அருள்வாக்கி அப்துல் காதிர்

28/03/2009 at 8:36 pm (அருள்வாக்கி அப்துல்காதிர்)

பாட்டாலே விளக்கெரியச் செய்து பாட்டாலே விளக்கை அணையச் செய்தார் ஒரு புலவர். அவர்தான் ஈழத்திருநாடு தந்த பாவலர் அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் (1912) . இந்த அற்புதத்தை அவர் கண்டி மாநகரில் பலர் முன்னிலையில் நிகழ்த்திக்காட்டினார்.

இறையருளும் நல்லிசைப்புலமையும் வாய்ந்த புலவர் விளக்கெரியும்படி பாடிய வெண்பா பாடல் வருமாறு;

எரிவாய் விரிந்தெழுந்து எண்ணெய் மேல் தோய்ந்து
கரிவாய் இருள்போகிக் காட்ட – அரியணையின்
தூண்டா விளக்கே! சுடர்விட்டு நீயென்முன்
ஈண்டிங் கெழுந்து எரி.

இவ்வாறு பாட்டால் தீபத்தை எரியச்செய்வது தீப சித்தி என்றழைக்கப்படும். அட்டாவதானம், தசாவதானம், சதாவதானம் என்பவற்றைவிட இது மேலானதாகும். இத்தகைய ஆற்றல்மிக்க புலவர் பாட்டால் எரியச்செய்த விளக்கைப் பாட்டாலே அணைத்தும் காட்டினார். அதற்காக அவர் பாடிய மற்றுமொரு வெண்பாவைப் பார்ப்போம்.

தூண்டா மணிவிளக்கே, துகள்போக்கும் தூயொழியே
காண்டற்கரியதோர் காட்சியே – வேண்டி
எரியவுனை வைத்ததுபோல் எல்லோரும் பார்க்க
அரியணையில் நீ நின்றணை.

இத்தகு ஆற்றல் மிக்க புலவரது சிறப்புக்குத் தெய்வப்புலவர் திருவள்ளுவரின்

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

எனும் குறளும்

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம்

எனும் தொல்காப்பியச் சூத்திரமும் தக்க சான்றாகும் எனலாம். இவ்வாறு அறிஞர் தம் முன்னிலையில் தமது ஆற்றலைக் காட்டிய புலவரின் செயலைக் கண்ணாரக் கண்டுகளித்த பொன்னம்பலக் கவிராயர்

எல்லா அதிசயத்தும் ஈது மிகப்பெரிதாம்
வால்லான்மெய்ஞ் ஞாநியப்துல்ல்காதிர் – பல்லார்முன்
பாட்டால் விளக்கெரித்துப் பாட்டதனாலேயணைத்துக்
காட்டியதோரிக்காட்சி காண்

என்று பாடிப் பரவசமுற்றார்.

புலவர் பாடும் புலவராய் மெய்ஞ்ஞானியாய் விளங்கிய அப்துர்காதிர் கண்டி மாவட்டத்திலுள்ள போப்பிட்டி என்னும் சிற்றூரில் 30 ஆகஸ்ட் 1866 அன்று பிறந்தவர். தந்தையார் ஆ.பி. அல்லாப்பிச்சை ராவுத்தர். தாயார் கவ்வா உம்மா. இளமையில் அரபுப்பள்ளியில் திருக்குர்-ஆனும் தமிழ்ப்பள்ளியில் தமிழும் பயின்ற இவர் கண்டியில் உள்ள ராணி அக்கடமியில் (தற்போது அர்ச் போல்ஸ் கல்லூரி) ஆங்கிலம் கற்றார்.

பின் தமது மூதாதையரின் இடமான திருப்பத்தூருக்குச் சென்று மஹ்மூது முத்துப் பாவாப்புலவரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத்தேர்ந்தார். தனது பதினாறாவது வயதிலே கவியரங்குகளில் கவிமழை பொழியத்தொடங்கினார். அச்சமயம் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த கவியரங்கொன்றில் கவிமழை பொழிந்த இவரது புலமைத்திறனை வியந்தோர் அவ்வரங்கிலேயே இவருக்கு “அருள்வாக்கி” எனப் பட்டம் சூட்டி மகிழ்ந்தனர். அன்றுமுதல் அதே பெயரில் அழைக்கப்படலானார். உண்மையிலே அவர் அருள்வாக்கினராகவே விளங்கினார். பலரது தீராத நோய்களைத் தீர்த்து வைத்தார் எனவும் கூறுவர்.

கவிஞர் த.  துரை சிங்கம்

(பைந்தமிழ் வளர்த்த ஈழத்துப் பாவலர்கள் நூலிலிருந்து)

Permalink 1 Comment