கவிஞர் தா. காசீம்

11/02/2009 at 9:46 pm (கவிஞர் தா. காசீம்)

 

நாகூர் ஹனீபா அவர்களின் பழைய பாடல்களைக் கேட்டிருப்போர் கவிஞர் தா.காசிம் அவர்களின் வரிகளைக் கேட்டிருப்பார்கள். இளையராஜாவின் திரையுலக வெற்றிக்குப் பிறகு நாகூர் ஹனீபா பாடிய கச்சேரிகளில் ‘இளையராஜா
மெட்டமைத்துத் தந்த பாடல்’ என்னும் அறிவிப்போடு பாடபட்ட பாடல், 

‘தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு! கொஞ்சம் நில்லு! – எங்கள்
திருநபியிடம் போய்ச் சொல்லு சலாம் சொல்லு’

இந்தப் பாடலை இயற்றியவர் கவிஞர் தா.காசிம்.

‘தீன்குலக் கண்ணு! – எங்கள்
திருமறைப் பொண்ணு!
மாண்புகளைக் காத்து நிற்கும்
மஹ்ஷரின் கண்ணு’

இதை இயற்றியவரும் தா.காசிம்.

மடலாற்குழுமங்களில் அறிமுகமான நல்லோர்களால் யாப்பிலக்கணத்தின் அடிப்படைகளை அறிந்துகொண்ட பின், மரபுக் கவிதைகளை வாசிக்கையில் அவற்றின் எதுகை, மோனை, அசை, சீர், ஓசைநயம் இவைகளை, ரசிகன் என்னும் நிலையத் தாண்டி மாணவன் என்னும் நிலையில் இருந்து அணுகிப்பார்த்த நாள்களில் தா.காசிமின் ‘உதயங்கள் மேற்கே’ என்னும் நூல் படிக்கக்கிடைத்தது.

சிறுவயது முதலே கேட்டு வளர்ந்த ‘தாயிஃப் நகரத்து வீதியிலே’ பாடலும், ‘தீன்குலக் கண்ணு’ பாடலும் நூலின் துவக்கத்திலேயே இருக்க, கவிஞரின் வரிகளுடன் ஏற்கெனவே உண்டாகியிருக்கும் தொடர்பு, அவரது விருத்தங்களைப்
படிப்பதில் கூடுதல் ஆர்வத்தை உண்டாக்கியது. முந்தைய பதிவில் குறிப்பிட்டதுபோல், ஆர்வம் இருக்கும் துறையில் வாசிப்பு அதிகமாகியது.  அங்கே வண்டிகள்; இங்கே விருத்தங்கள்.

‘பெருநாளின் பிறைவிடு தூது!’, திரவியம் தேடும் பாதையில் மனைவியைப் பிரிந்திருக்கும் நண்பர்களுள் எத்தனை பேர் இதனை வாசித்திருப்பார்களென அறியேன். ரசனையும், தனிமையும் இந்த விருத்தத்தின் சுவையை இன்னமும் அதிகமாக்கூடும்.

நவீன கவிதைகளின் ரசிகர்கள் இவற்றையெல்லாம் தாண்டி வெகுதூரம் கவிதை வந்துவிட்டதே இன்னுமென்ன பழைய விருத்தங்களில் ஆழ்வது என எண்ணலாம். அதுவும் ஒருகோணம். நட்சத்திர வாரம் எனக்குத் தரப்பட்டிருப்பதால் வழமையைவிடவும் அதிகமான நண்பர்கள் இடுகையினைப் படிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனை ஒரு வாய்ப்பாக
எண்ணி, என்னைக் கவர்ந்த எண்சீரை அதிகமான வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ள நினைத்ததன் விளைவுதான் இந்த இடுகை.

பெருநாளின் பிறைவிடு தூது!

மேற்றிசையின் வானத்து வெள்ளிக் கீற்றாய்
. மின்னுகின்ற பெருநாளின் பிறையே வந்தாய்!
ஏற்றுதற்கும் போற்றுதற்கும் இனிய நாளை
. எழில்செய்ய இளம்பிறையே தோன்றிவிட்டாய்!
நோற்றுவந்த பெருநோன்பை முற்ற வைத்தாய்;
. நோன்புக்குப் பெருநாளோ நாளை என்றாய்!
சாற்றுகிறேன் என்நெஞ்சக் கிடக்கை யெல்லாம்
. சந்தித்தே என்னவரில் சொல்லு வாயே!

அரும்பள்ளிக் குழல்பின்னி முடிக்க வில்லை
. அழகுமுகம் கண்ணாடி பார்க்க வில்லை
குறும்பாகச் செவ்விதழ்கள் விண்ட தில்லை
. குமுதவிழி அஞ்சனத்தைக் கொண்டதில்லை
கரும்பான மொழிபேசக் கேட்ட தில்லை
. கண்ணென்றும் மணியென்றும் சொன்ன தெண்ணி
துரும்பான என்னுடலம் இருப்பதெல்லாம்
. தூரதேசம் சென்றவரின் வருகைக் கன்றோ!

நல்லுணவை என்கையால் படைத்து வைப்பேன்
. நறும்நெய்யை ஊற்றியதில் தோய வைப்பேன்
அள்ளியள்ளி அவருண்ணப் பார்த்தி ருப்பேன்
. அவருண்டு மீந்ததைநான் அமுதம் என்றே
உள்ளினிக்க நாவினிக்க உண்டி ருப்பேன்
. உடனவர்க்கு வெற்றிலையும் மடித்த ளிப்பேன்!
அள்ளியுண்ண அவரில்லை மீதம் இல்லை
. அறிந்திருந்தும் மறந்தாரே பேதை என்னை!

நித்தமிங்கே உம்முருவை மனதில் தாங்கி
. நெஞ்சத்தின் சுமையாலே வதங்கு கின்றாள்!
கொத்து மல்லிச் சரமள்ளிக் குழலிற் சூடி
. குமுதமலர் முகம்காட்ட ஏங்கு கின்றாள்!
இத்தரையில் உமையல்லால் ஏது மில்லை
. என்றிருக்கும் ஏந்திழையைக் காண்பாய் என்றே
வித்தகரைக் கண்டுரைக்க மாட்டா யாநீ
. விண்ணேற்ற முதற்பிறையே என்ற னுக்காய்!
(கவிதையின் நீளம் கருதி இடையிலிருந்த எட்டு அடிகளைத் தட்டச்சவில்லை)
ஆசாத் – ‘பண்புடன்’ குழுமத்தில்

Permalink 2 Comments

கவி கா.மு.ஷெரீப்

11/02/2009 at 7:59 pm (கவி கா.மு.ஷெரீப்)

கவி கா.மு. ஷெரீப்

ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே…!”

இந்தத் திரைப்பாடல் இன்னும் எத்தனை நூற்றாண்டு கடந்தாலும் நம் சிந்தையில் சந்தனம் பூசும்! இந்தச் சங்கீத வரிகளுக்குச் சொந்தக்காரர் கவி கா.மு. ஷெரீப். அவர் பட்டெழுதிப் பேர் வாங்கிய புலவர் மட்டுமல்லர்; மகத்தான மனிதர். சுதந்திரப் போராட்டத் தியாகி. இவரும் என் தந்தையும் நண்பர்கள். நண்பனின் பிள்ளை என்பதால் என்னை அவர் அரவணைத்தார்.

நான் அகில இந்திய வானொலி நிலையத்தில் பணியாற்றியபோது அன்றாடம் அவரோடு அணுக்கமாயிருக்கும் பேறு பெற்றேன். அந்த அணுக்கம், மானுட வாழ்வின் மகத்தான பகுதிகளை என் மீது வெளிச்சம் போட்டு விளங்க வைத்தது. அவர் மதம் கடந்த மனிதர். ஆனால் மதக் கோட்பாடுகளை உள்ளுக்குள் வாங்கி, அதன் நடைமுறை வடிவமாய் நடந்து காட்டியவர்.

புத்தகத்தில் பேசப்படும் தத்துவங்களை அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பதென்பது சாத்தியமேயில்லை என்பார்கள் சராசரிகள். அது, சாத்தியம் தான் என்பதற்கான கண்கண்ட சாட்சியம் தான் கவி கா.மு. ஷெரீப் போன்ற கருணாமூர்த்திகள்.

“இஸ்லாம்’ என்னும் தத்துவ உலைக்களத்தில் பழுக்கக் காய்ச்சி எடுக்கப்பட்ட பட்டறை இரும்பு அந்தப் பட்டுப் புலவர். நபிகள் நாயகத்தின் வாழ்வைப் பயின்றால் -அவரது தோழர்கள் சொல்லும் ஹதீஸ்களைச் சற்றே செவிமடுத்தால் -திருமறையாம் குர்ஆன் கூறும் விழுமங்களை விளங்கிக் கொண்டால் -நம் சித்தத்தில் மொத்தமாய் என்ன தோன்றுமோ அதுவே தனது வாழ்வென வடித்துக் கொண்டவர் அவர்.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரத்தின் மனச்சாட்சியின் காவலராய் இருந்தவர். பட அதிபர் எம்.ஏ. வேணுவின் இதயத்தில் கொலுவிருந்தவர். இத்தனை வாய்ப்புகள் வைத்துக் கோடிக்கு அதிபதியாய்க் கோபுரத்தில் உட்கார்ந்திருக்க முடியும். ஆனால், கடைசி வரை வாடகை வீட்டில் குடியிருந்தார். “உங்களுக்குத்தான் முதலமைச்சர் மிகவும் வேண்டியவராயிற்றே… ஒரு வீடு கேளுங்களேன்…!’ என்றனர் நண்பர்கள். “நான் வல்ல இறைவனையன்றி வேறு எவரிடமும் கையேந்த மாட்டேன்!” என்றார் அவர்.

சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானத்தின் ஐம்பதாவது பொன்விழா. விழாவில் அவருக்கு ஐம்பது பவுன் பரிசளிப்பதென்று நண்பர்கள் கூடி முடிவு செய்தனர். விழாக் குழுவின் முன்னோடியாய் நின்று உழைத்தார் ஷெரீப். விழா நெருங்குகிற நாள் வரை பாதி அளவுக்கு மேல் பவுன் தேறவில்லை. பார்த்தார் ஷெரீப்; “சொன்னது சொன்னபடி சொர்ணத்தைக் கொடுத்துவிட வேண்டும்’ என்று உறுதி பூண்டார். தன் வாழ்க்கைத் துணைவியின் மேனியில் மின்னிக்கிடந்த பொன்னகைகளைக் கழற்றி எடுத்துப் பாதியளவோடு, மீதியளவையும் சேர்த்து, ஊருக்கும், உலகுக்கும் தெரியாமல் உவந்தளித்தார் அந்த உத்தமர். பின்னர் அந்தத் தொகைதான் கார் நிதியாக மாற்றி, சிலம்புச் செல்வர் பயணம் போகும் “பியட்’ காராகப் பரிசளிக்கப்பட்டது.

“அல்லாஹ்வின் தூதர் ஓர் அழகிய முன் மாதிரி’ என்று திருவசனம் தெரிவிக்கிறது. அந்த முன் மாதிரியைப் பின்பற்றிய இவரும் ஒரு முன்மாதிரிதான். “வலக்கையில் சூரியனையும், இடக்கையில் சந்திரனையும் தந்தாலும் நாம் நமது கொள்கையை விடப்போவதில்லை’ என்னும் நாயகத்தின் வார்த்தைகளுக்கு இவரும் ஒரு வாழும் இலக்கணம்.

இளமையின் கோளாறால், வழிதவறிப் போய் கருவுற்றுக் கலங்கினாள் மணமாகாத ஓர் இந்துப் பெண்; காதலன் கைவிட்டுவிட்டான். பெண்ணின் தகப்பனார் கவிஞரின் நேசத்துக்குரிய நண்பர். இவரிடம் வந்து சொல்லி நொந்தழுதார். “குடும்ப மானம் கப்பலேறிவிடும்!’ என்று குமைந்தார். என்ன செய்தார் தெரியுமா ஷெரீப்?

“உண்டான உயிரை அழிப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. கருவைக் கலைப்பதை எங்கள் மார்க்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், உருவான அந்தக் கருவைக் காக்கும் பொறுப்பைக் கடவுள் கடமையாக்கியிருக்கிறான். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்…” என்று சொல்லி, தன் மனைவியையும், கருவுற்ற அந்தப் பெண்ணையும் லெட்சுமாங்குடிக்குப் பக்கத்திலிருக்கும் “வேலுகுடி’ என்னும் தன் சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்தார். குழந்தை பிறந்ததும், பெண்ணைச் சத்தமின்றி தகப்பன் வீட்டிற்கு அனுப்பிவைத்தார். அந்தக் குழந்தையைத் தன் மனைவி ஈன்ற மகவாகக் கூறி, வளர்த்து ஆளாக்கினார்.

இலக்கியத்தில் – காவியத்தில்கூட காணக் கிடைக்காத ஈடற்ற தியாகம் இது. ஆம்! இந்துக் குழந்தை, இஸ்லாமியத் தாயின் பாலருத்தி வளர்ந்தது…! இந்த இடத்தில் முத்துராமலிங்கத் தேவர் முஸ்லிம் தாயின் பாலருந்தி வளர்ந்ததை நம் நெஞ்சில் பதிப்பது நல்லது; தமிழகத்தின் தனிப் பெரும் மரபு இது. அதுதான் மதம் கடந்த மனிதநேயம்!

தான் பெற்ற பிள்ளைக்கு அரசாங்கப் பதவி கேட்கச் சொன்ன உறவினர்களுக்கு நமது கவிஞர் தந்த பதில், புன்முறுவல்தான். எம்.ஜி.ஆர். தன் மனத்தில் வைத்துப் போற்றிய மகத்தான மனிதர் இவர். அவர் முதல்வரானதும் தன் தூதுவர்களை அனுப்பி, எத்தனையோ முறை தன் இல்லத்திற்கு அழைத்தார். நான், “ராமாவரம் போகாவரம் வாங்கி வந்திருக்கிறேன்…!’ என்றார் இவர். ஆம்! துறவிக்கு வேந்தனும் துரும்பு.

எல்லா மதங்களும், மார்க்கங்களும் இந்த நெறியையும் நேர்மையையுமே வலியுறுத்துகின்றன. மதங்கள் வேறாகலாம்; மகான்கள் பொதுவானவர்கள். இந்த உண்மையை நாம் உணர்ந்து கொள்ள காலம் நமக்குக் கருணை காட்டட்டும்.

– வீரபாண்டியன்

veera-pandiyanநன்றி : தினமணி – ஈகைப் பெருநாள் மலர்

Permalink Leave a Comment

பர்வீன் சுல்தானா பேட்டி

09/02/2009 at 8:47 pm (பர்வீன் சுல்தானா)

parvin-sultana
  
சென்னை நீதிபதி பஷீர் அகமது சயீது மகளிர் கல்லூரியில் கடந்த 9 ஆண்டுகளாக தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பணியாற்றிவரும் முனைவர் இ.சா. பர்வீன் சுல்தானா கொழும்பு கம்பன் விழா மேடைகளில் பட்டிமன்றம், சுழலும் சொற்போர், வழக்காடு மன்றம் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு கம்பன் புகழ்பாடி தன் தமிழ் ஆற்றலை வெளிக்காட்டினார்.

ஒவ்வொரு மேடையிலும் சமூக விழிப்புணர்வுடன் கூடிய இலக்கிய உரைகளை ஆற்றிவரும் இவர், தனது கணவர் நடத்திவரும் தமிழியல் ஆய்வு நிறுவனத்திற்காக ஆய்வேடுகளை புத்தகமாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார். கம்பன் விழா நினைவுகளுடன் அவர் தாயகம் புறப்படவிருந்த வேளை சங்கமத்திற்காக அவரிடம் நாம் கேட்ட சில கேள்விகளையும், அதற்கு அவர் அளித்த பதில்களையும் இங்கு தருகின்றோம்.

கேள்வி : உங்களுடைய கலை இலக்கிய பணிகளில் பிரதானமானதாக எதைக் கருதுகிறீர்கள்?

பதில் : மக்களை சந்தித்தல், பிரயாணம் என்பதும் என்னுடைய கலை இலக்கிய பயணத்தில் மிக முக்கிய கூறாகக் கருதக்கூடியது. நாம் எவ்வளவு திறன் படைத்தவர்களாக இருந்தாலும், அந்த திறமையை சரியான முறையில் பயன்படுத்தல் முக்கியம். அந்தப் பயன்பாட்டுக்கு பிரயாணமும் மக்களினுடைய சந்திப்பும்தான் முக்கியமானது. அந்த மக்களை சந்திப்பதன் மூலமாக அவர்களினுடைய நிலையில் ஊடாடுவதன் மூலமாக நம்முடைய இலக்கிய பயணத்தை சிறந்த முறையில் கொண்டு செல்ல முடியும் என நான் கருதுகிறேன்.

கேள்வி : உங்களுடைய நூல் ஆக்கப்பணிகளை பற்றி குறிப்பிடுங்கள்?

பதில் : என்னுடைய முனைவர்பட்ட ஆய்வேடு சென்னை பல்கலைக்கழகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கலாநிதி என்ற பட்டம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு. அதில்நான் எடுத்துக் கொண்ட தலைப்பு இஸ்லாமிய இலக்கியங்கள் அதிலே படைப்போர் என்ற “போர் கதை பாடல்கள்” முனைவர் பட்ட ஆய்வேடு மிகவும் பாராட்டப்பட்ட ஆய்வேடு. அதில் உள்ள செய்திகளை நான்கு நூல்களாக வெளியிட்டுள்ளேன். பழந்தமிழ், இஸ்லாமிய இலக்கியச் சுவடிகளை தேடி பதிப்பிக்கக்கூடிய வாய்ப்பும் கிடைத்தது. தமிழக இஸ்லாமிய இனக்குழு மக்களிடையே இருக்கக்கூடிய வாழ்வியல் சடங்குகள் குறித்த நூல் ஒன்றையும் பல்கலைக்கழகத்திற்கு ஒரு டிப்ளோமா பட்டத்திற்காக சமர்ப்பித்துள்ளேன். இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதியாக அமெரிக்க அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று தலைமைத்துவ பயிற்சி ஒன்றில் கலந்து கொண்டு அந்த பயிற்சியின் அடிப்படையில் “தலைமை தாங்கவா” என்ற நூலினையும் வெளியிட்டுள்ளேன். “தங்க மங்கை” என்ற கட்டுரை பத்திரிகையில் தொடர் கட்டுரையாக வருகின்றது.

கேள்வி : இலங்கைக்கு பலமுறை வந்துள்ள நீங்கள் இலங்கைத் தமிழ் முஸ்லிம் மக்களின் இலக்கிய ஆர்வத்தை பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில் : நாகரீகத்தை தந்த இனக்குழுக்களில் இஸ்லாமியர் மிக முக்கியமானவர்கள் நாகரீகம் என்று சொன்னாலே கலை இலக்கிய ஆர்வம் இருப்பதாக பொருள். முழுமையான இலக்கிய வடிவம் பெற்ற எந்த ஒரு மொழியும் செம்மொழியாக வழங்கப்படும். அந்த மொழியை தாய்மொழியாக கொண்டுள்ள இலங்கை முஸ்லிம்கள் இலக்கியத்தரம், திறனாய்வு, படைப்பாக்கம் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறார்கள் என்பது என்னுடைய கணிப்பு. காரணம் காலங்காலமாக தமிழ் இலக்கியங்களைப் படைக்கக்கூடிய வாய்ப்பு, எல்லாத் தமிழ் மக்களுக்கும் கிடைத்தாலும் முக்கியமாக இஸ்லாமிய இனக்குழு மக்களிடையே இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமிழ் இலக்கியத்திற்கு தந்த பங்களிப்பு பாரமானது. நான் ஆய்வேட்டை செய்யும் போது பல இஸ்லாமிய இலக்கிய நூல்கள் இலங்கையில் முஸ்லிம்களால் பதிப்பிக்கப்பட்டுள்ளதை அறிந்து கொண்டேன். அதுவும் 19ஆம் நூற்றாண்டு இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டு முதற் பகுதியிலும் பல நூல்கள் கிடைக்கின்றன “ஆய்வு களத்தில் ஐந்து படைப்போர்” என்கின்ற நூல் கிடைக்க முடியாத நிலையில் அதை இலங்கையில் இருந்து பெற்றோம். அதனுடைய அச்சுவேலையெல்லாம் இலங்கையில் நடைபெற்றுள்ளது என்பது தெளிவாகிறது.  1978ஆம் ஆண்டு சரிபுத்தீன் என்கின்ற கவிஞர் சூறாவளி என்ற நூலை இயற்றியுள்ளார். அதுதான் படைப்போர் இலக்கியத்தில் நமக்கு கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த நூலாகும். மார்க்கங்களை கடந்து முஸ்லிம்கள் இலக்கியம், தமிழ் என்றாலே முழுமையான ஆர்வம் காட்டி அதிலே தம்மை மிகச்சிறப்பாக நிலை நிறுத்தியுள்ளார்கள்.இதில் மகிழ்ச்சி தரும் விடயம் நான் சார்ந்துள்ள சமுதாயத்தில் இருந்து தமிழ் மீது ஆர்வம் கொண்ட இவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான். அத்தோடு வேறு மார்க்கத்தில் உள்ளவர்களுடைய இலக்கியங்களைப் பெற்று அதை வெளியில் வந்து பேசவும், எழுதவும், பதிப்பிக்கவும் கூடிய வாய்ப்பையும் பெற்றுள்ளார்கள் என்பது மனிதநேயத்தின் முக்கிய விடயமாக நான் கருதுகிறேன்.

கேள்வி : தமிழக மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் இடையில் இலக்கிய விடயத்தில் வேறுபாடு உண்டா? ஒற்றுமை உண்டா?

பதில் : எல்லாம் அந்தந்த மக்கள் வாழும் மண் சார்ந்த கலாசாரத்தில்தான் ஈடுபாடுகள் இருக்கின்றன. அந்த ஈடுபாட்டில் சில வேறுபாடுகளும் உண்டு. சில ஒற்றுமை கூறுகளும் உண்டு. வேறுபாடுகள் என்பது அவர்களுடைய புரிதல், அவர்கள் வாழக்கூடிய சூழல், வளர்ப்பு, கல்வி, ஆசிரியர்கள் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டது. தமிழகம் என்பது மிகப் பரந்த நிலப்பரப்பை கொண்டுள்ளது. அவற்றில் பல்வேறு கூறான கலாச்சார கலப்பு என்பது தவிர்க்க முடியாதது. எது சிறந்தது எது தாழ்ந்தது அல்ல பிரச்சினை அவரவர்கள் அந்தந்த நிலையில் தன்னால் எந்தளவிற்கு சிறப்பாக பணியாற்ற முடியுமோ அப்படி பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்.தமிழக மக்கள் மேடையில் பேசும் போது என்ன பேசுகிறார்கள் என்பதைத்தான் பார்க்கிறார்கள். இலங்கை மக்களைப் பார்க்கின்றபோது எப்படி பேசுகிறார்கள் என்பதை மட்டும் பார்க்காமல் யார் பேசுகிறார்கள் என்பதையும் சேர்த்துப் பார்க்கக்கூடிய நிலையை கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி : கலை இலக்கிய துறையில் தங்களின் எதிர்கால பணிகள் என்ன?

பதில்  : என்னுடைய பணிகள் ஆக்கப்பணிகளாகத்தான் இருக்க வேண்டும். இலக்கியப் பணியை இன்றும் செழுமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் நான் நிறையக் கற்க வேண்டும். நிறைய எழுத வேண்டும்.நான் கற்பதையும் நான் எழுதியிருக்கின்றதையும் மக்கள் வரைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். நபிகள் நாயகம் சொன்னது போல கற்பவனாக இரு கற்பிப்பவனாக இரு கற்பதற்கு உதவி செய்பவனாக இரு என்பதுதான், இதன் ஒட்டு மொத்தமான முடிவு என்பது மனித நேயம்தான். அதற்கான பிரயாணத்தில்தான் நான் ஈடுபட்டுள்ளேன்.

கேள்வி : கம்பன் விழா 2008 பற்றியும் கம்பனில் உள்ள ஈடுபாடு என்ன என்பது பற்றியும் சொல்லுங்கள்?

பதில் : பாரதி என்னை சிந்திக்க தூண்டினான். கம்பன் என்னை பேசத்தூண்டினான். கம்பன் கழகத்தின் மூலம்தான் நான் பேசவே ஆரம்பித்தேன். இக்கழகம் மூலம்தான் நான் வளர்ந்தேன். என்னை எனக்கே அடையாளப்படுத்தி உலகத்தினுடைய ஜன்னல்களை எனக்குத் திறந்து கொடுத்த ஒருவாய்ப்பு கம்பன் கழகத்திற்கு உண்டு. அதனுடைய தலைவராக இருந்த மு.முஇஸ்மாயில் செயலாளர் பழபழனியப்பன் அவர்களும் செய்த இந்த விடயம் மிக முக்கியமான விடயம். அதன்பின் இலக்கிய சுடர் இராமலிங்கம் கம்பன் கழகத்தில் என்னை துணைச் செயலாளராக அறிமுகம் செய்தது இன்னொரு படிநிலையில் நான் உயர்ந்ததற்கு ஒரு விடயமாக இருந்தது. 2008 கம்பன் விழாவைப் பற்றி சொல்வதற்கு மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன். காரணம் போர்க்காலச் சூழல் உள்ள நிலையில் அதையும் கடந்த நன்மைகள் நாட்டில் நடக்க வேண்டும் என்ற ஆசையோடு மிகப்பெரிய தொலைநோக்கோடு இந்த விழா நடந்து முடிந்துள்ளது. இலக்கியம் பேசப்பட்ட ஒரு மேடையில் அதை நடத்திக்கொண்டிருக்கக்கூடிய நீதியரசர் விக்னேஸ்வரன், தலைவர் ஈஸ்வரன், எல்லாவற்றிற்கும் சூத்திரதாரியாக இருந்து தன்னுடைய வாழ்க்கையே கழகத்திற்காக தியாகம் செய்து மக்கள் நல்வாழ்விற்காக வாழ்ந்து கொண்டிருக்கும் கம்பவாரிதி ஜெயராஜ் ஆகியோருக்கு நாங்கள் தமிழர்களாக நின்று நன்றி செலுத்துகிறோம். பாராட்டுவதற்கும் வாழ்த்துவதற்கும் எமக்கு எந்தத் தகுதியும் கிடையாது.

கேள்வி : கம்பனைப்பற்றி விரிவாக மேடைகளில் பேசிய மறைந்த நீதிபதி இஸ்மாயில் பற்றியும் அவரின் வாரிசாக நீங்கள் செயற்படுவீர்களாக என்பது பற்றியும் குறிப்பிடுங்கள்?

பதில் : நீதிபதி இஸ்மாயில் பற்றி நினைக்கின்றபோது வாழ்நாட்களை கழித்து இருந்து விட்டு போனவர் அல்ல. அவர் வாழ்ந்துவிட்டு போனதற்கான அடையாளமாக இந்த இலக்கியத்தைவிட்டு விட்டுச் சென்றுள்ளார். நான் சந்தித்த மிகப்பெரும் சவால்களை தகர்த்து எனக்கு பாதை போட்டுத் தந்துள்ளார். இஸ்மாயிலின் வாரிசு நான் என அறிவித்துக் கொள்வது மிகப்பெரிய அகங்காரமாக இருக்கும். அப்படி ஒரு அகங்கார செயலில் நான் ஈடுபட்டால் அவர் எனக்கு சொல்லிக் கொடுத்த விடயங்களுக்கும் அவர் கொடுத்த வாய்ப்புகளுக்கும் நன்றி செலுத்தியவர்களாக இருக்கமாட்டோம். அவர் காலத்தில் அவர் பணியை எவ்வளவு செம்மையாக செய்தாரோ அதேபோல செம்மையாக செய்வதற்கு மற்றவர்களும் இருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து நானும் வேலை செய்து கொண்டிருக்கிறேன். என்னை விட மிகப்பெரியவர்கள் இந்த சமூகத்தில் இருக்கிறார்கள். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை எடுத்துக் கொண்டால் கம்பராமாயணம் பேசுவதற்காக வரக்கூடிய நிலையில் இன்றைக்கு கவிக்கோ அப்துல் ரகுமான், பேராசிரியர் அப்துல் காதர், பேராசிரியர் அப்துல் சமது மற்றும் பெண்பாலாரில் நானும் பேசுகிறேன். முஸ்லிம் சமூகத்தில் இருந்து பேச்சாளர்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். நேரடியாக இஸ்மாயிலுடன் தொடர்பு கொண்டு அவர் தலைவராக இருக்கின்ற போது அவர் கையால் பரிசு பெற்றதும், அவர் கையால் பாராட்டு பெற்றதும், அவர் நாவினால் என் பெயர் உச்சரிக்கப்பட்டு இந்த குழந்தை நன்றாக வரவேண்டும் என்று வாழ்த்துப் பெற்றதும் என்னுடைய மிகப்பெரிய பேறு ஆகும்.

கேள்வி : இன்றைய நவீன வாழ்வில் கம்பனின் சிந்தனைகள் எவ்வளவு பொருத்தமானது?

பதில் : கம்பன் என்பவன் மானிட நேயத்திற்கு செய்தி சொன்ன ஒரு மகாகவி. எனவே, கம்பராமாயணம் ஒரு மதத்திற்கு உரிய நூல் அல்ல. அது இலக்கியச் செழுமை கொண்ட நீதிகளை சொல்லக்கூடிய நூல். அதனால்தான் கண்ணதாசன் சொன்னான்

“காலம் என்னும் மழையிலும்
காற்று மழை ஊழியிலும்
சாகாது கம்பனவன் பாட்டு
அவன் தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு”

என்று சொன்னான். உடன்பாட்டு முறையிலான பிரச்சினைகள் வாழ்க்கையில் வரும்போது சிறந்த முடிவை எடுப்பதற்கு கம்பராமாயணம் மிகப்பெரிய துணையாகும்.

கேள்வி : தமிழ் நாட்டில் பழைய இலக்கியங்களை படிப்பதில் புதிய சந்ததியினருக்கிடையில் உள்ள ஈடுபாடு ஆர்வம் எப்படி?

பதில் : தமிழ் நாடு அரசாங்கத்திடம் உள்ள 41 பழந்தமிழ் நூல்களை வெளியிடுவதற்காக செம்மொழி இயக்கம் தற்பொழுது முயற்சித்து வருகிறது. தமிழுக்கும் செம்மொழிக்கும் பர்வின் சுல்தானா என்ன செய்கிறேன் என்று சொன்னால், நான் பார்க்கர் என்ற தமிழியல் ஆய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறேன் ((Parkar). இதில் நானும் என்னுடைய கணவரும் சேர்ந்து மு.அ. அருணாச்சலம் அவர்களுடன் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரைக்கும் நூற்றாண்டு வõரியாக தமிழ் இலக்கிய வரலாற்றை பதிவு செய்திருக்கிறோம். அது 6000 பக்கங்கள் கொண்ட மிகப்பெரிய பணியாகும். இன்னொரு விடயம் என்னவென்றால் வாசிப்புப் பழக்கம் என்பது குறைந்து வருகிறது. தொழில் நுட்பம் வளர்ந்துள்ள காரணத்தால் குறும் தகடுகளில் (CD) பழம் தமிழ் இலக்கியத்தின் மூல பனுவல்களை முழுக்க என்னுடைய குரலில் நான் பதிவு செய்கிறேன். அது ஒரு 60 சிடிக்களாக வருகின்றது. உதாரணத்திற்கு நெடுல்வாடை நூல் 14 நிமிடத்தில் சிடியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை காதில்போட்டு பத்து நாட்கள் திரும்பத்திரும்ப கேட்கும்போது அதுமனதில் பதிவாகிவிடும். அதனால் தொழில் நுட்பத்தில் தமிழ் இலக்கியத்தை கொண்டுவரக்கூடிய பணியை செய்கிறேன். 28 நூல்களுக்கான பணிகள் முடிவடைந்து விட்டன.

நன்றி : கலைகேசரி – சங்கமம் பேட்டி

Permalink 1 Comment

குமரி அபூபக்கர்

07/02/2009 at 9:59 pm (இசைவாணர்கள், குமரி அபூபக்கர்)

kumari

குமரி மாவட்டத்தின் களியக்காவிளை பக்கத்தில் பூந்துறைக்கும் நம்பாறைக்கும் அருகில் உள்ள குக்கிராமம் காஞ்சன்புரம். வெறும் 10 முஸ்லிம் குடும்பங்களைக் கொண்ட கிராமம். அன்றைய மருத்துவத்தில் விஞ்சமுடியாத வல்லுநராக இருந்தவர் கண்ணுபிள்ளை வைத்தியர். அந்தக் குடும்பத்தில் ஒரு புலவர். வாப்புக்கண் ஆசான்.

செய்குதம்பி பாவலர், தியாகராய கீர்த்தனைகளைக் கொழும்பு போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று பாடியவர். சிறு வயதிலேயே பெருமானாருன் சீறா கீர்த்தனைகளைக் கேரள பாணியில் பாடியவர். வறுமை இவரது சொத்தாகி அதுவே இவரைக் காவு கொண்டபோது, “”வறுமையில்தானே வர்த்தனையாகும்!” -என்று கவி.கா.மு. ஷெரீபை மனம் நோக வைத்தது. இந்த விருட்சங்களின் வாரிசு மருமகன்தான் குமரு அபூபக்கர்.

இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் (ஐ.டி.பி.எல்) பணிபுருந்து ஓய்வு பெற்றவர். கவி.காமு. ஷெரீபுடன் ஒரு கால் நூற்றாண்டுக் காலம் கம்பம், பள்ளப்பட்டி, கூத்தாநல்லூர், கீழக்கரை போன்ற தமிழகத்தின் முஸ்லிம் கிராமங்கள் தோறும் இசை மழையைப் பொழிந்தவர். இசையை ஒரு தொழிலாகக் கொள்ளாமல் மக்கள் தருவதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வது இவரது தனிச்சிறப்பு.

இவரது வளர்ச்சிக்கு மூல காரணம் தைக்கா வாப்பா, ஏவிஎம் ஜாஃபர் தீன், நூர்தீன் காக்கா என்று இவர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார். சென்னை வானொலியில் 20 ஆண்டுகளாகப் பாடி வருபவர். காசிம் புலவரின் அருள்வாக்கு, திருப்புகழ் இவற்றைச் சரளமாகப் பிசிறில்லாமல், நிறுத்தாமல் பாடுவது இவரது பிரத்யேகமான சிறப்புக்கூறு.

காசிம் புலவர் திருப்புகழை… அருணகிரிநாதரின் பாடலைப் போல் மூச்சுப் பிடித்துப் பாடுவது வியப்பானது. தமிழ் இலக்கியங்களில் இடம் பெறும் புலவர்கள்தான் இவரது ஆராய்ச்சிக் களம். அவர்களைத் தேடிப் பிடித்து அவர்கள் பாடிய பாட்டுகளை மெட்டமைத்துப் பாடுகிறார். தற்போது இவரது ஆய்வில் சிக்கியுள்ளவர் புலிக்குட்டி புலவர். 65 வயதாகும் குமரி அபூபக்கரின் குரல் இன்னும் இளமை மாறாமல் இருக்கிறது. இவரது மகள்தான் தூர்தர்ஷனில் செய்தி வாசிக்கும் நஸீமா சிக்கந்தர். 2 பிள்ளைகளும் உண்டு.

இக்வான் அமீர்

நன்றி : தினமணி – ஈகைப் பெருநாள் மலர்

Permalink Leave a Comment

இசைமணி யூசுப்

07/02/2009 at 9:47 pm (இசைவாணர்கள்)

isaimani

சொந்த ஊர் நாகூர். தற்போது வசிப்பது சென்னை பல்லாவரத்தில். ஆரம்பத்தில் கேள்வி ஞானத்தால் இசையுலகில் நுழைந்தவர் இசைமணி யூசுஃப். காசியிலிருந்து வந்த பரம்பரையைச் சேர்ந்தவர்கள் உஸ்தாது டோலாக் நன்னுமியான், உஸ்தாது சோட்டு மியான், உஸ்தாது தாவுத் மியான் போன்றவர்கள். சங்கீதமே உயிர் மூச்செனக் கொண்ட குடும்பம் இது. அக்குடும்பத்தில் உதித்தவர்தான் மிராசுதார் எஸ்.எம்.ஏ. காதர்.

பெரும் வாணிகக் குடும்பத்தில் பிறந்தவராயினும் சங்கீதத்தை உயிருக்கு உயிராய் நேசிப்பவர். முஸ்லிம் குடும்பத்தில் தப்பிப் பிறந்த இசை ஞானி என்று பிராமணர்களால் பாராட்டப் பெற்றவர். நா௬ர் தர்காவின் ஆஸ்தான வித்வான். இவர்தான் இசைமணியின் ஆரம்ப ஆசிரியர் -குரு எல்லாம். கேரளாவின் வாஞ்சீஸ் அய்யர், இவரது ஆர்வத்தைக் கண்டு மும்மூர்த்திகளின் கீர்த்தனைகளோடு சுவாதித் திருநாள் கீர்த்தனைகளையும் கற்பித்தார்.

இத்தகைய இசையாளரால் அரங்கேற்றப்பட்டவர்தான் யூசுஃப். அதன் பின் முறையாக கர்நாடக இசை பயின்று இசை மணி பட்டம் பெற்றவர். 20 ஆண்டுகளாக இசைத் துறையில் தனக்கென்று ஒரு பாணியுடன் இருப்பவர்.

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று நூற்றுக்கணக்கான கச்சேரிகளைச் செய்திருப்பவர். சென்னையின் முக்கிய தர்காக்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளிலெல்லாம் இவரது குரல் ஒலிக்கும்.

தமிழறிஞரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவருமான காலஞ்சென்ற “சிராஜுல் மில்லத்’ அப்துஸ் ஸமதை தனது குரலால் உணர்ச்சிவயப்பட வைத்து கண்ணீர் சிந்த வைத்ததைத் தன்னைப் பெருதும் பாதித்த சம்பவமாகச் சொல்கிறார் இந்த 70 வயது இசைமணி.

இலங்கையைச் சேர்ந்த புரட்சி கமாலின் திருக்குர்ஆனைப் பற்றிய பாடல்தான் அது! “”சமத் சாஹெப் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் அவரது அலுவலகத்தில் வைத்து அந்தப் பாடலைப் பாடச் சொன்னார். “வையகத்தின் மணிவிளக்கே’ எனத் தொடங்கும் அப்பாடலை நான் பாடப் பாட தலைவர் உணர்ச்சிவயப்பட்டு அழ ஆரம்பித்தார்கள். இடையில் மக்ரூப் தொமுகை வந்தது.

தொமுகைக்காகப் பாடலின் இறுதி வரிகளைப் பாடாமல் நிறுத்திவிட்டேன். தொழுது முடித்து வந்ததும் தலைவர் மீண்டும் கவனமாக அந்த இறுதி அடிகளை எடுத்துக் கொடுத்துப் பாடச் சொன்னார்” என்று நினைவு ௬ர்கிறார் இசைமணி யூசுஃப்.

நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார், இசைமணி சீர்காழி கோவிந்தராசன் போன்ற பெரியவர்களால் பாராட்டுப் பெற்றதைப் பெருமையாகக் கருதுகிறார்.

இக்வான் அமீர்

நன்றி : தினமணி ஈகைப்பெருநாள் மலர்

Permalink Leave a Comment

இசைமுரசு நாகூர் ஹனீபா

07/02/2009 at 9:38 pm (இசைவாணர்கள்)

nagore-haniffa1
இஸ்லாமிய மார்க்க அறிஞர்களால் சர்ச்சைக்குரிய ஒன்றாகக் கருதப்படும் விஷயங்களில் இசையும் ஒன்று. இசை கூடுமா? கூடாதா? என்பது காலங்காலமாக இருந்துவரும் சர்ச்சை.

இந்த உலகமே இசையால் நிரம்பியதுதான்! காற்றின் வேகம் மூங்கிலில் பட்டு புல்லாங்குழல் இசையாகிறது. கடலலைகள் மண்ணில் மோதி ஓலமிட்டு இசைக்கின்றன. பூவில் தென்றல் மோதும்போது ஓர் இசை பிறக்கிறது. சூறைக் காற்று பிரளயமாய் உருவெடுக்கும்போது மற்றொரு இசை ஜனிக்கிறது. இப்படி உலகம் முமுவதுமே இசையால் ஆனதுதான். அதனால் இஸ்லாம் தடுக்க நினைக்கும் இசை, மனித குலத்துக்குக் கேடு விளைப்பது தானாக இருக்க வேண்டும். மனதைக் கிறங்கடித்து, ரத்த நாளங்கள் திணவெடுத்து, சுற்றுச்சூழலை அதிரவைத்து மனிதனின் அக-புற வாழ்க்கைக்குக் கேடுவிளைவிக்கும் இசைதான் உண்மையில் தடுக்கப்பட வேண்டியது.

இப்படி இசை கூடுமா… கூடாதா… என்ற சர்ச்சை மேலெமுந்து கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தில் துணிச்சலாக இசையைக் கையாண்டு ஓர் அரை நூற்றாண்டுக் காலம், தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் மூத்த முஸ்லிம் இசைவாணர்கள் நால்வருன் வேறுபட்ட முகங்கள் இவை.

எட்டுக் கட்டைக் குரலெடுத்து…

பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம். பிற்காலத்தில் குடியேறியது, கலை நகரமான நாகூர்! ஆரம்பத்தில் பாடியது புலவர் ஆபிதீனின் பாடல்களை. 40-களில், பிரபல லுங்கி வர்த்தகர் ஒருவரின் இல்லத் திருமணத்துக்குச் சென்றவர் மணமேடையைத் தனது பாடலால் ஈர்த்து தனக்கென்று அங்கீகாரம் பெற்றார்.

