலும் அவருடைய இலக்கியப் பணி தொடர்ந்தது.

அன்றைய மலாயா நாட்டில் ஆபிதீன் ஓவியப் பணியில் ஈடுபட்டிருந்தார். ஓவியக் கூடம் ஒன்றையும் நடத்தினார்.

சிங்கப்பூரில் இயங்கிவந்த ‘மலாயா நண்பன்’ இதழின் ஆசிரியராக (1947) அவர் பணியாற்றினார்.

காயிதே மில்லத் முதலான அரசியல் தலைவர்களின் அன்பைப் பெற்ற அவர், அரசியல் விமர்சனங்களை எழுதி வந்தார்.

‘அண்ணா பேச்சு; ஆட்சியாளர் அதிர்ச்சி’ என்ற தலைப்பில் அவர் எழுதிய அரசியல் விமர்சனத்தின் சில வரிகள் :

‘ஒரு வீட்டில் பிச்சைக்காரியொருத்தி யாசகம் கேட்டாள்.அந்த வீட்டு மருமகள் இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டாள்.  அந்த பிச்சைக்காரி வயிற்றெரிச்சலுடன், போகும்போது மாமியார் வந்து கூவியழைத்தாள். பிச்சைக்காரி மகிழ்ச்சியோடு திரும்பி வந்தாள்.

‘எவள் உனக்கு இல்லையென்று சொன்னவள்? இந்த வீட்டுக்கு நான் எஜமானத்தி. உண்டு என்றாலும் இல்லையென்றாலும் அதை நான் தான் சொல்ல வேண்டும். இப்போழுது நான் சொல்கிறேன்: ‘இல்லை, போ’ என்றாளாம் மாமி. பாவம், பிச்சைக்காரியின் நிலையைப் பேசவேண்டுமா?

இந்த மாமியாருடைய நிலையில்தான் காங்கிரஸ் கண்ணோட்டம் இருக்கிறது’ என்று தமது பார்வையில் அந்த நாள் அரசியலை எழுதுகிறார் பத்திரிக்கையாளர் ஆபிதீன்.(மலாயா நண்பன் இதழ்). அண்ணா, காயிதே மில்லத், அனந்த நாயகி, அன்றைய பிரதமர் நேரு ஆகியோரை அந்த விமர்சனத்தில் குறிப்பிடுகிறார்.

புலவர் ஆபிதீனை பலரும் பார்த்ததில்லை.அவரைப் பார்த்தவர்களும் இவர்தான் ஆபிதீன் என்று அடையாளம் கண்டு கொண்டதில்லை. அந்த அனுபவங்களைப் பாடலாக்கியிருக்கிறார் அவர்.

காரில்தான் போவார், கண்டால் பேச
மாட்டார் என்று நினைப்பவர்களெல்லாம்
நேரில் என்னைக் கண்டுவிட்டால் ‘பூ’
இவர்தானா என்று போய்விடுவார்கள்

என எழுதியுள்ளார். எளிமையும் வறுமையும் காரணம்

சென்னை நடைபாதையில் காய்கறிகளைப் பரப்பி கடை விரித்த அனுபவமும் அவருக்கு உண்டு. அந்த காட்சியைக் கண்ணால் கண்ட எழுத்தாளரும் நூலாசிரியருமான ஆர்.பி.எம். கனி பி.ஏ.பி.எல் அவர்கள் உடனடியாக அவருக்கு வேலை வாங்கித் தந்தார். சென்னை உயர்நீதி மன்றத்திற்கு எதிரில் இயங்கிய ஓர் அச்சகத்தில் பிழைதிருத்தும் பணியில் சேர்ந்தார் புலவர். (வேட்டி, வெள்ளைச் சட்டையுடன் அவரை மண்ணடியில் (1960) பார்த்த அனுபவம் என் நினைவில் பதிந்திருக்கிறது).

சமுதாயக் கவிஞர் :

‘இறைவன் மேலாணை
இனத்தின் மேலாணை
இறைமறை மேலாணை’

என்று சங்கநாதம் செய்து உரிமைக்குரல் எழுப்பி இன முழக்கம் புரிந்த கவிஞரின் புதுப்புது பாடல்களை இனி நாம் பெற முடியாது.

சென்று முடிந்த செப்டம்ப மாதத்தில் தமிழக முஸ்லீம்கள் இரு சமுக ஊழியர்களை அடுத்தடுத்து இழக்க நேர்ந்தது. முஸ்லிம் முரசு ஆசிரியர் எஸ். அப்துல் ரஹீம் அவர்களின் மறைவுக்கு சரியாக நான்கு நாட்களுக்கு முன்பாக சமுதாயக் கவிஞர் ஆபிதீன் அவர்கள் தமது சொந்த ஊரான நாகூருக்குச் சென்றிருந்தபோது அங்கேயே (23.09.1966) காலமானார்.

‘புலவர் ஆபிதீன் அவர்களின் தீந்தமிழ்ப் பாடல்களைச் செவியுறாத தமிழ் முஸ்லிம் எவரும் இருக்க முடியாது. கேட்டவுடன் அவைகளின் ஓசை நயத்தாலும் கருத்தாழத்தினாலும் கவரப்பட்டு அவற்றை திரும்பப் பாடிப் பார்க்காத நாவும் இருக்க இயலாது. நாட்டுக்கும் சமூகத்துக்கும் நல்ல பயத்தக்க நல்ல கருத்துக்கள் பலவற்றை அவ்வப்போது இயற்றிக் கொண்டு வந்தார் அவர். இஸ்லாமிய இசைச் செல்வர்கள் அவற்றைப் பாடிப்பாடி பரப்பி வந்தார்கள். சமுதாயம் பெரும் பயன் பெற்றது. ஆனால், அவற்றை அளித்த கவிஞரோ காலமெல்லாம் வறுமையில் உழன்றார்’.

