கவிஞர் தா. காசீம்

11/02/2009 at 9:46 pm (கவிஞர் தா. காசீம்)

 

நாகூர் ஹனீபா அவர்களின் பழைய பாடல்களைக் கேட்டிருப்போர் கவிஞர் தா.காசிம் அவர்களின் வரிகளைக் கேட்டிருப்பார்கள். இளையராஜாவின் திரையுலக வெற்றிக்குப் பிறகு நாகூர் ஹனீபா பாடிய கச்சேரிகளில் ‘இளையராஜா
மெட்டமைத்துத் தந்த பாடல்’ என்னும் அறிவிப்போடு பாடபட்ட பாடல், 

‘தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு! கொஞ்சம் நில்லு! – எங்கள்
திருநபியிடம் போய்ச் சொல்லு சலாம் சொல்லு’

இந்தப் பாடலை இயற்றியவர் கவிஞர் தா.காசிம்.

‘தீன்குலக் கண்ணு! – எங்கள்
திருமறைப் பொண்ணு!
மாண்புகளைக் காத்து நிற்கும்
மஹ்ஷரின் கண்ணு’

இதை இயற்றியவரும் தா.காசிம்.

மடலாற்குழுமங்களில் அறிமுகமான நல்லோர்களால் யாப்பிலக்கணத்தின் அடிப்படைகளை அறிந்துகொண்ட பின், மரபுக் கவிதைகளை வாசிக்கையில் அவற்றின் எதுகை, மோனை, அசை, சீர், ஓசைநயம் இவைகளை, ரசிகன் என்னும் நிலையத் தாண்டி மாணவன் என்னும் நிலையில் இருந்து அணுகிப்பார்த்த நாள்களில் தா.காசிமின் ‘உதயங்கள் மேற்கே’ என்னும் நூல் படிக்கக்கிடைத்தது.

சிறுவயது முதலே கேட்டு வளர்ந்த ‘தாயிஃப் நகரத்து வீதியிலே’ பாடலும், ‘தீன்குலக் கண்ணு’ பாடலும் நூலின் துவக்கத்திலேயே இருக்க, கவிஞரின் வரிகளுடன் ஏற்கெனவே உண்டாகியிருக்கும் தொடர்பு, அவரது விருத்தங்களைப்
படிப்பதில் கூடுதல் ஆர்வத்தை உண்டாக்கியது. முந்தைய பதிவில் குறிப்பிட்டதுபோல், ஆர்வம் இருக்கும் துறையில் வாசிப்பு அதிகமாகியது.  அங்கே வண்டிகள்; இங்கே விருத்தங்கள்.

‘பெருநாளின் பிறைவிடு தூது!’, திரவியம் தேடும் பாதையில் மனைவியைப் பிரிந்திருக்கும் நண்பர்களுள் எத்தனை பேர் இதனை வாசித்திருப்பார்களென அறியேன். ரசனையும், தனிமையும் இந்த விருத்தத்தின் சுவையை இன்னமும் அதிகமாக்கூடும்.

நவீன கவிதைகளின் ரசிகர்கள் இவற்றையெல்லாம் தாண்டி வெகுதூரம் கவிதை வந்துவிட்டதே இன்னுமென்ன பழைய விருத்தங்களில் ஆழ்வது என எண்ணலாம். அதுவும் ஒருகோணம். நட்சத்திர வாரம் எனக்குத் தரப்பட்டிருப்பதால் வழமையைவிடவும் அதிகமான நண்பர்கள் இடுகையினைப் படிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனை ஒரு வாய்ப்பாக
எண்ணி, என்னைக் கவர்ந்த எண்சீரை அதிகமான வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ள நினைத்ததன் விளைவுதான் இந்த இடுகை.

பெருநாளின் பிறைவிடு தூது!

மேற்றிசையின் வானத்து வெள்ளிக் கீற்றாய்
. மின்னுகின்ற பெருநாளின் பிறையே வந்தாய்!
ஏற்றுதற்கும் போற்றுதற்கும் இனிய நாளை
. எழில்செய்ய இளம்பிறையே தோன்றிவிட்டாய்!
நோற்றுவந்த பெருநோன்பை முற்ற வைத்தாய்;
. நோன்புக்குப் பெருநாளோ நாளை என்றாய்!
சாற்றுகிறேன் என்நெஞ்சக் கிடக்கை யெல்லாம்
. சந்தித்தே என்னவரில் சொல்லு வாயே!

அரும்பள்ளிக் குழல்பின்னி முடிக்க வில்லை
. அழகுமுகம் கண்ணாடி பார்க்க வில்லை
குறும்பாகச் செவ்விதழ்கள் விண்ட தில்லை
. குமுதவிழி அஞ்சனத்தைக் கொண்டதில்லை
கரும்பான மொழிபேசக் கேட்ட தில்லை
. கண்ணென்றும் மணியென்றும் சொன்ன தெண்ணி
துரும்பான என்னுடலம் இருப்பதெல்லாம்
. தூரதேசம் சென்றவரின் வருகைக் கன்றோ!

நல்லுணவை என்கையால் படைத்து வைப்பேன்
. நறும்நெய்யை ஊற்றியதில் தோய வைப்பேன்
அள்ளியள்ளி அவருண்ணப் பார்த்தி ருப்பேன்
. அவருண்டு மீந்ததைநான் அமுதம் என்றே
உள்ளினிக்க நாவினிக்க உண்டி ருப்பேன்
. உடனவர்க்கு வெற்றிலையும் மடித்த ளிப்பேன்!
அள்ளியுண்ண அவரில்லை மீதம் இல்லை
. அறிந்திருந்தும் மறந்தாரே பேதை என்னை!

நித்தமிங்கே உம்முருவை மனதில் தாங்கி
. நெஞ்சத்தின் சுமையாலே வதங்கு கின்றாள்!
கொத்து மல்லிச் சரமள்ளிக் குழலிற் சூடி
. குமுதமலர் முகம்காட்ட ஏங்கு கின்றாள்!
இத்தரையில் உமையல்லால் ஏது மில்லை
. என்றிருக்கும் ஏந்திழையைக் காண்பாய் என்றே
வித்தகரைக் கண்டுரைக்க மாட்டா யாநீ
. விண்ணேற்ற முதற்பிறையே என்ற னுக்காய்!
(கவிதையின் நீளம் கருதி இடையிலிருந்த எட்டு அடிகளைத் தட்டச்சவில்லை)
ஆசாத் – ‘பண்புடன்’ குழுமத்தில்

Advertisements

2 Comments

  1. Sulai said,

    கூத்தாநல்லூர் கவிஞர் சாரணபாஸ்கரன் அவர்களை விட்டு விட்டது ஏனோ.

  2. Abdul Qaiyum said,

    கவிஞர் சாரணபாஸ்கரன் அவர்களுக்காக தனியாக ஒரு வலைப்பதிவே தொடங்கி வைத்திருக்கிறேன்.

    பார்க்க சுட்டி :

    http://saranabhaskaran.wordpress.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: