வித்வான் எஸ்.எம்.ஏ.காதிர்

23/08/2009 at 8:41 pm (இசைவாணர்கள், வித்வான் எஸ்.எம்.ஏ.காதிர்)

sma-kader

கடந்த 19.08.2009 ஆம் ஆண்டு புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு நாகூர் தர்கா உட்புறம் திறந்த வெளி அரங்கில் நாகூர் தர்கா ஆஸ்தான சங்கீத மகா வித்வான் உயர்திரு S.M.A. காதிர் அவர்கட்கு “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

25.08.1952 – ஆம் ஆண்டு நாகூர் தர்கா வித்வான் என்ற சிறப்புப் பதவி அளிக்கப் பெற்ற இவரை 57 வருடங்கள் கழித்து இதே மாதத்தில் இம்மாமனிதனின் மணிமகுடத்திற்கு மேலும் ஒரு சிறகினைச் சொருகி அழகு பார்த்திருக்கிறது நாகூர் தமிழ்ச்சங்கம்.

வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை என்று உணர்த்தியிருக்கிறது நாகூர் தமிழ்ச் சங்கம். பிறந்து இரண்டரை வயதான தத்தித் தவழுகின்ற இந்த குழந்தை 86 வயதான இந்த சங்கீத சாம்ராட்டினை வாழ்த்தியிருப்பது நமக்ககெல்லாம் பெருமை. 

ஆங்கிலத்தில் “Better Late than Never” என்பார்கள். இந்த பாராட்டு தாமதமாக வந்தடைந்தாலும் தகுந்த நேரத்தில் கிடைத்திருப்பது நமக்கு மட்டிலா மகிழ்ச்சி.
யான் வாசித்தளித்த கவிதை இது :

“சுவைப்போர்” நிறைந்த ஊர்
இந்த ஊர் – என் சொந்த ஊர்
ருசியைச் சுவைப்போரும்
இசையைச் சுவைப்போரும்
வசிப்போர் இந்த ஊர்

“வாரரோ வாராரோ
ஞானக்கிளியே”
என்று பாடிய
கானக்குயிலுக்கு
வாழ்த்துப்பா பாட
[பாப் (Pop) ஆட அல்ல]
வாய்த்தமைக்கு
வல்லோனை வணங்குகிறேன் !

சரீரம் தளர்ந்தாலும்
சாரீரம் தளராத
வீரியமிக்க
ஆரிய வாசம் வீசும்
ஸ்வரம் இவர் வசம்  – இது
இறைவன் கொடுத்த வரம் !

மரபிசைக்கு ஒரு ICON
இந்த மேதகு மரைக்கான்

இவருக்கு சங்கீதமும் தெரியும்
இங்கிதமும் தெரியும்

பாடிப் பாடியே
பாடி இப்படியே
(இப்போது தான் Body இப்படி!)
பணக்காரன் ஆனவர் இவர் !!

ஆம் .. .. ஒருகாலத்தில்
பெரும் பணக்காரனாய் இருந்து .. ..
பாடிப்பாடியே
பணக்காரன் ஆனவர் !!!

இவருக்கிருந்த செல்வத்தில்
மாளிகைகள் கட்டி இருக்கலாம்
ஆனால் ..
மாளிகைகள் ஒருநாளில்
மண்ணோடு மண்ணாக இடிந்து விடும்.

இவரிழைத்த
– ராகமாலிகை
– தாளமாலிகை
என்றென்றும்
எங்கள் காதுகளில்
தேனாய் இனிக்கும்.

பணக்கட்டுகளை காட்டிலும்
தாளக்கட்டுகளை கூடுதலாய் நேசித்தவர் – வீட்டின்
நடுக்கட்டில் இவர் பாடல்
களைகட்டும்

இவருக்கு இன்னும்
எத்தனையோ கோடிகள்
இறுக்கமாய் உண்டு
உண்மைதான் .. ..
சிஷ்ய-கோடிகள் பலவுண்டு

பாட்டென்றாலே
பலபேர் கத்துவான் – இந்த
பாட்டுடைத் தலைவன்
எல்லோருக்கும் வித்துவான்

இவருக்கு மணியான சீடர்கள்
many many – அதில்
தலையாய சீடர்தான்
இந்த “இசைமணி”

இவர் மட்டும்
ஐயர்வாளாய் இருந்திருந்தால்
இந்நேரம்
ஐநா வரை இவர் குரல்
எட்டியிருக்கும்

நாகூரில் பிறந்ததினால்
நாற்சுவரில் இவர் புகழ்
அடங்கிப் போனதோ?

