பர்வீன் சுல்தானா பேட்டி

09/02/2009 at 8:47 pm (பர்வீன் சுல்தானா)

parvin-sultana
  
சென்னை நீதிபதி பஷீர் அகமது சயீது மகளிர் கல்லூரியில் கடந்த 9 ஆண்டுகளாக தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பணியாற்றிவரும் முனைவர் இ.சா. பர்வீன் சுல்தானா கொழும்பு கம்பன் விழா மேடைகளில் பட்டிமன்றம், சுழலும் சொற்போர், வழக்காடு மன்றம் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு கம்பன் புகழ்பாடி தன் தமிழ் ஆற்றலை வெளிக்காட்டினார்.

ஒவ்வொரு மேடையிலும் சமூக விழிப்புணர்வுடன் கூடிய இலக்கிய உரைகளை ஆற்றிவரும் இவர், தனது கணவர் நடத்திவரும் தமிழியல் ஆய்வு நிறுவனத்திற்காக ஆய்வேடுகளை புத்தகமாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார். கம்பன் விழா நினைவுகளுடன் அவர் தாயகம் புறப்படவிருந்த வேளை சங்கமத்திற்காக அவரிடம் நாம் கேட்ட சில கேள்விகளையும், அதற்கு அவர் அளித்த பதில்களையும் இங்கு தருகின்றோம்.

கேள்வி : உங்களுடைய கலை இலக்கிய பணிகளில் பிரதானமானதாக எதைக் கருதுகிறீர்கள்?

பதில் : மக்களை சந்தித்தல், பிரயாணம் என்பதும் என்னுடைய கலை இலக்கிய பயணத்தில் மிக முக்கிய கூறாகக் கருதக்கூடியது. நாம் எவ்வளவு திறன் படைத்தவர்களாக இருந்தாலும், அந்த திறமையை சரியான முறையில் பயன்படுத்தல் முக்கியம். அந்தப் பயன்பாட்டுக்கு பிரயாணமும் மக்களினுடைய சந்திப்பும்தான் முக்கியமானது. அந்த மக்களை சந்திப்பதன் மூலமாக அவர்களினுடைய நிலையில் ஊடாடுவதன் மூலமாக நம்முடைய இலக்கிய பயணத்தை சிறந்த முறையில் கொண்டு செல்ல முடியும் என நான் கருதுகிறேன்.

கேள்வி : உங்களுடைய நூல் ஆக்கப்பணிகளை பற்றி குறிப்பிடுங்கள்?

பதில் : என்னுடைய முனைவர்பட்ட ஆய்வேடு சென்னை பல்கலைக்கழகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கலாநிதி என்ற பட்டம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு. அதில்நான் எடுத்துக் கொண்ட தலைப்பு இஸ்லாமிய இலக்கியங்கள் அதிலே படைப்போர் என்ற “போர் கதை பாடல்கள்” முனைவர் பட்ட ஆய்வேடு மிகவும் பாராட்டப்பட்ட ஆய்வேடு. அதில் உள்ள செய்திகளை நான்கு நூல்களாக வெளியிட்டுள்ளேன். பழந்தமிழ், இஸ்லாமிய இலக்கியச் சுவடிகளை தேடி பதிப்பிக்கக்கூடிய வாய்ப்பும் கிடைத்தது. தமிழக இஸ்லாமிய இனக்குழு மக்களிடையே இருக்கக்கூடிய வாழ்வியல் சடங்குகள் குறித்த நூல் ஒன்றையும் பல்கலைக்கழகத்திற்கு ஒரு டிப்ளோமா பட்டத்திற்காக சமர்ப்பித்துள்ளேன். இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதியாக அமெரிக்க அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று தலைமைத்துவ பயிற்சி ஒன்றில் கலந்து கொண்டு அந்த பயிற்சியின் அடிப்படையில் “தலைமை தாங்கவா” என்ற நூலினையும் வெளியிட்டுள்ளேன். “தங்க மங்கை” என்ற கட்டுரை பத்திரிகையில் தொடர் கட்டுரையாக வருகின்றது.