‘வறுமை என்னிடம் தோற்றது’ என்று பெருங்கவிஞர்களுக்கே உரிய பாணியில் அவர் எள்ளி நகையாடும் அளவுக்கு வறுமை அதன் கைவரிசையை காட்டியது. நோயும் அதற்கு துணை நின்று பார்த்தது. அத்தகையதொரு லட்சியக் கவிஞரின் மரணத்தினால் இன்று தமில் முஸ்லிம் சமுதாயம் ஏழ்மைப்பட்டுள்ளது.’

முஸ்லிம் முரசு அக்டோபர் 1966 இதழில் சமுதாயக் கவிஞர் மறைவு எனும் இரங்கல் கட்டுரையில் சில பகுதிகள் இவை.

நினைவுச் சின்னமாக அவர் படைத்து விட்டுச் சென்ற பாட்டுச் செல்வம் நிலைத்து நிற்க சமுதாயம் வழிவகை செய்ய வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது.

ஐம்பது வயதுக்குள் அவர் ஆற்றிய இலக்கிய சாதனைகள் அதிகம். அவர் நினைவாக நாகூரில் ஆபிதீன் அரங்கம் இருக்கிறது.

நாற்பது ஆண்டுகள் விரைந்துவிட்டன. செம்மொழிப் புலவர் ஆபிதீனின் படைப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளனவா?

***

நன்றி : ஜே.எம். சாலி அவர்கள் / சமநிலைச் சமுதாயம்

***

‘புலவர் ஆபிதீன் அவர்கள் வாழ்வில் பெருந்துயர் அடைந்திருக்கிறார். அது அவரைப் பண்படுத்தி விட்டது. எனவே அவரின் பாக்களில் அடைவின் நிறைவை, அறிவின் செறிவைப் பரக்கக் காணலாம்’ – M.R.M. அப்துற் றஹீம் –

***

பணம் பேசுகிறது!     – புலவர் ஆபிதீன்

கடவுளால் ஆகாத காரியம் – கூடக்
கனிவுடன் செய்திங்குக் காட்டுவேன்!
மடையனை நான்மட்டும் நாடினால் – தேச
மனிதரில் மேதையாய் மாற்றுவேன்!

கல்விமான் என்றாலும் என்னவோய் – இரு
கைகளைக் கூப்பிடப் பண்ணுவேன்
வல்விதி யாயினும் சத்தியம் – தனி
வல்லமை யாலதை வெல்லுவேன்!

வானத்துச் சூரியன் வேண்டுமா? – அதை
வருவித்துப் பந்தயம் கட்டுவேன்!
சீனத்து வித்தையி தல்லடா! – என்னைச்
சீமையில் கேட்டாலும் சொல்லுவார்!

அரசனை ஆண்டியாய் ஆக்கவா? – நல்ல
அறிவுக்குத் திரையிட்டு மூடவா?
நரகத்துக் கதவினைப் பூட்டவா? – சக்தி
நிறையவே எனக்குண்டு நம்புவாய்.

உச்சியில் வைத்துனைப் போற்றவா – முழு
உண்மையைப் பொய்யாக்கிக் காட்டவா?
கச்சிதம் சேரிளம் பெண்களா? – அவர்
கற்பையே காசுக்கு வாங்கவா?

பணமாக்கும் என்பெயர் தெரியுமா? – வீண்
பரிகாசம் பண்ணுதல் மடமையே
பிணங்கூட ‘ஆ’வெனத் திறக்குமே – வாய்
பிடிவாதம் செல்லாது அறிகுவாய்.

***

– ‘அழகின் முன் அறிவு’ தொகுதி (1960) –

நன்றி : யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்

தகவல் : ஆபிதீன் பக்கங்கள்

புகழ் முகட்டில் ஆபிதீன்

சொல்லரசு. மு. ஜாபர் முஹ்யித்தீன்

‘ஈட்டியின் முனையில் நிறுத்தியபோதும்
ஈமான் இழக்க மாட்டோம்’

காற்றினிலே வரும் கீதமாகவோ ஏட்டினில் இடம்பெற்ற பாடலாகவோ நம்மை கவரும் கவிதைகள் உள்ளத்தை ஊடுருவனவாகவும், உணர்வலைகளை எழுப்பக் கூடியனவாகவும் செவிக்குளிர செய்வனவாகவும் சிந்தைக்கு இன்பம் தருவனவாகவும் இருத்தல் வேண்டும். அவ்வாறு ஆன பாடல் அர்த்தம் பொதிந்ததாக, அறிவு செறிவின் அடையாளமாக ஆழ்ந்த புலமையின் வெளிப்பாடாக அங்கீகாரம் பெறும். காலமெல்லாம் ஆளுமை செலுத்தும்.

உணர்வின் வெளிப்பாடாக வார்த்தை வரிவடிவங்களில் உருவெடுத்த கவிதைகள் அழுத்தமிக்கதாக ஆளுமைத்திறன் கொண்டதாக அமைந்துவிட்டால் பாடிய புலவன் புகழ்முகட்டில் நின்று பாடம் நடத்துவான். அத்தகு நிலை எய்தியவன் இறந்தும் இறவாத ஏற்றம் பெற்றவன் ஆவான். அப்படி அமரகவி ஆன அறிவு சான்றோர் ஆயிரம் ஆயிரம் பேர் அன்றும் வாழ்ந்தார்கள்; இன்றும் வாழ்கிறார்கள்; இனியும் வாழ்வார்கள். வாழும் வரம் பெற்றவர்கள் அவர்கள்.

புலமையின் காரணத்தால் பாடிக் குவித்து புகழ்மேவியவர்களுள் (நாகூர்) புலவர்கோட்டை தந்த நற்றமிழ்ப் புலவர் ஆபிதீனும் ஒருவர். கன்னல்சுவை மிகுந்த கவிதைகளால் கனல் தெறிக்கும் சொல் வன்மையால் கருத்தாழம் மிக்க படைப்பிலக்கியங்களால் அவர் அறிமுகமானார். அவர் மொழிப்புலமை மிக்க கவிஞர். சொல்லாற்றல் உடைய எழுத்தாளர். எழுத்து வன்மை கொண்ட இதழாசிரியர். மதிக்கப்பெற்ற மேடை நாடக ஆசிரியர். நற்றமிழ் இசைப்பாடல்கள் இயற்றிய நாடறிந்த இசைவாணர். ஆக அவர் முத்தமிழ் வித்தகர்.

தமிழை தாய்மொழியாக கொண்ட அவருக்குத் தெரிந்த மொழிகள் ஆங்கிலம், உருது, மலாய், பர்மா ஆகியவனவாகும். ஓவியங்கள் தீட்டவும் அச்சுக் கோர்க்கவும் திறன் பெற்றிருந்த அவர் அவ்வப்போது சிறு வணிகம் புரிந்தாலும் பாட்டு எழுதுவதையே வாழ்நாள் நெடுகிலும் தொழிலாகக் கொண்டிருந்தார். தேவைக்குரிய வருவாய் இன்றி வருவாய்க்கேற்ற வறிய வாழ்வினை நடத்தினார்.

எண்ணிக்கையில் நான்காயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை எழுதிக் குவித்தார். யாப்பிலக்கணம் கூறும் எல்லா வகை பாடல்களையும் எழுதியுள்ளார். சித்திர கவியும் அவருக்குத் தெரியும். பாடல்கள் புனைவதற்கு ஏற்ற ஒரு சூழலுக்காக ஒதுங்கி நின்றதில்லை. தேவை என்று சொன்னால் போதும். ‘திடீர்’ கவிதைகள் தீந்தமிழில் தருவார். எந்த நேரத்திலும் எவ்வித நிலையிலும் எழுதிடும் அவர் தூங்கும்போது மட்டும் எழுதியது இல்லை. அவர் எழுதிய கவிதைகளுக்கு பண்சாராக் கவிதைகள் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. பாட்டு எழுதுவதையே தொழிலாகக் கொண்டிருந்த அவர் எழுதிய பாட்டிற்காக பெருந்தொகை எதுவும் பெற்றதாக – பிழைப்பிற்கு வழி செய்து கொண்டதாக – இல்லை. ஒரு கோப்பைத் தேத்தண்ணீருக்காவும் பாடல் எழுதியிருக்கிறார். ஒரு பாடலுக்கு அவர் பெற்ற கூடுதல் தொகை ரூபாய் 80 (எண்பது) என்றும் கூறி வைத்துள்ளார்.

இந்தியத் துணைக்கண்டத்தில் வடபுலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்துள்ளார். கடல் கடந்து இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலாயா என்றெல்லாம் சுற்றி வந்துள்ளார். சென்ற இடங்களில் எங்கும் அவர் சோம்பித் திரியவில்லை. சுறுசுறுப்பாக இயங்கியுள்ளார். சமுதாய சேவையிலும் ஈடுபட்டுள்ளார். அவருக்குப் புகழ் சேர்த்த அளவு பொருள் சேரவில்லை. அருள் தேடி அலைந்த அவர் அதுபற்றி கவலைப்பட்டு கலங்கி நிற்கவில்லை. அதே நேரத்தில் அவர் சஞ்சலங்களுக்கும் சபலங்களுக்கும் ஆளாகி தடம் புரளவும் இல்லை; திசை மாறவும் இல்லை. தீனுக்கு – வாய்த் தீனுக்கு அல்ல – உழைத்த தீரர் அவர்.

இளமைப் பருவத்தில் அவர் இயற்றிய பாடல்கள் அனைத்தும் இறைமாட்சியையும் எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்-ம்) அவர்கள் வாழ்வியல் வழிகளை விளக்குவதாகவும். இறை நேசச் செல்வகளின் ஏற்றமிகு வழிமுறைகளை விவரிப்பனவாகவும் சமுதாய உணர்வூட்டும் செய்திகளாகவும் அமைந்து இருந்தன. அருமையான பாடல்கள் அவருக்கும் அவர் பிறந்த ஊருக்கும் பெருமை சேர்ப்பவைகளாகவே இருந்தன. நாகூரின் பண்டைய பெருமை மிக்க அமைப்புகளில் ஒன்றான கௌதிய்யா சங்கம் சார்பிலான பைத்து சபாவின் ஆஸ்தான புலவர் ஆனார் ‘ஆபிதீன் காக்கா’. அண்ணனை ‘காகா’ என்றும் ‘நானா’ என்றும் அழைப்பது நாகூர் முஸ்லீம் வழக்கு.

கௌதிய்யா பைத்து சபாவின் ஆஸ்தான புலவர் ஆபிதீன் இயற்றிய உணர்ச்சிக் கொப்பளிக்கும் உயர் தமிழ்ப் பாடல்களை விழாக்களிலும் ஊர்வலங்களின் பொது வீதிகளிலும் பாடியவர்கள் பலர். அவர்களும் குறிப்பிடத்தக்கவர் இன்று புகழ் மணக்கும் இசைப்பாடகராக வாழும் இசைமுரசு அல்ஹாஜ் இ.எம். ஹனீபா ஆவார். அன்றக்கும் அதன் பின்னர் பல ஆண்டுகளிலும் வட்டார பைத்து சபாவினர்களும் பாடகர்களும் புலவர் ஆபிதீன் பாட்டுக்களையே விரும்பி பாடி வந்தனர்.

சமுதாய அமைப்பான முஸ்லீம் லீக்கிற்கு , நீதிக்கட்சிக்கு பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கொள்கை விளக்க பாடல்களை எழுதியவர் அவர். தமிழக அரசியலில் அவருடைய பாடல்களின் முழக்கம் அவருக்கு தனி இடத்தை பெற்றுத் தந்தது. அர்த்தம் தொனிக்கும் அழகிய பாடல்களால் பாடுவோரும் பாடல் ஒலிக்கும் நிகழ்ச்சிகள் மாநாடுகளும் களை கட்டும். அவ்வப்போது கூடி நிற்கும் மக்கள் எழுப்பும் கரவோசை கடல் அலையையும் மிஞ்சும்.

புலவர் ஆபிதீன் பெற்றிருந்த பன்முகத்திறன் அன்று பரவலாக பேசப்பட்டது என்னவோ உண்மை. அவரது வாழ்க்கை வரலாறு அவருடைய வாய்மொழிகளில் வெளிச்சப் பகுதிக்கு வந்தது 1958ஆம் ஆண்டு டிசம்பர் மாத மணி விளக்கு இதழிலும் 1962ஆம் ஆண்டு ஜூலை மாத பிறை இதழிலும்தான். அவ்விரு இதழ்களிளும் இடம்பெற்ற நேர்காணலில் நெஞ்சம் திறந்து பேசியுள்ளார். நினைப்பையும் நிலையையும் உரைத்துள்ளார். அன்றைய நிலையில் அவரது எழுத்துக்கள் ஒன்பது நூல்களாக வடிவம் பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். மூன்று நூல்கள் அச்சேறாமல் பெட்டியில் தூங்குவதாகவும் கூறியுள்ளார். அவை பற்றிய விபரம் இன்று வரை தெரியாத ஒன்று. ‘நானிலங் கண்ட நபிமார்கள்’ என்ற தலைப்பிலான நூல் ஒன்று அச்சில் இருப்பதாக விளம்பரம் வந்தது. அப்படி ஒரு நூல் பார்வைக்கு வரவில்லை.

தேடலின் பயனாக இப்போது கிடைத்துள்ள அவருடைய ஆக்கங்கள் : (1) நவநீத கீதம். 1934ஆம் ஆண்டு நாகப்பட்டினம் லெட்சுமி விலாச அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது. இந்நூலில் நபிகள் பெருமானார் (ஸல்-ம்) அவர்கள் திருப்பெயரிலும் சாஹ¥ல் ஹமீது ஆண்டகை அவர்கள் பெயரிலும் பாடப்பெற்ற பத்துப் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. (2) திருநபி வாழ்த்துப்பா. 1935ஆம் ஆண்டு இரங்கூனில் நடைபெற்ற புனித மீலாது விழாவில் வெளியிடப்பட்டது. இரங்கூன் ஸ்ரீ ராமர் பிரஸில் அச்சிடப்பட்டது. இவை இரண்டும் காலத்தால் முந்தியவை. அவர் குறிப்பிட்டு கூறிய ஒன்பது நூல்களுள் இவை இரண்டும் சேர்ந்தவை என்று நம்பலாம். நூலாசிரியர் பெயர் ஒன்றில் மு. ஜெய்னுல் ஆபிதீன் என்றும் மற்றொன்றில் மு.ஜெ. ஆபிதீன் என்றும் அச்சிடப்பட்டுள்ளன. இரண்டு நூல்களையும் இயற்றியவர் புலவர் ஆபிதீன்தான் என்று அவர் காலத்தில் வாழ்ந்த அவருடைய நண்பர்கள் கூறினார்கள். அப்போதெல்லாம் புலவர் ஆபிதீன் என்று தெரியப்படவில்லை. ஆரம்ப காலம் அது.

அதன்பின்னர் 1949ஆம் ஆண்டு இலங்கை கொழும்பிலிருந்து புலவர் ஆபிதீன் கவிதைத் தொகுப்பு ‘தேன்கூடு’ என்ற பெயவில் வெளிவந்தது. அந்நூலில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் சில சொட்டும் தேன் துளிகள். சில கொட்டும் தேனீக்கள். மொத்தத்தில் அந்நூல் பல்சுவை விருந்து.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் புலவர் ஆபிதீன் படைப்பு இலக்கியங்களாக – பாடல்களின் தொகுப்புகளாக – அச்சில் வந்தவை மூன்று நூல்கள். அவை முறையே , 1960-ல் ‘அழகின் முன் அறிவு’ என்ற நூல். யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸின் வெளியீடு. அதனை அடுத்து 1961ஆம் ஆண்டில் பாவலர் பதிப்பக வெளியீடாக முஸ்லீம் லீக் பாடல்கள் நூல் வந்தது. தொடர்ந்து இஸ்லாமியப் பாடல்கள் புலவர் ஆபிதீன் முகவரி இட்டு வந்தது. இவை மூன்றும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றவை எனலாம். இவற்றைத் தவிர வேறு நூல்கள் எதுவும் தேடியும் கிடைக்கவில்லை.

பாகுசுவை தரும் புலவர் ஆபிதீன் பாடல்கள் இன்றும்கூட இசைமுரசு இ.எம்.ஹனிபா, இசைமணி எம்.எம்யூசுப் ஆகியோர் குரல்களில் வானொலி, தொலைக்காட்சி , ஒலிநாடாக்கள் ஆகியவைகளில் தமிழ் கூறும் நல்லுலகம் எங்கனும் ஒலிக்கின்றன. நாகூர் தர்கா ஆஸ்தான இசைவாணர், வித்துவான் எஸ்.எம். ஏ. காதிர், இசைமுரசு அல்ஹாஜ் இ.எம்.ஹனிபா, இசைமணி எம்.எம்.யூசுப், இசைத்தென்றல் ஹெச்.எம்.ஹனிபா, காரைக்கால் எம்.எம்.தாவூது, திருச்சி கலிபுல்லாஹ், மதுரை எஸ். ஹ¥ஸைன்தீன் , இலங்கை மெய்தீன் பேக் ஆகியோரும் பிறரும் பாடிய புலவர் ஆபிதீன் பாடல்கள் புகழ் குவித்தவைகளாகும்.

1947ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குச் சென்றிருந்த அவர் அங்கு விளம்பரப் பலகைகள் எழுதிடும் ஓவியராகத் தொழில் புரிந்தார். சிங்கப்பூர் தமிழ் முஸ்லீம்களின் சிறப்பிற்கு சிறப்பு சேர்த்த நாளிதழ் / வார இதழ் ‘மலாயா நண்பன்’ ஆகும். அதன் ஆசிரியர்களாக பல நல்லறிஞர்கள், நாடும் போற்றும் நல்லவர்கள் பொறுப்பேற்று பணியாற்றிய வரலாறு அதற்கு உண்டு. அறிஞர் மு.கரீம் கனி அவர்கள் ஆசிரியராக வீற்றிருந்த காலம் அதன் பொற்காலம். அந்தக் காலகட்டத்தில் புலவர் ஆபிதீன் மலாயா நண்பனின் ஆசிரியராக பணிபுரிந்தார். அறிஞர் கரீம் கனி, மணிமொழி மௌலானா கலீலுர் ரஹ்மான் ஆகியோர் நட்புறவின் பயணாக அல்லாமா முஹம்மது இக்பால் அவர்களின் வெளிப்பாடான கருத்துக்களுக்கு தமிழ் கவிதை வடிவம் கொடுக்கும் அரிய வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

சிங்கப்பூர் தமிழ் முஸ்லீம்களின் வாழ்வு அசைவுகளை அன்று பிரதிபலித்த மலாயா நண்பன் நாளிதழ், மற்றும் வார இதழின் பொறுப்பாசிரியராக பணியாற்றிய நாகூரைச் சேர்ந்த மூவருள் புலவர் ஆபிதீன் முதலாமவர் ஆவார். குறுகிய காலம் பணியாற்றினார் என்றாலும் அதன் பொருளாதார மேம்பாட்டிற்கு பெரிதும் உழைத்தார். மலாயா நண்பன் நாளிதழ் மற்றும் வார இதழ் ஆகியவற்றின் ஆசிரியர் பொறுப்பேற்ற நாகூரைச் சேர்ந்த இரண்டாமவர் எஸ்.எஸ். முஹ்யித்தீன். இவர் நீண்ட காலம் பணிபுரிந்தார். அவரை அடுத்து வார இதழின் துணை ஆசிரியர் பொறுப்பேற்று பணிபுரிந்தது நான் (மு. ஜாபர் முஹ்யித்தீன்). 1962ல் மலாயா நண்பன்
நிறுத்தப்பட்டு விட்டது.

எந்த நிலையிலும் நேரத்திலும் எண்ணங்களுக்கு எழுத்து வடிவம் கொடுத்து இனிய கவிதைகளாக வழங்கிடும் வல்லமை பெற்றிருந்த அவர் குறிக்கோளும் கொள்கை பிடிப்பும் கொண்டவர். சமுதாய உணர்வுடன் சலியாது சேவை புரிந்தவர். அவர் பாடல்களில் நாட்டுப்பற்று, மொழிப்பற்று மிகுதியாக காண முடிகிறது. உள்ளத்தில் ஊற்றெடுத்து வெள்ளம் போல பொங்கி வந்தவை. அவற்றில் தமிழ் துள்ளும். தரங்கெட்டவர்களையும், தீயவர்களையும் எள்ளும் எனில் சரியான மதிப்பீடு ஆகும்.

தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், கேரள சிங்கம் முஹம்மது கோயா, பேரறிஞர் அண்ணா, டாக்டர் மு.வ., அரசியல் ஞானி வடகரை பக்கர்,சொல்லின் செல்வர் ஆக்கூர் எம்.ஐ.அப்துல் அஜீஸ், கலைக்களஞ்சியம் எம்.ஆர்.எம். அப்துற்றஹீம், சிராஜூல் மில்லத் அப்துஸ்ஸமத் ஆகியோரும் பிறரும் பெரிதும் பாராட்டியுள்ளார்கள். வறுமையில் வாடி வருந்தியபோதெல்லாம் உள்ளன்புடன் உதவிக்கரம் தீட்டியவர்களில் சங்கு வாப்பா முகம்மது அபூபக்கர் குறிப்பிடத்தக்கவர். ‘மெய்யை விட்டு மறையும் வரையில் கையை மேலாய்க் காத்துக் கொண்டவர்’ சங்குவாப்பா என்று பாடிச் சென்றுள்ளார் புலவர் ஆபிதீன்.