திருட்டுத் தொழில்
இவர் தொழில்.
எத்தனை உள்ளங்களை
இவர் குரல் இதுவரை
கொள்ளை கொண்டிருக்கும்???

இவர் கலப்படக்காரர் ..
செய்ததோ முறையான கலப்படம்
கலப்படத்தில் அதுவென்ன
முறையான கலப்படம்?

இந்துஸ்தானியையும்
கர்னாடகத்தையும்
கலப்படம் செய்தது
நிருபணம்

– பாகேசீரி (நமக்கு ரவாகேசரிதான் தெரியும்(
– மால்கோஸ் (நமக்கு தெரிந்தது வெறும் முட்டைகோஸ்)
– மோகனம்
– சஹானா
– சுபபந்துவராளி
இவையனைத்தையும்
ஒன்றாக இணைத்து
பாடவல்ல வல்லமை
இவருக்குள்ள பெருமை

தர்பாரில்
கானடா ராகம்
இசைப்பவர் இவர்.
ஆம் ..
நாகூரார் தர்பாரில் !

தலைக்கனமில்லா இவருக்கு
ஆரோகணம் முதல்
அவரோகணம் வரை
அத்தனையும் அத்துப்படி

இவர் தொடாத ராகமில்லை .. ..
இவர் பாடாத புலவர்களில்லை ..

– உமறுப் புலவர்
– காசீம் புலவர்
– காலகவிப் புலவர்
– வண்ணக் களஞ்சியப் புலவர்
– ஆரிபு நாவலர்
– ஆபிதீன் புலவர்
– பண்டிட் உசைன்
– குணங்குடி மஸ்தான்
– கலைமாமணி சலீம்

ஆம் ..
இவர் தொடாத ராகமில்லை .. ..
இவர் பாடாத புலவர்களில்லை ..

– கும்மிப்பாட்டு
– குறவைப் பாட்டு
– ஞானப் பாட்டு- சாஸ்திரிய
கானங்கள் பாடியது பலநூறு
இவரை இவ்வூர் பெற்றது
நாம் செய்த பெரும்பேறு

தாளம் அறிந்த இவரை
ஞாலம் கண்டு கொள்ளாதது
காலத்தின் கோலம்

“சேதுசாரா” என்ற
ஆதிதாள உருப்படி – இவரை
உயரே கொண்டு சென்றது ஒருபடி

கிட்டப்பா பயின்ற
தாவுது மியான்
இந்த காதருக்கு
குருநாதர்

சென்னை சபாக்களில்
டிசம்பர் மாதமென்றாலே
சங்கீதம் களைகட்டும்
ஏன் தெரியுமா?
எங்கள் பாகவதர்
பிறந்த மாதம் அது.

சமய நல்லிணக்கத்திற்கு
இமயம்
இச்சங்கீதச் சிகரம்.
சமாதானத் தூதர்
இந்த காதர்

இவரை அழைப்பது
பவுனு வீட்டுத் தம்பி.
பவுனு பவுனுதான் !!

ஏழிசை கற்ற இவரை
வாழிய வாழியவென
வாயார வாழ்த்துகிறேன்

–  அன்புடன் அப்துல் கையூம்

நான்

Permalink Leave a Comment

குமரி அபூபக்கர்

07/02/2009 at 9:59 pm (இசைவாணர்கள், குமரி அபூபக்கர்)

kumari

குமரி மாவட்டத்தின் களியக்காவிளை பக்கத்தில் பூந்துறைக்கும் நம்பாறைக்கும் அருகில் உள்ள குக்கிராமம் காஞ்சன்புரம். வெறும் 10 முஸ்லிம் குடும்பங்களைக் கொண்ட கிராமம். அன்றைய மருத்துவத்தில் விஞ்சமுடியாத வல்லுநராக இருந்தவர் கண்ணுபிள்ளை வைத்தியர். அந்தக் குடும்பத்தில் ஒரு புலவர். வாப்புக்கண் ஆசான்.