“”எட்டுக் கட்டைக்கு மேலாக ஒலிக்கும் இவரது குரல் கிட்டப்பாவைத் தோற்கடிக்கும். தனது குரல் முரசால் இசை முரசு என்ற பட்டம் பெற்றவர்!” என்று புகழ்ந்துரைக்கிறார் “”செளந்தர்ய முத்திரை” கவிராயர் மூஸா. மதங்களையும் தாண்டி “பரம்பொருள் ஒன்று! அவனிடமே சரணடையுங்கள்!’ என்று நம்பிக்கையாளர்களுக்கு தெம்பூட்டியவர். இத்தனை சிறப்புக்கும் உரியவர்தான் இசை முரசு நாகூர் ஹனீபா.

இவரது இசை முஸ்லிம்களையும் தாண்டி திராவிடப் பாசறையிலும் ஒலித்தது. “அழைக்கின்றார்… அழைக்கின்றார்… அண்ணா” என்ற இவரது பாடல் முழக்கம் கேட்டதும் அதுவரை மேடையருகே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் அண்ணா நேராக மேடையேறிவிடுவாராம்.

குன்றக்குடி அடிகளார், மதுரை ஆதீனகர்த்தர், சோமசுந்தர தம்பிரான் ஆகியோருன் மடங்களிலும் கூட இசை முரசுவின் பக்தி மணக்கும் பாடல்கள் ஒலிக்கும். “”இறைவனிடம் கையேந்துங்கள்! அவன் இல்லை என்று சொல்லுவதில்லை!” -என்ற பாடல் பல கோயில் திருவிழாக்களிலும், மார்கழி மாதங்களின் அதிகாலைப் பொமுதுகளிலும் பல கோயில்களில் ஒலிக்கும். இதற்கு பாடலாசிரியர் கிளியனூர் அப்துல் சலாம் (மயிலாடுதுறை) ஒரு காரணம் என்றால், அதற்கு உயிரூட்டிய ஹனீபாவும் மற்றொரு காரணம்.

நூற்றுக்கணக்கான இவரது பாடல்கள் இசைத்தட்டு வடிவம் பெற்றுள்ளன. முஸ்லிம்களின் திருமண நிகழ்ச்சிகள், மீலாது மேடைகள், தர்காக்களின் உரூஸ் நிகழ்ச்சிகள், முஸ்லிம் லீக் மாநாடுகள், பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சிகள், திராவிட முன்னேற்றக் கழக மாநாடுகள் நாகூர் ஹனீபாவின் இசை அருவி பொழியாமல் நிறைவு பெற்றதில்லை.

இக்வான் அமீர்

நன்றி : தினமணி – ஈகைப் பெருநாள் மலர்

Permalink Leave a Comment

முத்தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்கள்

07/02/2009 at 9:11 pm (முத்தமிழ் வளர்ச்சியில்)

‘தமிழுணர்ச்சியும் முஸ்லிம்களும்’ என்ற திராவிடத் தமிழர்களின் பதிவில் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் மற்றும் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோரின் தமிழ்பற்று மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டு பெரும்பாலான தமிழ் முஸ்லிம்கள், தமிழைப்  புறக்கணிக்கிறார்கள் என்ற தொனியில் கருத்துக்கள் இருந்தன.

அரேபியாவிலிருந்து சர்வ தேசங்களுக்கும் பரவிய இஸ்லாம் அதன் மூலமொழியாகிய அரபியை மட்டும் சார்ந்து வளரவில்லை.  உலகலாவிய மார்க்கத்தைப் பேணும் சமூகத்தவரை ஒரு மொழிக்குள் அடக்கிப் பார்ப்பதில் நியாயமில்லை. எனினும் தமிழ் மொழி பேசும் முஸ்லிம்கள் தமிழுக்காற்றிய பங்களிப்புகளை அறிந்து கொள்வது தமிழ் கூறும் நல்லுலகிற்கு அவசியமாகிறது.

இத்தொடரில் குறிப்பிடப்படும் முஸ்லிம் தமிழ் பண்டிதர்களும் புலவர்களும் சிலசமயம் இஸ்லாமிய அடிப்படை நெறிகளிலிருந்து விலகி தமிழூழியம் புரிந்துள்ளனர்.  அவர்களின் அனைத்து படைப்பிலக்கியங்களிலும் எமக்கு உடன்பாடு இல்லாவிடினும்,  தாய்த் தமிழுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளைக் குறிப்பிட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

கடந்த சில நூற்றாண்டுகள் வரையில் பேரறிஞர்களின் அறிவுத் தேடல்களுக்குத் தலைநகராய் விளங்கிய இராக், சிலுவைப் போர்களால் சின்னாபின்னப்பட்டபோது, பாக்தாத் நூலகங்களிலிருந்த அரிய புத்தகங்கள் தீயிலிட்டுச் சாம்பலாக்கி யூப்ரடிஸ்-டைக்கிரிஸ் நதிகளில் வீசப்பட்டதால் நதிநீர் கருப்பு நிறத்தில் ஓடியதாக வரலாற்றின் மூலம் அறிகிறோம்.

ஐரோப்பிய வரலாற்றின் இருண்டகாலங்கள் (Dark ages of Europe) என்று சொல்லப்படும் கி.பி . பத்து முதல் பதினான்காம் நூற்றாண்டுகளில் ஸ்பெயின் கல்வியில் சிறந்து விளங்கியது. வான் நட்சத்திரங்களுக்கு பெயரிட்டது முதல் விண்ணிலும் மண்ணிலும் அவர்கள் சாதனையாளர்களாகத் திகழ்வதற்கு இஸ்லாம் எந்தவகையிலும் தடையாக இருக்கவில்லை .

முஸ்லிம்களின் ஐம்பெருங் கடமைகளுக்கு அடுத்தபடியாகக் கல்வி கற்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் கடமையென்று வலியுறுத்திய மதம், உலகில் இஸ்லாத்தைத் தவிர ஏதேனும் உண்டா என்று தெரியவில்லை. இப்படி கல்வியோடும் நூல்களோடும் தொடர்புடைய முஸ்லிம்கள், தேனினுமினிய தமிழுக்குச் செய்ததை உலகமறியச் செய்திடும் ஒரு சிறு முயற்சியே இப்பதிவு .

இயல்-இசை-நாடகம் என்று முத்தமிழ் அறியப்படுகிறது. மதி மயங்கி, இறைவனை மறக்கச் செய்யும் இசையையும், இச்சையைத்தூண்டும் விதமாக ஆணும்- பெண்ணும் ஆபாசமாக ஆடிப்பாடுவதையும் இஸ்லாம் தடுக்கிறது. இந்த இரண்டிற்கும் வழிவகுக்கும் இசை-நாடகம் தவிர்த்து, தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு மிகக்குறைவு என்பது தமிழ் முஸ்லிம் இலக்கியங்களை அறியாதோரின் கூற்றாகும்.  விகிதாச்சார அடிப்படையில் வேண்டுமானால் ஓரளவு குறைவு என்பதை ஒப்புக் கொள்ளலாம்.

மேலும் இவ்விகிதாச்சாரம் குறைந்ததற்கு தமிழிலக்கியங்களை நாளடைவில் இந்து மயமாக்கியதும் ஒரு காரணம். உதாரணமாக கற்பின் மேன்மையை சொல்லும் சிலப்பதிகார நாயகி கண்ணகி தெய்வமாக்கப்பட்டுள்ளதைச் சொல்லலாம்.

கவிதைக்குப் பொய்யழகு என்பதில் ஓரளவு உண்மையுள்ளதால் பொய்யான வர்ணனைகளைச் சொல்லி அளவுக்கதிகமாக மனிதர்களையோ அல்லது படைப்பினங்களையோ புகழ்வதை இஸ்லாம் ஊக்குவிக்கவில்லை.

சங்கத் தமிழ் மன்னர்களின் அவையை அலங்கரித்தப் புலவர்கள் தகுதி இல்லாத மன்னர்களையும் பொய்யாக வர்ணித்துப் பொற்கிழி பெற்றுச் சென்றனர். ஒருவரை அளவுக்கு அதிகமாகப் புகழ்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பது தெரிந்திருந்தும் முஸ்லிம் இலக்கியவாதிகள் தாம் சார்ந்த நெறிக்கு அளிக்காத முக்கியத்துவத்தைத் தமிழுக்கு அளித்திருக்கின்றனர் என்றால் மிகையாகாது.

அந்தக் காலத்து உமறுப் புலவர் முதல் இந்தக் காலத்துக் ‘கவிக்கோ’ வரை தேடத்தேட முஸ்லிம் இலக்கியவாதிகள் வெளிவருகின்றனர். முத்தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு தொடரும்….

courtesy :http://athusari.blogspot.com/2006/07/1.html

Permalink Leave a Comment

சதாவதானி

07/02/2009 at 8:12 pm (சதாவதானி)

Pavalar
சதாவதானி செய்குத்தம்பி பாவலர் பற்றிய வலைப்பதிவு
கம்பீரமாக நிற்கிறார் அந்த மனிதர். சுற்றிலும் நூற்றுக் கணக்கான தமிழறிஞர்கள். அவரை நோக்கி கேள்விக் கணை கள் நீள்கின்றன. வந்து விழுகின்ற கேள்விகளுக்கு எல்லாம் சுளீர் பதில்கள் தெறிக்கின்றன அவரிடமிருந்து. தன்னிடம் கேள்வி கேட்ட 100 பேருக்கும் ஒரே மூச்சில் வரிசையாகப் பதில் சொல்லி அசத்த… கூடி நின்ற அறிஞர்கள் கூட்டம் ஆச்சர்யத்தில் திக்குமுக்காடுகிறது.

சங்கப் பாடலின் ஏதோ ஒரு வரியைச் சொன்னால் போதும், அதை முழுமையாகப் பாடி முடிப்பார். 1,000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏதாவது ஓர் ஆண்டு, மாதம், நாள் சொன்னால், அடுத்த நொடி கிழமையைச் சரியாகச் சொல்வார். அவர்தான் செய்குத் தம்பிப் பாவலர். அதிசயிக்கவைக்கும் சாதனைத் தமிழர். அவருக்குத் தபால் தலை வெளியிட்டுக் கௌரவித்திருக்கிறது மத்திய அரசு!

அடுத்தடுத்து பெரிய எண்களை வரிசையாகச் சொன்னால், அவற்றின் கூட்டுத் தொகை, பெருக்குத் தொகைகளை உடனே சொல்வது, நிகழ்ச்சியின் இடையே அவ்வப்போது கொடுக்கப்படும் நீரை ருசி பார்த்துவிட்டு, இறுதியில் அது எந்தப் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டது என்று சரியாகச் சொல்வது, நிகழ்ச்சியின் இடையில் தன் மீது வீசப்பட்ட நெல்மணிகள், பட்டாணிகள், கற்கள் எத்தனை என கணக்குச் சொல்வது என இவர் ஆச்சர்யங்களால் நிறைந்தவர்.

இப்படி எட்டு விஷயங்களை நினைவில் வைத்துச் சொல்வதற்கு அஷ்டாவதானி என்று பெயர். பத்து என்றால் தசாவதானி. இவர் இப்படி 100 விஷயங்களை நினைவில் வைத்து, ஒரே மூச்சில் திரும்பச் சொல்லக் கூடியவர் என்பதால் ‘சதாவதானி’.

செய்குத் தம்பிப் பாவலர் இந்தச் சாதனையை நிகழ்த்தி 100 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அதைப் போற்றும் விதமாக தமிழக அரசு இவர் எழுதிய நூல்களை நாட்டுடமை ஆக்கி உள்ளது. மத்திய அரசு தபால் தலை வெளியிட்டுப் பெருமை சேர்த்திருக்கிறது. சென்னையில் வசிக்கும் பாவலரின் மகள் பாத்திமா பீவியைச் சந்தித்தேன்.

”கன்னியாகுமரி மாவட்டம் கோட் டார் பக்கத்தில் உள்ள இடலாக்குடிதான் அப்பாவுக்குச் சொந்த ஊர். மலையாள வழியில் பள்ளிப் படிப்பைப் படிச்சாலும், அவருக்குத் தமிழ் மேலதான் காதல். வீட்டு வறுமைக்கு இடையில் திண்ணைப் பள்ளிக்கூடத்துல தமிழ் கத்துக்கிட் டார். 15 வயதிலேயே செய்யுள் எழுதும் அளவுக்கு தமிழில் புலமை. பிறகு மாதம் 60 ரூபாய் சம்பளத்துக்குப் பிழை திருத்தும் வேலை பார்த்துக் கிட்டே சீறாப் புராணத்துக்கு உரை எழுதினார். ‘யதார்த்தவாதி’, ‘இஸ்லாமிய மித்ரன்’னு ரெண்டு பத்திரிகைகளையும் நடத்தியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்துதான் தசாவதானம், சதாவதானம்னு பல சாதனைகளைச் செய்தார். சென்னை விக்டோரியா ஹாலில் தசாவதானம் செய்தபோது ‘தசாவதானி’ பட்டம் கொடுத்தாங்க. திரு கோட்டாற்று பதிற்றுப் பத்தந்தாதி, கோட்டாற்றுப் பிள்ளைத் தமிழ், அழகப்பக்கோவை, நாகைக் கோவை என ஏராளமான நூல்கள் எழுதியிருக்கிறார். விடுதலைப் போராட்டத்திலும் கலந்துக்கிட்டிருக்கார்.

அந்நிய நாட்டுத் துணிகள் எரிப்புப் போராட்டத்தில் அப்பா பேசும்போது, ‘ஒரு நல்ல மணமகன் கைத்தறி வேட்டிதான் அணிவான். பிணமகனுக்குத்தான் மில்துணி போர்த்துவாங்க. நீங்க மணமகனா, பிணமகனா?’ எனக் கேட்டதும், கூட்டத்தில் மில்துணி அணிந்திருந்தவர்கள் அதைக் கழற்றி எறிந்தார்களாம். ஜீவா, திரு.வி.க. மாதிரி முக்கியமான தலைவர்கள் அப்பாவின் பேச்சுக்கு ரசிகர்களா இருந்திருக்காங்க.

அப்பாவின் நினைவாக இடலாக்குடியில் மணிமண்டபம் கட்டின எம்.ஜி.ஆர்., அங்கே இருக்கும் பள்ளிக்கூடத்துக்கும் அப்பா பேரை வெச்சார். அதே போல கலைஞர், அப்பா எழுதின புத்தகங்களை நாட்டுடைமை ஆக்கியிருக்கார்.” பெருமிதப் புன்னகையுடன் பேசுகிறார் பாத்திமா.

பாவலரின் செய்யுள்களைப் பாடப் புத்த கங்களில் இடம்பெறச் செய்யவேண்டும், விக்டோரியா ஹாலுக்கு பாவலர் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் குடும்பத்து உறுப்பினர்கள், www.pavalar.blog.com என்ற வலைப்பூ மூலம் அவர் பற்றிய தகவல் களைத் தொகுத்து வருகிறார்கள்!

தகவல் : சலீம் இப்ராஹீம்

————————————————————

“ஓரும் அவதானம் ஒருநூறும் செய்திந்தப்
பாரில் புகழ்படைத்த பண்டிதன் – சீரிய
செந்தமிழ்ச் செல்வன் செய்குத் தம்பிப் பாவல!”

எனக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பாவலரின் பைந்தமிழ்த் திறன் பற்றிப் பாடினார்.

“வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் யானொருவன் அன்றோ!” என்ற இராமலிங்க அடிகளாரின் வாக்கிற்கு இணங்க குடும்பம், உறவு, சாதி, சமயம் கடந்த ஞானியர் பரம்பரையில் தோன்றிய பாவலர், நாஞ்சில் நாட்டின் இடலாக்குடி என்னும் ஊரில் பக்கீர் மீறான் ஆமீனா தம்பதியர்க்கு மூன்றாம் மகனாக 1874, ஜூலை 31-ல் பிறந்தார்.

“தொட்டனைத்தூறும் மணற்கேணி,” என்பதற்கொப்ப அவரின் உள்ளத்தில் தமிழுணர்வு ஊற்றெடுத்தது. சங்கரநாராயண அண்ணாவியார் என்பவரிடம் முறையாகத் தமிழ் பயின்ற பாவலர், இலக்கண-இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார். அந்நாளில் இராமலிங்க அடிகளாரின் அருட்பாவை ஒரு பிரிவினர் மருட்பா எனக் கூறிவந்தனர். இதனை அறிந்த பாவலர் அருட்பா சார்பில் வாதிடுவதற்கு முன் வந்தார். அதற்கான கூட்டம் சென்னையில் ஏற்பாடாயிற்று. அக்கூட்டத்தில் தொடக்கமாக,

“சாதிகுலம் சமயமெல்லாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித் தனித்ததிரு வமுதளித்த தணித் தலைமைப் பொருளே,
ஆதிநடு கடைகாட்டா அகண்ட பகிரண்ட ஆருயிர்கள் அகம்புறம் மற்றனைத்து நின்ற மொழியே,
ஓதியுணர்ந்தவரெல்லாம் எனைக் கேட்க எனைத்தான் ஓதாமலுணர்ந் துணர்வாம் உருவுறச் செய்யுறவே,
ஜோதிமயமாய் விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
தூயநடத் தரசேயென் சொல்லு மணிந்தருளே!”

இப்பாடலை முழங்கினார். கேட்ட அவையோர் இவருடைய சமய நல்லிணக்கப் பாங்கை உணர்ந்து கையொலி எழுப்பி மகிழ்ந்தனர். தொடர்ந்து பல அரங்குகளில் தமது வாதத் திறமையால் “அருட்பா அருட்பாவே” என்று நிறுவினார்.

மரபுப் பாவளம் மிக்க பாவலர் சிலேடை பாடுவதில் சிறப்பாகத் திகழ்ந்தார். தமிழறிஞர் ஒருவர் ஒருமுறை, அவரைச் சிலேடையாகக் கடவுள் வணக்கம் பாடும்படி வேண்டினார். அப்பொழுது,

“சிரமாறுடையான் செழுமா வடியைத்,
திரமா நினைவார் சிரமே பணிவார்,
பரமா தரவா பருகாருருகார்,
வரமா தவமே மலிவார் பொலிவார்.” என்னும் பாடலைப்பாடி,

சிரம் ஆறுடையான் – சிரத்தில் கங்கையாற்றை உடைய சிவபெருமான்,
சிரம்மாறு உடையான் – இயல்புக்கு மாறுபட்ட சிரத்தை உடைய கணபதி,
சிரம் ஆறுடையான் – ஆறுதலைகளை உடைய முருகன்,
சிரம் “ஆறு” உடையான் – திருவரங்கத்தில் தலைப்பாகம் காவிரியாறு ஓட பள்ளிகொண்ட திருமால்,
சிரம் ஆறு உடையான் – தலையாய நல்வழிகளை உலகிற்குக் காட்டும் அல்லாஹ்

என ஐம்பொருளைச் சிலேடையால் விளக்கினார். இக்கவிச் சுவையில் “ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டாமோ,” என்ற திருவாசகத் தேனையும், “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்ற திருமந்திரச் சத்தையும் பருகத் தந்த பாவலரின் நுட்பம் பாராட்டத்தக்கதன்றோ!

அவருடைய நினைவாற்றல் நினைந்து நினைந்து போற்றத்தக்கது. ஒருமுறை மதுரைச் தமிழ்ச் சங்க நிறுவனர் பாண்டித்துரை தேவர், தமிழ் விருந்துண்டு மகிழ கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
சைவ நூல் ஆய்வாளர் சுப்பிரமணிய ஐயர்,
இலக்கணப் பேராசிரியர் நாராயண ஐயங்கார்,
கந்தசாமிக் கவிராயர்
ஆகியோர் தமிழமுது பரிமாறிக் கொண்டிருந்தனர். அங்குப் பாவலரும் வருகை தந்து அமர்ந்தார்.

பாவலரின் நினைவுக் கலையின் பரிசோதனைக் களமாக அந்த அவை மாறியது. ஆய்வாளர் சுப்பிரமணிய ஐயர் ஏதேனும் புராண நூலில் ஏழுமுறை “நோக்க” என்ற சொல் வந்துள்ள பாடல் ஒன்றைக் கூறுங்கள் எனக் கேட்க, பாவலர்,

“கரத்தை நோக்குவர், வாளினை நோக்குவர்,
கடுப்பின் கருத்தை நோக்குவர், வீரத்தை நோக்குவர்,
எதிராத் தரத்தை நோக்குவர், அவையினில் அபுஜகில் – உடனே
உரைத்த வார்த்தையை நோக்குவர், நோக்குவர் உள்ளத்தை.”

என்ற சீறாப்புராணப் பாடலைப் பாடிக்காட்டினார்.

தமிழ் கூறும் நல்லுலகுக்கு அவர் தந்த இலக்கியச் செல்வங்கள் மரபுப் பாவளம் மலிந்தவை. “முன்னோர் மொழி பொருளேயன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றுவம்,” என்பதற்கு எடுத்துக்காட்டானவை.

நபிகள் நாயக மான்மிய மஞ்சரி,
கல்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை,
திருக்கோட்டாற்றுப் பதிற்றுப்பத்தந்தாதி,
திருநாகூர் திரிபந்தாதி,
நீதிவெண்பா,
சம்சுதாசீன் கோவை, மற்றும்
தனிப்பாடல் திரட்டு
முதலியவை அவர் தந்த நூல்களுள் குறிப்பிடத்தக்கவை.

பாவலர் சொல்லிலும் செயலிலும் நீதிவழுவா விழுமிய நோக்கம் கொண்டவர். அறிஞர் அவையிலும், மாணவர் மத்தியிலும் நீதிகளை உணர்த்தி வந்தார். அந்த நீதிகளே அவரிடம் வெண்பாக்களாக மலர்ந்தன.
அறியாமையை அகற்றுவது கல்வி;
அறிவை நன்நெறிக்குத் திருத்துவது கல்வி;
இறையருளைப் பெருக்கி ஆன்மிக இன்பத்தை அளிப்பது கல்வி,
அதனை,

“அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை யகற்றி மதிக்கும் தெருளை
அகற்றுவதும் ஆவிக்கருந்துணை யாயின்பம்,
பொருத்துவதும் கல்வியென்றே போற்று.”என்பதும்,

திருவள்ளுவர் கூறிய
கூடாஒழுக்கம்,
கூடாநட்பு,
சிற்றினம் சேராமை
என்ற சீரிய நன்நெறியை,

“கூடாரைக் கூடற்க, கூடிற் குறித்தவலாம்,
நாடாதெரிந் தேனும் நட்பொழிக -ஆடுமயில்
பச்சோந்தி பாற்படா பட்டால் மணிவிழிகள்
அச்சோ அழிந்தொழியு மால்.”

என்பதும் அவர் நீதிவெண்பாவில் குறிப்பிடத்தக்கன. அவர் எழுதிய “சீட்டுக் கவிகள்” இலக்கியத்தரம் வாய்ந்தவை. பாவலர் சென்னையில் தங்கி இருந்தபொழுது, கோட்டாற்றிலிருந்து தம் நண்பர் பாக்கியம் பண்டாரம் என்பவருக்கு விடுத்த சீட்டுக் கவியில்,

“ஆகஞ் சுகமா? அடுத்தவர்கள் சேமமா?
மேகம் வழங்கியதா? மேலுமிந்தப்-போகம்
விளையுமா? இன்னுமழை வேண்டுமா? செல்வம் விளையுமா? ஊர்செழிக்கு மா?”

என்று பாவலர் தமது பொதுநல விழைவை வெளிப்படுத்தியுள்ளார்.

மாணவர்கள் தம்போல் எப்போதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் ஆர்வமுள்ள பாவலர், தம் முன்னாள் மாணவர் ஒருவருக்கு எழுதிய சீட்டுக்கவி இது:

“கற்றுவரும் பெரும்தொழிலைக் கனவிடையும்
மறவாமல் கருத்தும் கொண்டு
முற்றுறவே ஆய்ந்துணர்ந்து முடித்த வந்நூல்
ஏது, இனிநீ முடிக்கப் போகும்
கொற்றமுறு நூலேது? மேல்விளங்கு
நூலென்ன? குணம தாக
வெற்றிதரும் இலக்கணங்கள் ஏதேனும்
பயின்றனையோ விள்ளு வாயே!”

இது அனைவரிடமும் படிப்பார்வத்தைத் தூண்டத்தக்கதாகும். பாட்டுகள்.

பலவற்றுள் முத்திரை பதித்த பாவலர் உரைநடைகள் பலவும் தந்துள்ளார்.

நபிகள் நாயக ஜீவிய சரித்திரம்,
சீறா நாடகம்,
தேவலோகத்துக் கிரிமினல் கேசு,
வேதாந்த விகார கிரிமினல் கேசு என்பன இவருடைய உரைநடை நூல்களாகும்.

தமிழ்த் தாயின் அருந்தவப் புதல்வர்களில் ஒருவராகிய செய்குத்தம்பிப் பாவலர் 1950 பிப்ரவரி 13ல் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். இவர் மறைவுச் செய்தி அறிந்து பண்டிதமணி கதிரேசச் செட்டியார் “நாஞ்சில் நாட்டின் பெரும்புலவரும், தமிழன்னையின் திருப்புதல்வரும் மறைந்தது கேட்டு துயருறுகிறேன்,” என்றார். இரசிகமணி டி.கே.சி. “பாவலருக்கு இருந்த நுண்ணிய அறிவும், அபூர்வப் புலமையும் இந்தத் தலைமுறையில் யாருக்கும் இருந்ததில்லை,” என்றார்.

நன்றி: தமிழ்மணி (தினமணி)

தகவல் : நா. கண்ணன் நடராஜன்

Pavalar Family

Permalink Leave a Comment

« Previous page