***

‘எல்லாம் வல்ல ஏகனுக்கல்லால்
எவருக்கும் அஞ்ச மாட்டோம்’

முஸ்லிம் என்பவர் யார், அவர் எப்படி இருப்பார் எத்தகைய வாழ்வினர் என்று யாரும் கேட்டு அறிவதில்லை. அப்படிப்பட்ட தேவை எதுவும் இல்லை. எல்லோரும் தெரிந்து வைத்துள்ளனர்; அறிந்து வைத்துள்ளனர். இது உலகு எங்கனும் நிலவும் உண்மை நிலை. இன்றைய நிலையில், நேற்று பெய்த மழையில் முளைத்து நிற்கும் காளான்கள் (நாய்க்குடை என்பது நாகரீகம் அல்ல) நல்ல ஒழுக்கமும் நெறிமுறை தவறாத வாழ்வும் சொந்தமாகக் கொண்ட முஸ்லீம்களைப் பார்த்து ‘நீங்கள் முஸ்லீம்களா?’ என்று வினா எழுப்பும் வேதனை நிலை. நாம் அந்த நிலைகெட்ட மனிதர்களைப் பார்த்து நெஞ்சு பொறுக்க முடியாமல் நொறுங்கி கிடக்கிறோம் என்பது வேறு விஷயம்.

புலவர் ஆபிதீன் , முஸ்லிமாக , அதுவும் முழு முஸ்லீமாக வாழ்ந்தவர். மற்றவர்களுக்கு முன்மாதிரி முஸ்லீமாக வாழவேண்டும் என்று உளமார விரும்பியவர். அவர் எழுதிய பாடல்களில் அதன் வெளிப்பாடுகள் வெளிச்சப் புள்ளிகளாக ஒளிர்வது உணரப்பட்டவை; ஒப்புக்கொள்ளப்பட்டவை. அந்த பாடல்களில் ஒன்றில் சில வரிகள் முஸ்லிம்களை பிறருக்கு அறிமுகம் செய்து வைத்து, அதே நேரத்தில் முஸ்லிம்களுக்கும் அடையாளம் காட்டுகிறார்; அறிவுறுத்துகிறார்.

‘இறைவன் மேலாணை, இறைமறை மேலாணை’ என்று சத்திய வாக்கை முன்வைத்து தொடரும் பாடலின் பக்கம் பார்வையை செலுத்துவோம். அந்தப் பாடல் வரிகள்:

‘ஈட்டியின் முனையில் நிறுத்தியபோதும்
ஈமான் இழக்க மாட்டோம்
காட்டிக் கொடுத்திடும் கயவர்கள் தம்மைக்
கனவிலும் விடமாட்டோம்!
எல்லாம் இயன்ற ஏகனுக் கல்லால்
எவருக்கும் அஞ்சமாட்டோம்
நல்ல நம் நாட்டு நன்றியை மறந்து
நழுவியே ஓட மாட்டோம்.’

கூனர்களை நிமிரச் செய்யும் கெடுமதியாளர்களை நாணச் செய்யும் கூர்மையான வார்த்தைகள் வேறு வேண்டுமா? அத்துடன் அவர் நின்றார் இல்லை; நிலை கொண்டு நிம்மதிப் பெருமூச்சு விடவில்லை. நம்மைச் சுற்றி பார்வையை செலுத்துகிறார். நம்மை பற்றி நம்மிடையே நாடகம் ஆடும் அரிதாரம் பூசாத நடிகர்களைப் பற்றி பாடுகிறார். பார்வையை கூராக்கிக் கொள்ளுங்கள்.

ஊருக்கு உபதேசம் உள்ளத்துப் படுமோசம்
பேருக்கு தாடியும் பெருமையாந் தொப்பியும்
பாருக்கு தேவையா பாசாங்கு பண்ணுதல்
யாருக்கும் நலமாய் ஆகாது அறிவீர்.

ஈனம் இவையற இனியேனும் விடுமின்
ஞானம் இல்லாதவை நமதல்ல நீக்கு
மானம் வளர்ந்திட மதியை செலுத்து
தானம் புரிந்துயர் தைரியம் கொள்க

இவ்வரிகள் இன்றைய நமது எதிரிகளாக வலம் வருவோர்க்காக எழுதப்பட்டவைகளாக தோன்றுகிறது. உள்ளம் குழம்பி, ஊரையும் குழப்பத்தில் ஆழ்த்திடுவோர் உலவிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் ஆள்காட்டி விரல் நீட்டி அடையாளம் காட்டுவதாக உணரப்படுகிறோம், இல்லையா? அவ்வாறு ஆயின் அவருடைய தூர நோக்கு தெரிய வருகிறது. தூய வழிமுறை தெளிவாகிறது.