செய்குதம்பி பாவலர், தியாகராய கீர்த்தனைகளைக் கொழும்பு போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று பாடியவர். சிறு வயதிலேயே பெருமானாருன் சீறா கீர்த்தனைகளைக் கேரள பாணியில் பாடியவர். வறுமை இவரது சொத்தாகி அதுவே இவரைக் காவு கொண்டபோது, “”வறுமையில்தானே வர்த்தனையாகும்!” -என்று கவி.கா.மு. ஷெரீபை மனம் நோக வைத்தது. இந்த விருட்சங்களின் வாரிசு மருமகன்தான் குமரு அபூபக்கர்.

இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் (ஐ.டி.பி.எல்) பணிபுருந்து ஓய்வு பெற்றவர். கவி.காமு. ஷெரீபுடன் ஒரு கால் நூற்றாண்டுக் காலம் கம்பம், பள்ளப்பட்டி, கூத்தாநல்லூர், கீழக்கரை போன்ற தமிழகத்தின் முஸ்லிம் கிராமங்கள் தோறும் இசை மழையைப் பொழிந்தவர். இசையை ஒரு தொழிலாகக் கொள்ளாமல் மக்கள் தருவதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வது இவரது தனிச்சிறப்பு.

இவரது வளர்ச்சிக்கு மூல காரணம் தைக்கா வாப்பா, ஏவிஎம் ஜாஃபர் தீன், நூர்தீன் காக்கா என்று இவர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார். சென்னை வானொலியில் 20 ஆண்டுகளாகப் பாடி வருபவர். காசிம் புலவரின் அருள்வாக்கு, திருப்புகழ் இவற்றைச் சரளமாகப் பிசிறில்லாமல், நிறுத்தாமல் பாடுவது இவரது பிரத்யேகமான சிறப்புக்கூறு.

காசிம் புலவர் திருப்புகழை… அருணகிரிநாதரின் பாடலைப் போல் மூச்சுப் பிடித்துப் பாடுவது வியப்பானது. தமிழ் இலக்கியங்களில் இடம் பெறும் புலவர்கள்தான் இவரது ஆராய்ச்சிக் களம். அவர்களைத் தேடிப் பிடித்து அவர்கள் பாடிய பாட்டுகளை மெட்டமைத்துப் பாடுகிறார். தற்போது இவரது ஆய்வில் சிக்கியுள்ளவர் புலிக்குட்டி புலவர். 65 வயதாகும் குமரி அபூபக்கரின் குரல் இன்னும் இளமை மாறாமல் இருக்கிறது. இவரது மகள்தான் தூர்தர்ஷனில் செய்தி வாசிக்கும் நஸீமா சிக்கந்தர். 2 பிள்ளைகளும் உண்டு.

இக்வான் அமீர்

நன்றி : தினமணி – ஈகைப் பெருநாள் மலர்

Permalink Leave a Comment

இசைமணி யூசுப்

07/02/2009 at 9:47 pm (இசைவாணர்கள்)

isaimani

சொந்த ஊர் நாகூர். தற்போது வசிப்பது சென்னை பல்லாவரத்தில். ஆரம்பத்தில் கேள்வி ஞானத்தால் இசையுலகில் நுழைந்தவர் இசைமணி யூசுஃப். காசியிலிருந்து வந்த பரம்பரையைச் சேர்ந்தவர்கள் உஸ்தாது டோலாக் நன்னுமியான், உஸ்தாது சோட்டு மியான், உஸ்தாது தாவுத் மியான் போன்றவர்கள். சங்கீதமே உயிர் மூச்செனக் கொண்ட குடும்பம் இது. அக்குடும்பத்தில் உதித்தவர்தான் மிராசுதார் எஸ்.எம்.ஏ. காதர்.

பெரும் வாணிகக் குடும்பத்தில் பிறந்தவராயினும் சங்கீதத்தை உயிருக்கு உயிராய் நேசிப்பவர். முஸ்லிம் குடும்பத்தில் தப்பிப் பிறந்த இசை ஞானி என்று பிராமணர்களால் பாராட்டப் பெற்றவர். நா௬ர் தர்காவின் ஆஸ்தான வித்வான். இவர்தான் இசைமணியின் ஆரம்ப ஆசிரியர் -குரு எல்லாம். கேரளாவின் வாஞ்சீஸ் அய்யர், இவரது ஆர்வத்தைக் கண்டு மும்மூர்த்திகளின் கீர்த்தனைகளோடு சுவாதித் திருநாள் கீர்த்தனைகளையும் கற்பித்தார்.

இத்தகைய இசையாளரால் அரங்கேற்றப்பட்டவர்தான் யூசுஃப். அதன் பின் முறையாக கர்நாடக இசை பயின்று இசை மணி பட்டம் பெற்றவர். 20 ஆண்டுகளாக இசைத் துறையில் தனக்கென்று ஒரு பாணியுடன் இருப்பவர்.

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று நூற்றுக்கணக்கான கச்சேரிகளைச் செய்திருப்பவர். சென்னையின் முக்கிய தர்காக்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளிலெல்லாம் இவரது குரல் ஒலிக்கும்.

தமிழறிஞரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவருமான காலஞ்சென்ற “சிராஜுல் மில்லத்’ அப்துஸ் ஸமதை தனது குரலால் உணர்ச்சிவயப்பட வைத்து கண்ணீர் சிந்த வைத்ததைத் தன்னைப் பெருதும் பாதித்த சம்பவமாகச் சொல்கிறார் இந்த 70 வயது இசைமணி.

இலங்கையைச் சேர்ந்த புரட்சி கமாலின் திருக்குர்ஆனைப் பற்றிய பாடல்தான் அது! “”சமத் சாஹெப் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் அவரது அலுவலகத்தில் வைத்து அந்தப் பாடலைப் பாடச் சொன்னார். “வையகத்தின் மணிவிளக்கே’ எனத் தொடங்கும் அப்பாடலை நான் பாடப் பாட தலைவர் உணர்ச்சிவயப்பட்டு அழ ஆரம்பித்தார்கள். இடையில் மக்ரூப் தொமுகை வந்தது.

தொமுகைக்காகப் பாடலின் இறுதி வரிகளைப் பாடாமல் நிறுத்திவிட்டேன். தொழுது முடித்து வந்ததும் தலைவர் மீண்டும் கவனமாக அந்த இறுதி அடிகளை எடுத்துக் கொடுத்துப் பாடச் சொன்னார்” என்று நினைவு ௬ர்கிறார் இசைமணி யூசுஃப்.

நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார், இசைமணி சீர்காழி கோவிந்தராசன் போன்ற பெரியவர்களால் பாராட்டுப் பெற்றதைப் பெருமையாகக் கருதுகிறார்.

இக்வான் அமீர்

நன்றி : தினமணி ஈகைப்பெருநாள் மலர்

Permalink Leave a Comment

இசைமுரசு நாகூர் ஹனீபா

07/02/2009 at 9:38 pm (இசைவாணர்கள்)

nagore-haniffa1
இஸ்லாமிய மார்க்க அறிஞர்களால் சர்ச்சைக்குரிய ஒன்றாகக் கருதப்படும் விஷயங்களில் இசையும் ஒன்று. இசை கூடுமா? கூடாதா? என்பது காலங்காலமாக இருந்துவரும் சர்ச்சை.

இந்த உலகமே இசையால் நிரம்பியதுதான்! காற்றின் வேகம் மூங்கிலில் பட்டு புல்லாங்குழல் இசையாகிறது. கடலலைகள் மண்ணில் மோதி ஓலமிட்டு இசைக்கின்றன. பூவில் தென்றல் மோதும்போது ஓர் இசை பிறக்கிறது. சூறைக் காற்று பிரளயமாய் உருவெடுக்கும்போது மற்றொரு இசை ஜனிக்கிறது. இப்படி உலகம் முமுவதுமே இசையால் ஆனதுதான். அதனால் இஸ்லாம் தடுக்க நினைக்கும் இசை, மனித குலத்துக்குக் கேடு விளைப்பது தானாக இருக்க வேண்டும். மனதைக் கிறங்கடித்து, ரத்த நாளங்கள் திணவெடுத்து, சுற்றுச்சூழலை அதிரவைத்து மனிதனின் அக-புற வாழ்க்கைக்குக் கேடுவிளைவிக்கும் இசைதான் உண்மையில் தடுக்கப்பட வேண்டியது.

