முத்தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்கள்

07/02/2009 at 9:11 pm (முத்தமிழ் வளர்ச்சியில்)

‘தமிழுணர்ச்சியும் முஸ்லிம்களும்’ என்ற திராவிடத் தமிழர்களின் பதிவில் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் மற்றும் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோரின் தமிழ்பற்று மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டு பெரும்பாலான தமிழ் முஸ்லிம்கள், தமிழைப்  புறக்கணிக்கிறார்கள் என்ற தொனியில் கருத்துக்கள் இருந்தன.

அரேபியாவிலிருந்து சர்வ தேசங்களுக்கும் பரவிய இஸ்லாம் அதன் மூலமொழியாகிய அரபியை மட்டும் சார்ந்து வளரவில்லை.  உலகலாவிய மார்க்கத்தைப் பேணும் சமூகத்தவரை ஒரு மொழிக்குள் அடக்கிப் பார்ப்பதில் நியாயமில்லை. எனினும் தமிழ் மொழி பேசும் முஸ்லிம்கள் தமிழுக்காற்றிய பங்களிப்புகளை அறிந்து கொள்வது தமிழ் கூறும் நல்லுலகிற்கு அவசியமாகிறது.

இத்தொடரில் குறிப்பிடப்படும் முஸ்லிம் தமிழ் பண்டிதர்களும் புலவர்களும் சிலசமயம் இஸ்லாமிய அடிப்படை நெறிகளிலிருந்து விலகி தமிழூழியம் புரிந்துள்ளனர்.  அவர்களின் அனைத்து படைப்பிலக்கியங்களிலும் எமக்கு உடன்பாடு இல்லாவிடினும்,  தாய்த் தமிழுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளைக் குறிப்பிட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

கடந்த சில நூற்றாண்டுகள் வரையில் பேரறிஞர்களின் அறிவுத் தேடல்களுக்குத் தலைநகராய் விளங்கிய இராக், சிலுவைப் போர்களால் சின்னாபின்னப்பட்டபோது, பாக்தாத் நூலகங்களிலிருந்த அரிய புத்தகங்கள் தீயிலிட்டுச் சாம்பலாக்கி யூப்ரடிஸ்-டைக்கிரிஸ் நதிகளில் வீசப்பட்டதால் நதிநீர் கருப்பு நிறத்தில் ஓடியதாக வரலாற்றின் மூலம் அறிகிறோம்.

ஐரோப்பிய வரலாற்றின் இருண்டகாலங்கள் (Dark ages of Europe) என்று சொல்லப்படும் கி.பி . பத்து முதல் பதினான்காம் நூற்றாண்டுகளில் ஸ்பெயின் கல்வியில் சிறந்து விளங்கியது. வான் நட்சத்திரங்களுக்கு பெயரிட்டது முதல் விண்ணிலும் மண்ணிலும் அவர்கள் சாதனையாளர்களாகத் திகழ்வதற்கு இஸ்லாம் எந்தவகையிலும் தடையாக இருக்கவில்லை .

முஸ்லிம்களின் ஐம்பெருங் கடமைகளுக்கு அடுத்தபடியாகக் கல்வி கற்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் கடமையென்று வலியுறுத்திய மதம், உலகில் இஸ்லாத்தைத் தவிர ஏதேனும் உண்டா என்று தெரியவில்லை. இப்படி கல்வியோடும் நூல்களோடும் தொடர்புடைய முஸ்லிம்கள், தேனினுமினிய தமிழுக்குச் செய்ததை உலகமறியச் செய்திடும் ஒரு சிறு முயற்சியே இப்பதிவு .

இயல்-இசை-நாடகம் என்று முத்தமிழ் அறியப்படுகிறது. மதி மயங்கி, இறைவனை மறக்கச் செய்யும் இசையையும், இச்சையைத்தூண்டும் விதமாக ஆணும்- பெண்ணும் ஆபாசமாக ஆடிப்பாடுவதையும் இஸ்லாம் தடுக்கிறது. இந்த இரண்டிற்கும் வழிவகுக்கும் இசை-நாடகம் தவிர்த்து, தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு மிகக்குறைவு என்பது தமிழ் முஸ்லிம் இலக்கியங்களை அறியாதோரின் கூற்றாகும்.  விகிதாச்சார அடிப்படையில் வேண்டுமானால் ஓரளவு குறைவு என்பதை ஒப்புக் கொள்ளலாம்.

மேலும் இவ்விகிதாச்சாரம் குறைந்ததற்கு தமிழிலக்கியங்களை நாளடைவில் இந்து மயமாக்கியதும் ஒரு காரணம். உதாரணமாக கற்பின் மேன்மையை சொல்லும் சிலப்பதிகார நாயகி கண்ணகி தெய்வமாக்கப்பட்டுள்ளதைச் சொல்லலாம்.

கவிதைக்குப் பொய்யழகு என்பதில் ஓரளவு உண்மையுள்ளதால் பொய்யான வர்ணனைகளைச் சொல்லி அளவுக்கதிகமாக மனிதர்களையோ அல்லது படைப்பினங்களையோ புகழ்வதை இஸ்லாம் ஊக்குவிக்கவில்லை.

சங்கத் தமிழ் மன்னர்களின் அவையை அலங்கரித்தப் புலவர்கள் தகுதி இல்லாத மன்னர்களையும் பொய்யாக வர்ணித்துப் பொற்கிழி பெற்றுச் சென்றனர். ஒருவரை அளவுக்கு அதிகமாகப் புகழ்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பது தெரிந்திருந்தும் முஸ்லிம் இலக்கியவாதிகள் தாம் சார்ந்த நெறிக்கு அளிக்காத முக்கியத்துவத்தைத் தமிழுக்கு அளித்திருக்கின்றனர் என்றால் மிகையாகாது.

அந்தக் காலத்து உமறுப் புலவர் முதல் இந்தக் காலத்துக் ‘கவிக்கோ’ வரை தேடத்தேட முஸ்லிம் இலக்கியவாதிகள் வெளிவருகின்றனர். முத்தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு தொடரும்….

courtesy :http://athusari.blogspot.com/2006/07/1.html

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: