குமரி அபூபக்கர்
குமரி மாவட்டத்தின் களியக்காவிளை பக்கத்தில் பூந்துறைக்கும் நம்பாறைக்கும் அருகில் உள்ள குக்கிராமம் காஞ்சன்புரம். வெறும் 10 முஸ்லிம் குடும்பங்களைக் கொண்ட கிராமம். அன்றைய மருத்துவத்தில் விஞ்சமுடியாத வல்லுநராக இருந்தவர் கண்ணுபிள்ளை வைத்தியர். அந்தக் குடும்பத்தில் ஒரு புலவர். வாப்புக்கண் ஆசான்.
செய்குதம்பி பாவலர், தியாகராய கீர்த்தனைகளைக் கொழும்பு போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று பாடியவர். சிறு வயதிலேயே பெருமானாருன் சீறா கீர்த்தனைகளைக் கேரள பாணியில் பாடியவர். வறுமை இவரது சொத்தாகி அதுவே இவரைக் காவு கொண்டபோது, “”வறுமையில்தானே வர்த்தனையாகும்!” -என்று கவி.கா.மு. ஷெரீபை மனம் நோக வைத்தது. இந்த விருட்சங்களின் வாரிசு மருமகன்தான் குமரு அபூபக்கர்.
இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் (ஐ.டி.பி.எல்) பணிபுருந்து ஓய்வு பெற்றவர். கவி.காமு. ஷெரீபுடன் ஒரு கால் நூற்றாண்டுக் காலம் கம்பம், பள்ளப்பட்டி, கூத்தாநல்லூர், கீழக்கரை போன்ற தமிழகத்தின் முஸ்லிம் கிராமங்கள் தோறும் இசை மழையைப் பொழிந்தவர். இசையை ஒரு தொழிலாகக் கொள்ளாமல் மக்கள் தருவதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வது இவரது தனிச்சிறப்பு.
இவரது வளர்ச்சிக்கு மூல காரணம் தைக்கா வாப்பா, ஏவிஎம் ஜாஃபர் தீன், நூர்தீன் காக்கா என்று இவர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார். சென்னை வானொலியில் 20 ஆண்டுகளாகப் பாடி வருபவர். காசிம் புலவரின் அருள்வாக்கு, திருப்புகழ் இவற்றைச் சரளமாகப் பிசிறில்லாமல், நிறுத்தாமல் பாடுவது இவரது பிரத்யேகமான சிறப்புக்கூறு.
காசிம் புலவர் திருப்புகழை… அருணகிரிநாதரின் பாடலைப் போல் மூச்சுப் பிடித்துப் பாடுவது வியப்பானது. தமிழ் இலக்கியங்களில் இடம் பெறும் புலவர்கள்தான் இவரது ஆராய்ச்சிக் களம். அவர்களைத் தேடிப் பிடித்து அவர்கள் பாடிய பாட்டுகளை மெட்டமைத்துப் பாடுகிறார். தற்போது இவரது ஆய்வில் சிக்கியுள்ளவர் புலிக்குட்டி புலவர். 65 வயதாகும் குமரி அபூபக்கரின் குரல் இன்னும் இளமை மாறாமல் இருக்கிறது. இவரது மகள்தான் தூர்தர்ஷனில் செய்தி வாசிக்கும் நஸீமா சிக்கந்தர். 2 பிள்ளைகளும் உண்டு.
இக்வான் அமீர்
நன்றி : தினமணி – ஈகைப் பெருநாள் மலர்