இப்படி இசை கூடுமா… கூடாதா… என்ற சர்ச்சை மேலெமுந்து கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தில் துணிச்சலாக இசையைக் கையாண்டு ஓர் அரை நூற்றாண்டுக் காலம், தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் மூத்த முஸ்லிம் இசைவாணர்கள் நால்வருன் வேறுபட்ட முகங்கள் இவை.

எட்டுக் கட்டைக் குரலெடுத்து…

பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம். பிற்காலத்தில் குடியேறியது, கலை நகரமான நாகூர்! ஆரம்பத்தில் பாடியது புலவர் ஆபிதீனின் பாடல்களை. 40-களில், பிரபல லுங்கி வர்த்தகர் ஒருவரின் இல்லத் திருமணத்துக்குச் சென்றவர் மணமேடையைத் தனது பாடலால் ஈர்த்து தனக்கென்று அங்கீகாரம் பெற்றார்.

“”எட்டுக் கட்டைக்கு மேலாக ஒலிக்கும் இவரது குரல் கிட்டப்பாவைத் தோற்கடிக்கும். தனது குரல் முரசால் இசை முரசு என்ற பட்டம் பெற்றவர்!” என்று புகழ்ந்துரைக்கிறார் “”செளந்தர்ய முத்திரை” கவிராயர் மூஸா. மதங்களையும் தாண்டி “பரம்பொருள் ஒன்று! அவனிடமே சரணடையுங்கள்!’ என்று நம்பிக்கையாளர்களுக்கு தெம்பூட்டியவர். இத்தனை சிறப்புக்கும் உரியவர்தான் இசை முரசு நாகூர் ஹனீபா.

இவரது இசை முஸ்லிம்களையும் தாண்டி திராவிடப் பாசறையிலும் ஒலித்தது. “அழைக்கின்றார்… அழைக்கின்றார்… அண்ணா” என்ற இவரது பாடல் முழக்கம் கேட்டதும் அதுவரை மேடையருகே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் அண்ணா நேராக மேடையேறிவிடுவாராம்.

குன்றக்குடி அடிகளார், மதுரை ஆதீனகர்த்தர், சோமசுந்தர தம்பிரான் ஆகியோருன் மடங்களிலும் கூட இசை முரசுவின் பக்தி மணக்கும் பாடல்கள் ஒலிக்கும். “”இறைவனிடம் கையேந்துங்கள்! அவன் இல்லை என்று சொல்லுவதில்லை!” -என்ற பாடல் பல கோயில் திருவிழாக்களிலும், மார்கழி மாதங்களின் அதிகாலைப் பொமுதுகளிலும் பல கோயில்களில் ஒலிக்கும். இதற்கு பாடலாசிரியர் கிளியனூர் அப்துல் சலாம் (மயிலாடுதுறை) ஒரு காரணம் என்றால், அதற்கு உயிரூட்டிய ஹனீபாவும் மற்றொரு காரணம்.

நூற்றுக்கணக்கான இவரது பாடல்கள் இசைத்தட்டு வடிவம் பெற்றுள்ளன. முஸ்லிம்களின் திருமண நிகழ்ச்சிகள், மீலாது மேடைகள், தர்காக்களின் உரூஸ் நிகழ்ச்சிகள், முஸ்லிம் லீக் மாநாடுகள், பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சிகள், திராவிட முன்னேற்றக் கழக மாநாடுகள் நாகூர் ஹனீபாவின் இசை அருவி பொழியாமல் நிறைவு பெற்றதில்லை.

இக்வான் அமீர்

நன்றி : தினமணி – ஈகைப் பெருநாள் மலர்

Permalink Leave a Comment