கேள்வி : இலங்கைக்கு பலமுறை வந்துள்ள நீங்கள் இலங்கைத் தமிழ் முஸ்லிம் மக்களின் இலக்கிய ஆர்வத்தை பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில் : நாகரீகத்தை தந்த இனக்குழுக்களில் இஸ்லாமியர் மிக முக்கியமானவர்கள் நாகரீகம் என்று சொன்னாலே கலை இலக்கிய ஆர்வம் இருப்பதாக பொருள். முழுமையான இலக்கிய வடிவம் பெற்ற எந்த ஒரு மொழியும் செம்மொழியாக வழங்கப்படும். அந்த மொழியை தாய்மொழியாக கொண்டுள்ள இலங்கை முஸ்லிம்கள் இலக்கியத்தரம், திறனாய்வு, படைப்பாக்கம் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறார்கள் என்பது என்னுடைய கணிப்பு. காரணம் காலங்காலமாக தமிழ் இலக்கியங்களைப் படைக்கக்கூடிய வாய்ப்பு, எல்லாத் தமிழ் மக்களுக்கும் கிடைத்தாலும் முக்கியமாக இஸ்லாமிய இனக்குழு மக்களிடையே இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமிழ் இலக்கியத்திற்கு தந்த பங்களிப்பு பாரமானது. நான் ஆய்வேட்டை செய்யும் போது பல இஸ்லாமிய இலக்கிய நூல்கள் இலங்கையில் முஸ்லிம்களால் பதிப்பிக்கப்பட்டுள்ளதை அறிந்து கொண்டேன். அதுவும் 19ஆம் நூற்றாண்டு இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டு முதற் பகுதியிலும் பல நூல்கள் கிடைக்கின்றன “ஆய்வு களத்தில் ஐந்து படைப்போர்” என்கின்ற நூல் கிடைக்க முடியாத நிலையில் அதை இலங்கையில் இருந்து பெற்றோம். அதனுடைய அச்சுவேலையெல்லாம் இலங்கையில் நடைபெற்றுள்ளது என்பது தெளிவாகிறது.  1978ஆம் ஆண்டு சரிபுத்தீன் என்கின்ற கவிஞர் சூறாவளி என்ற நூலை இயற்றியுள்ளார். அதுதான் படைப்போர் இலக்கியத்தில் நமக்கு கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த நூலாகும். மார்க்கங்களை கடந்து முஸ்லிம்கள் இலக்கியம், தமிழ் என்றாலே முழுமையான ஆர்வம் காட்டி அதிலே தம்மை மிகச்சிறப்பாக நிலை நிறுத்தியுள்ளார்கள்.இதில் மகிழ்ச்சி தரும் விடயம் நான் சார்ந்துள்ள சமுதாயத்தில் இருந்து தமிழ் மீது ஆர்வம் கொண்ட இவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான். அத்தோடு வேறு மார்க்கத்தில் உள்ளவர்களுடைய இலக்கியங்களைப் பெற்று அதை வெளியில் வந்து பேசவும், எழுதவும், பதிப்பிக்கவும் கூடிய வாய்ப்பையும் பெற்றுள்ளார்கள் என்பது மனிதநேயத்தின் முக்கிய விடயமாக நான் கருதுகிறேன்.

கேள்வி : தமிழக மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் இடையில் இலக்கிய விடயத்தில் வேறுபாடு உண்டா? ஒற்றுமை உண்டா?

பதில் : எல்லாம் அந்தந்த மக்கள் வாழும் மண் சார்ந்த கலாசாரத்தில்தான் ஈடுபாடுகள் இருக்கின்றன. அந்த ஈடுபாட்டில் சில வேறுபாடுகளும் உண்டு. சில ஒற்றுமை கூறுகளும் உண்டு. வேறுபாடுகள் என்பது அவர்களுடைய புரிதல், அவர்கள் வாழக்கூடிய சூழல், வளர்ப்பு, கல்வி, ஆசிரியர்கள் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டது. தமிழகம் என்பது மிகப் பரந்த நிலப்பரப்பை கொண்டுள்ளது. அவற்றில் பல்வேறு கூறான கலாச்சார கலப்பு என்பது தவிர்க்க முடியாதது. எது சிறந்தது எது தாழ்ந்தது அல்ல பிரச்சினை அவரவர்கள் அந்தந்த நிலையில் தன்னால் எந்தளவிற்கு சிறப்பாக பணியாற்ற முடியுமோ அப்படி பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்.தமிழக மக்கள் மேடையில் பேசும் போது என்ன பேசுகிறார்கள் என்பதைத்தான் பார்க்கிறார்கள். இலங்கை மக்களைப் பார்க்கின்றபோது எப்படி பேசுகிறார்கள் என்பதை மட்டும் பார்க்காமல் யார் பேசுகிறார்கள் என்பதையும் சேர்த்துப் பார்க்கக்கூடிய நிலையை கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி : கலை இலக்கிய துறையில் தங்களின் எதிர்கால பணிகள் என்ன?

பதில்  : என்னுடைய பணிகள் ஆக்கப்பணிகளாகத்தான் இருக்க வேண்டும். இலக்கியப் பணியை இன்றும் செழுமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் நான் நிறையக் கற்க வேண்டும். நிறைய எழுத வேண்டும்.நான் கற்பதையும் நான் எழுதியிருக்கின்றதையும் மக்கள் வரைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். நபிகள் நாயகம் சொன்னது போல கற்பவனாக இரு கற்பிப்பவனாக இரு கற்பதற்கு உதவி செய்பவனாக இரு என்பதுதான், இதன் ஒட்டு மொத்தமான முடிவு என்பது மனித நேயம்தான். அதற்கான பிரயாணத்தில்தான் நான் ஈடுபட்டுள்ளேன்.

கேள்வி : கம்பன் விழா 2008 பற்றியும் கம்பனில் உள்ள ஈடுபாடு என்ன என்பது பற்றியும் சொல்லுங்கள்?

பதில் : பாரதி என்னை சிந்திக்க தூண்டினான். கம்பன் என்னை பேசத்தூண்டினான். கம்பன் கழகத்தின் மூலம்தான் நான் பேசவே ஆரம்பித்தேன். இக்கழகம் மூலம்தான் நான் வளர்ந்தேன். என்னை எனக்கே அடையாளப்படுத்தி உலகத்தினுடைய ஜன்னல்களை எனக்குத் திறந்து கொடுத்த ஒருவாய்ப்பு கம்பன் கழகத்திற்கு உண்டு. அதனுடைய தலைவராக இருந்த மு.முஇஸ்மாயில் செயலாளர் பழபழனியப்பன் அவர்களும் செய்த இந்த விடயம் மிக முக்கியமான விடயம். அதன்பின் இலக்கிய சுடர் இராமலிங்கம் கம்பன் கழகத்தில் என்னை துணைச் செயலாளராக அறிமுகம் செய்தது இன்னொரு படிநிலையில் நான் உயர்ந்ததற்கு ஒரு விடயமாக இருந்தது. 2008 கம்பன் விழாவைப் பற்றி சொல்வதற்கு மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன். காரணம் போர்க்காலச் சூழல் உள்ள நிலையில் அதையும் கடந்த நன்மைகள் நாட்டில் நடக்க வேண்டும் என்ற ஆசையோடு மிகப்பெரிய தொலைநோக்கோடு இந்த விழா நடந்து முடிந்துள்ளது. இலக்கியம் பேசப்பட்ட ஒரு மேடையில் அதை நடத்திக்கொண்டிருக்கக்கூடிய நீதியரசர் விக்னேஸ்வரன், தலைவர் ஈஸ்வரன், எல்லாவற்றிற்கும் சூத்திரதாரியாக இருந்து தன்னுடைய வாழ்க்கையே கழகத்திற்காக தியாகம் செய்து மக்கள் நல்வாழ்விற்காக வாழ்ந்து கொண்டிருக்கும் கம்பவாரிதி ஜெயராஜ் ஆகியோருக்கு நாங்கள் தமிழர்களாக நின்று நன்றி செலுத்துகிறோம். பாராட்டுவதற்கும் வாழ்த்துவதற்கும் எமக்கு எந்தத் தகுதியும் கிடையாது.

கேள்வி : கம்பனைப்பற்றி விரிவாக மேடைகளில் பேசிய மறைந்த நீதிபதி இஸ்மாயில் பற்றியும் அவரின் வாரிசாக நீங்கள் செயற்படுவீர்களாக என்பது பற்றியும் குறிப்பிடுங்கள்?

பதில் : நீதிபதி இஸ்மாயில் பற்றி நினைக்கின்றபோது வாழ்நாட்களை கழித்து இருந்து விட்டு போனவர் அல்ல. அவர் வாழ்ந்துவிட்டு போனதற்கான அடையாளமாக இந்த இலக்கியத்தைவிட்டு விட்டுச் சென்றுள்ளார். நான் சந்தித்த மிகப்பெரும் சவால்களை தகர்த்து எனக்கு பாதை போட்டுத் தந்துள்ளார். இஸ்மாயிலின் வாரிசு நான் என அறிவித்துக் கொள்வது மிகப்பெரிய அகங்காரமாக இருக்கும். அப்படி ஒரு அகங்கார செயலில் நான் ஈடுபட்டால் அவர் எனக்கு சொல்லிக் கொடுத்த விடயங்களுக்கும் அவர் கொடுத்த வாய்ப்புகளுக்கும் நன்றி செலுத்தியவர்களாக இருக்கமாட்டோம். அவர் காலத்தில் அவர் பணியை எவ்வளவு செம்மையாக செய்தாரோ அதேபோல செம்மையாக செய்வதற்கு மற்றவர்களும் இருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து நானும் வேலை செய்து கொண்டிருக்கிறேன். என்னை விட மிகப்பெரியவர்கள் இந்த சமூகத்தில் இருக்கிறார்கள். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை எடுத்துக் கொண்டால் கம்பராமாயணம் பேசுவதற்காக வரக்கூடிய நிலையில் இன்றைக்கு கவிக்கோ அப்துல் ரகுமான், பேராசிரியர் அப்துல் காதர், பேராசிரியர் அப்துல் சமது மற்றும் பெண்பாலாரில் நானும் பேசுகிறேன். முஸ்லிம் சமூகத்தில் இருந்து பேச்சாளர்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். நேரடியாக இஸ்மாயிலுடன் தொடர்பு கொண்டு அவர் தலைவராக இருக்கின்ற போது அவர் கையால் பரிசு பெற்றதும், அவர் கையால் பாராட்டு பெற்றதும், அவர் நாவினால் என் பெயர் உச்சரிக்கப்பட்டு இந்த குழந்தை நன்றாக வரவேண்டும் என்று வாழ்த்துப் பெற்றதும் என்னுடைய மிகப்பெரிய பேறு ஆகும்.

கேள்வி : இன்றைய நவீன வாழ்வில் கம்பனின் சிந்தனைகள் எவ்வளவு பொருத்தமானது?

பதில் : கம்பன் என்பவன் மானிட நேயத்திற்கு செய்தி சொன்ன ஒரு மகாகவி. எனவே, கம்பராமாயணம் ஒரு மதத்திற்கு உரிய நூல் அல்ல. அது இலக்கியச் செழுமை கொண்ட நீதிகளை சொல்லக்கூடிய நூல். அதனால்தான் கண்ணதாசன் சொன்னான்

“காலம் என்னும் மழையிலும்
காற்று மழை ஊழியிலும்
சாகாது கம்பனவன் பாட்டு
அவன் தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு”

என்று சொன்னான். உடன்பாட்டு முறையிலான பிரச்சினைகள் வாழ்க்கையில் வரும்போது சிறந்த முடிவை எடுப்பதற்கு கம்பராமாயணம் மிகப்பெரிய துணையாகும்.

கேள்வி : தமிழ் நாட்டில் பழைய இலக்கியங்களை படிப்பதில் புதிய சந்ததியினருக்கிடையில் உள்ள ஈடுபாடு ஆர்வம் எப்படி?

பதில் : தமிழ் நாடு அரசாங்கத்திடம் உள்ள 41 பழந்தமிழ் நூல்களை வெளியிடுவதற்காக செம்மொழி இயக்கம் தற்பொழுது முயற்சித்து வருகிறது. தமிழுக்கும் செம்மொழிக்கும் பர்வின் சுல்தானா என்ன செய்கிறேன் என்று சொன்னால், நான் பார்க்கர் என்ற தமிழியல் ஆய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறேன் ((Parkar). இதில் நானும் என்னுடைய கணவரும் சேர்ந்து மு.அ. அருணாச்சலம் அவர்களுடன் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரைக்கும் நூற்றாண்டு வõரியாக தமிழ் இலக்கிய வரலாற்றை பதிவு செய்திருக்கிறோம். அது 6000 பக்கங்கள் கொண்ட மிகப்பெரிய பணியாகும். இன்னொரு விடயம் என்னவென்றால் வாசிப்புப் பழக்கம் என்பது குறைந்து வருகிறது. தொழில் நுட்பம் வளர்ந்துள்ள காரணத்தால் குறும் தகடுகளில் (CD) பழம் தமிழ் இலக்கியத்தின் மூல பனுவல்களை முழுக்க என்னுடைய குரலில் நான் பதிவு செய்கிறேன். அது ஒரு 60 சிடிக்களாக வருகின்றது. உதாரணத்திற்கு நெடுல்வாடை நூல் 14 நிமிடத்தில் சிடியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை காதில்போட்டு பத்து நாட்கள் திரும்பத்திரும்ப கேட்கும்போது அதுமனதில் பதிவாகிவிடும். அதனால் தொழில் நுட்பத்தில் தமிழ் இலக்கியத்தை கொண்டுவரக்கூடிய பணியை செய்கிறேன். 28 நூல்களுக்கான பணிகள் முடிவடைந்து விட்டன.

நன்றி : கலைகேசரி – சங்கமம் பேட்டி

Permalink 1 Comment