முன்பெல்லாம் புலமை மிக்க பாடலாசிரியர்கள் எழுதும் பாடல்களின் இறுதியில் தனது பெயரை இலாவகமாக பொறிப்பார்கள். இதற்கு புலவர் ஆபிதீன் விதிவிலக்காக இல்லை. கொஞ்சம் வேறுபட்டு வித்தியாசமாக பாடியுள்ளார். தியாக செம்மேறுகளான இம்மாம் ஹஸன் (ரலி), இமாம் ஹ¥சைன் (ரலி) ஆகியோர் வரலாற்றை விளக்க முனைந்தவர் புனைந்த பாடல் ஒன்று ‘இருக்கண்கள் ஹஸன் ஹூஸைன் வாழ்வே..’ என்று தொடங்கும். பாட்டின் நிறைவுப் பகுதியின் ஈற்றடியில் ‘ஜெய்னுல் ஆபிதீனைத் தவிர யாருமில்லை தீனோரே’ என்று வருகிறது. வரலாறு காட்டும் கர்பலா களம் கண் முன் வருகிறது (இமாம் ஹ¥ஸைனாரின் இளவயது மகன் ஜெய்னுல் ஆபிதீனைத் தவிர மற்றனைவரும் கொல்லப்பட்டனர்).

எடுத்த காரியங்களை முடித்த வகையில் அவர் சாதனையாளராகவே உருவெடுத்து இருந்தார். வீர உணர்வு மிக்க வரி வடிவங்கள், கேட்பவர்களையும் படிப்பவர்களையும் விழித்தெழ வைக்கும், வீறு கொள்ளச் செய்யும். அதில் அவருடைய தனித்துவம் உருவம் காட்டும். இறை இல்லங்களான மஸ்ஜித்கள் – பள்ளிவாசல்கள் – இஸ்லாத்தின் பார்வையில் மிகுந்த சிறப்பிற்குரியவைகளாகும். அவற்றில் வணக்க வழிபாடுகள் நடைபெறும் என்பதை எல்லோரும் அறிவார்கள். எடுத்ததெற்கெல்லாம் பயன்படுவது இல்லை. பயன்படுத்துவதும் இல்லை. இதற்காக மட்டும் பயன்படுத்தலாம் என்ற விதிமுறைகள் உண்டு.

சில ஊர்களில் சில முஸ்லிகளின் செயல்பாடுகள் சிறப்பிற்குரியவைகளாக இருப்பதில்லை. இந்நிலை விபரம் தெரிந்தவர்களை வேதனைக்குளாகிட செய்கிறது. இது என்னவோ உண்மை. எங்கோ எப்போதோ சஞ்சலத்திற்குள்ளாகி சங்கடப்பட்டுள்ள புலவர் ஆபிதீன் அவர் பார்த்த பள்ளிவாசலை படம் பிடித்து காட்டுகிறார் இப்படி :

கஞ்சியின் கலயம் நூறு
கவலையாய் பாதுகாத்து
கட்டியே வைத்திருந்தார்
கடமையாய் நோன்புக்காக
பஞ்சுதான் சிதைந்து போன
பழையபல் தலைய ணைகள்
பத்திர மாகப் பாயில்
பதுக்கிய பண்பு பார்த்தேன்!

வஞ்சகர் செருப்புத் திருட
வந்திரு ந்தார்க ளங்கே
வயதிலார் தொழுது நின்றார்
வாலிபர் யாரு மில்லை
துஞ்சினோர் செல்லும் பெட்டி
தூர ஓர் மூலை ஓரம்
தூக்கியே சார்த்தி வைத்த
துயர்தரும் காட்சி கண்டேன்.

முன்பொரு காலத்தில் புகழ் மிக்க மீ£ர் முஹம்மது ஜவ்வாது புலவர் , வழிநிலையில் கண்ட பள்ளிவாசல் பற்றி பாடிய பாடல்கள் இன்றும் கூட பலரது நினைவில் நிற்பதை நாம் அறிவோம். ‘வாங்கு சொல்ல மோதீன் இல்லை..’ என்று தொடங்கும் அந்தப் பாடல் பெற்ற பள்ளிவாசல் போல் இது இல்லை என்பது ஆறுதல் தருகிறது. ஆனால் பாடலின் ஒரு வரியில் ‘வாலிபர் யாருமில்லை’ என்று வருகிறது. அவர் வாழ்ந்த காலத்து பள்ளிவாசல் அப்படி. இப்போது நிலைமை மாறிவிட்டது. வாலிபர்கள் வரிசை பிடித்து நிற்கிறார்கள்.

ஆனால் வணக்க வழிபாடு, வழிமுறைகள் இவற்றில் ஏனோ இணக்கம் இல்லை. வேறுபட்டு நிற்பதுவும், விரிசல் ஏற்படுத்துவதும் சமுதாய ஒற்றுமைக்கு ஊறு
விளைவித்து வருகிறது. வேதனைக்குரிய செய்தி.

நாடு, மக்கள், மொழி ஆகியவற்றை அழகிய பாட்டுகளாக ஆக்கி தந்தவர் புலவர் ஆபிதீன். அவர் சார்ந்த தமிழ் முஸ்லிம் சமுதாயத்தின் சிறப்பை பல்வேறு நிலைகளில் புகழ்ந்து புகன்றுள்ளார். முஸ்லிம்களின் நாட்டுப் பற்றும், மொழிப் பற்றும் மற்ற யாருக்கும் இளைத்தது அல்ல; சளைத்ததும் இல்லை. வேறு வார்த்தைகளில் சொல்வது எனில் முஸ்லிம்கள் சிறப்பில் மற்றவர்களை மிஞ்சி நிற்கிறார்கள்; விஞ்சி நிற்கிறார்கள். மறுக்கவொண்ணா உண்மையை சுருக்கமாக அதே நேரத்தில் சுவை குன்றாமல் சொல்லி செல்கிறார்.

பாத்திரத்தை ஏனம் என்போம்
பழையதுவை நீர்ச்சோ றென்போம்
ஆத்திரமாய் மொழி குழம்பை
அழகாக ஆணம் என்போம்
சொத்தையுரை பிறர் சொல்லும்
சாதத்தை சோறு என்போம்
எத்தனையோ தமிழ் முஸ்லிம்
எங்களுயிர்த் தமிழ் வழக்கே!

கொஞ்சமும் ஐயத்திற்கு இடமின்றி சொல்லி வைத்த உண்மை. செம்மொழி தமிழுக்குச் சிறப்பு சேர்த்தவர்கள் நம் முன்னோர்கள். நமக்கு நல்ல வரலாறும் நனி
சிறந்த வழிவாரும் உண்டு.

அறிவு செறிவும் ஆழ்ந்த புலமையும், பாட்டுத் திறனும் மிக்க புலவர் ஆபிதீன் கேலியும் கிண்டலுமாக நையாண்டிப் பாடல்களையும் எழுதியுள்ளார். மணமக்களை வாழ்த்தும் வகையிலான சோபனங்களையும் இயற்றியுள்ளார்.

தமிழ் திரைப்படைதுறையில் முத்திரை பதித்த ரவீந்தர் (நாகூரைச் சேர்ந்த இவருடைய இயற்பெயர் ஏ.ஆர்.செய்யது காஜா மொய்தீன். கடந்த 4-11-2004ல் இறப்பெய்தினார்). திரைக்கதை, வசனம் எழுதி புகழ் குவித்தவர்களுள் குறிப்பிடத் தக்கவர். அவர் தயாரிக்கத் திட்டமிட்டிருந்த படம் ஒன்றிற்கு புலவர்
ஆபிதீன் பாடல்கள் எழுதினார். ரவீந்தர் எடுத்த முயற்சி ஏனோ கைவிடப்பட்டது. படத்துக்காக எழுதப்பட்ட பாட்டுகளும் காற்றோடு போயிற்று. காணக்
கிடைக்கவில்லை!

புலவர் ஆபிதீன் நாகூரில் பிறந்தவர். அவருடைய தந்தையார் பெயர் முஹம்மது ஹ¥சைன் சாஹிப் மரைக்காயர். தாயார் பெயர் சுல்தான் கனி அம்மாள். உடன்பிறப்புகள் மூவர். சகோதரர் ஒருவர் , சகோதரிகள் இருவர். முதற்மனைவி நாகூர் ஜெய்னம்பு நாச்சியார். மூன்று பிள்ளைகளுக்குத் தாய். இரண்டாவது மனைவி சென்னை ஆமினா அம்மாள். ஆமினா பெற்றெடுத்த பிள்ளைகள் நால்வர். புலவர் ஆபிதீன் குடும்பத்தினர் நாகூரிலும் சென்னையிலும் வாழ்கிறார்கள். நீண்டகாலம் சென்னையில் வாழ்ந்திருந்த புலவர் ஆபிதீன் நலமே ஊர் திரும்பினார். ஊருக்குத் திரும்பிய சில நாள்களில் , 23-9-1966 அன்று , மறுமைப் பேறு அடைந்தார். இஸ்லாமியத் தமிழ் இலக்கிய உலகம் ஈடு செய்ய முடியாத இழப்பிற்குள்ளாகியது. அவரது இறப்புச் செய்தியை , மு. ஜாபர் முஹ்யித்தீன் எழுதியவாறு 15-10-1996 நாளிட்ட முரசொலி நாளிதழ் செய்தி வெளியிட்டது.

மகாவித்துவான் வா. குலாம் காதிரு அவர்களின் ஒரே மகனான தறுகாஹ் வித்துவான் வா.கு.மு, ஆரிபு நாவலர் உள்ளிட்ட பல புலவர்கள் கையறு நிலையில் இரங்கற்பா கவிதைகள் பாடினர். நாகூர் தெற்குத்தெரு , செய்யது பள்ளித் தெரு, பீரோடும் தெரு சந்திப்பில் புலவர் ஆபிதீன் நினைவில் ஒரு அரங்கம் கட்டப்பட்டு ‘ஆபிதீன் அரங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கு அடித்தளம் இட்டு நினைவைப் பசுமையாக்கியவர் மு. ஜாபர் முஹ்யித்தீன் என்பது
பதியப்பட்ட வரலாறு.

***

‘நமது முற்றம்’ இதழில் மார்ச் – ஆகஸ்ட் (2005)-ல் வெளியான கட்டுரை

***

பி.கு : ‘மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் பெருமானே மாநிலத்தை தாங்கிடவோ எங்கள் பெருமானே’ போன்ற அருமையான பாடல்களை இயற்றிய புலவர்
ஆபிதீன் பற்றிய இன்னொரு கட்டுரை , சமநிலைச் சமுதாயம் (ஜூன் 2006) இதழில் வெளிவந்துள்ளது. எழுதியவர் ஜே.எம். சாலி அவர்கள். ‘ஒரு பெரும் மேதைக்கு வேண்டும் எல்லா அம்சங்களும் என்னிடம் உண்டு- உடம்பும் பணமும்தான் குறை’ என்று புலவர் ஆபிதீன் சொன்னதாக அறிஞர் R.P.M கனி
அவர்கள் தனது ‘இஸ்லாமிய இலக்கியக் கருவூலம்’ நூலில் (1963) குறிப்பிட்டுள்ளார்.

Permalink Leave a Comment

Next page »